டிரம்ப்-மோதி: நட்பின் முடிவும் புதிய சகாப்தத்தின் தொடக்கமும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் 2019இல், ஹூஸ்டனில் நடந்த 'ஹவுடி மோதி' நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒன்றாக கலந்துகொண்டனர்.
டிரம்பும் மோதியும் கைகோர்த்து, கட்டிப்பிடித்து, பொதுவான மதிப்புகள் மற்றும் உலகத் தலைமைத்துவம் குறித்து வலிமையான உரைகளை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சி, இந்தியா-அமெரிக்கா உறவின் உச்சக் கட்டமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது அது மறக்கப்பட்ட அத்தியாயமாகத் தெரிகிறது.
டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில், நட்பு மனநிலை மாறி, மோதல் சூழ்நிலையாக உருவெடுத்துள்ளது.
இரு நட்பு நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் இப்போது ஒரு வர்த்தகப் போரைச் சந்திக்கும் சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார். இது ஏற்கனவே கடுமையான நடவடிக்கையாக கருதப்பட்டது.
ஆனால் ஆகஸ்ட் 4 அன்று, டிரம்ப் இந்த வரியை 25% விட 'மிக அதிகமாக' உயர்த்தப் போகிறேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவது தான் இதற்குக் காரணம் என்று கூறிய அவர், இது யுக்ரேனில் நடக்கும் 'போருக்கு நிதி' அளிப்பதாகவும் கூறுகிறார்.
இந்தச் சூழலைக் கவனித்து வருபவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக, இந்தியா டிரம்பின் வரிகளை பொறுத்துக்கொள்ளாமல், கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தது.
மோதி அரசாங்கம் இதை "மேற்கத்திய நாடுகளின் பாசாங்கு" என்று அழைத்தது.
இந்தியச் சுத்திகரிப்பு நிலையங்கள் தேவையின் அடிப்படையில், சந்தையை சார்ந்து முடிவுகளை எடுத்து வரும் அதே வேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்கத்திய நாடுகள் இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் முதல் இயந்திரங்கள் மற்றும் உலோகங்கள் வரை பல்வேறு துறைகளில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருவதாக அரசாங்கம் வாதிட்டது.
செவ்வாயன்று அதிர்ச்சியளிக்கும் விதமாக இன்னொரு அறிவிப்பு வெளியானது. சிஎன்பிசியிடம் பேசிய அமெரிக்க அதிபர் , "அடுத்த 24 மணி நேரத்திற்குள்" வரிகளை அதிகரிக்கப் போவதாக அச்சுறுத்தினார்.
"இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இருந்ததில்லை. அவர்கள் எங்களுக்கு நிறைய ஏற்றுமதி செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் அந்த அளவுக்கு வர்த்தகம் செய்வதில்லை" என்று டிரம்ப் தெரிவித்தார்.
வரி விதிப்பது தொடர்பான டிரம்பின் அச்சுறுத்தல், இந்தியாவின் நிலைப்பாட்டை சோதிக்கும் ஒரு பெரிய சூதாட்டத்தைப் போன்றுள்ளது.
"நாடு அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என இந்திய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
ஒரு காலத்தில் மோதியுடன் அன்பாக கைகுலுக்கிய டிரம்ப், இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியது ஏன்? இந்த சூழ்நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த காணொளி...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



