'ஈலோன் மஸ்கால் மிகவும் விரக்தி அடைந்துள்ளேன்' - டிரம்ப் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, 'ஈலோன் மஸ்கால் மிகவும் விரக்தி அடைந்துள்ளேன்' - டொனால்ட் டிரம்ப்
'ஈலோன் மஸ்கால் மிகவும் விரக்தி அடைந்துள்ளேன்' - டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் ஈலோன் மஸ்க் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் 'ஏமாற்றம்' அடைந்ததாக மஸ்க் அண்மையில் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த மோதல்கள் நிகழ்ந்தன.

இது குறித்து பேசிய டிரம்ப், "மிகவும் விரக்தி அடைந்துள்ளேன். இந்த மசோதாவின் உள்விவகாரங்கள் குறித்து மற்றவர்களை விட ஈலோன் மஸ்கிற்கு அனைத்தும் தெரியும். இதில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. திடீரென அவருக்கு பிரச்னை ஏற்பட்டது. மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை குறைக்க வேண்டி வரும்போது அவருக்கு பிரச்னை ஏற்பட்டது. ஏனெனில், இது பல பில்லியன் டாலர் தொடர்பானது. இது நியாயமற்றது. அனைத்து வகையான கார்களும் வேண்டும்.

மின்சார கார்கள், பெட்ரோல் கார்கள் மற்றும் ஹைபிரிட் கார்கள் என அனைத்து வகையான கார்களையும் நாம் விற்க வேண்டும். நாடாளுமன்றம் இதைக் குறைக்க விரும்பியதும் மஸ்கின் அணுகுமுறையும் மாறிவிட்டது. அது புரிகிறது. ஆனால் அவர் மசோதாவைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். மற்ற அனைவரை விட மசோதாவைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். அவர் வெளியேறும் வரை எந்த பிரச்னையும் இருந்ததில்லை." என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், "அவர் என்னைப் பற்றிக் கூறியதைப் பார்த்தால், அது எளிதாக உங்களுக்குப் புரியும். என்னைப் பற்றி மிக அழகான விஷயங்களைக் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சிக்கவும் இல்லை. அடுத்து அதுதான் நடக்கும். ஆனால், ஈலோனால் மிகவும் விரக்தி அடைந்துள்ளேன். ஈலோனுக்கு நிறைய உதவினேன்." என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு