காணொளி: நம்மை சுற்றி தெருநாய்களே இல்லாவிட்டால் என்ன ஆகும்?
டெல்லியில் தெருக்களில் இருந்து 8 வாரத்தில் அனைத்து தெருநாய்க்களையும் அகற்றி, தனி முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய முடிவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாய்களை ஓர் இடத்திலிருந்து அகற்றுவதால ஏற்படும் ''Vacuum Effect" காரணமாக பிரச்னை மேலும் சிக்கலாகும் என்கிறார் பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மனித - விலங்கு தொடர்பு குறித்த படிப்பான பொலிட்டிகல் ஈகாலஜி பேராசிரியர் கிருத்திகா.
"ஒரு தெருவில் இருந்து நாய்களை அகற்றினால், 6 மாதத்திற்குள் அங்கு வேறு ஒரு நாய் வந்துவிடும், இதுனால் நாய்களுக்குள்ளும், நாய்கள் மற்றும் மனிதர்கள் இடையேயும் மோதல் வரும்'' என்கிறார் கிருத்திகா.
ஆனால், ஐரோப்பாவில் நிறைய நாடுகளில் தெருநாய்கள் இல்லையே எனக் கேட்டபோது, ''பிரிட்டன் போன்ற நாடுகளில் தெருநாய்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாய் தொடர்பான பிரச்னைகள் தீரவில்லை. குப்பையாக வீசப்படும் உணவுகளை உண்ண நரிகள் வருகின்றன. இதனால் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது'' என அவர் சொல்கிறார்.
மேலும், ''பிடிக்கிறதோ இல்லையோ நாம் நாய்களுடன் வாழப் பழகிவிட்டோம். ஆனால் நரி, கழுகு போன்றவற்றுடன் எப்படி வாழ்வது என்பதை அறிவது மிகவும் கடினம்.'' என பேராசிரியர் கிருத்திகா தெரிவிக்கிறார்.
அதேபோல ''தெருநாய்கள் இயற்கையாகவே பூனை, எலிகளை வேட்டையாடும். உணவு போன்ற கழிவுகளை தின்று குப்பைகளைக் குறைக்கும். தெருநாய்கள் இல்லையெனில் எலிகள் பெருகி நோய் பரவும் அபாயம் ஏற்படும்'' என அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும் கால்நடை மருத்துவருமான ராமகிருஷ்ணன்.
ஆனால் உலகின் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் சொல்லும் நிலையில் இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
நாய்கள் பிரச்னைக்கு ஒற்றை தீர்வு என எதுவும் கிடையாது. நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, கடிபட்ட மனிதர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, நாய்களுக்குத் தேவையான உணவு, குப்பை கழிவு போன்றவை ஓர் இடத்தில் தேங்காமல் பாத்துக்கொண்டால் ஒரே இடத்தில் நிறைய நாய்கள் இருப்பதை தடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



