You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரபிக் கடலுக்கு 3 போர்க் கப்பல்களை அனுப்பி வைத்த இந்தியா - எதற்காக தெரியுமா?
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, பிபிசி செய்தி, டெல்லி
அரபிக் கடலில் கடந்த வாரம் இந்தியா நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மூன்று போர்க் கப்பல்களை அரபிக்கடலுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது.
மேற்கு இந்தியாவில் குஜராத் கடற்கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் (370 கிமீ) தொலைவில், எம்வி கெம் புளூட்டோ தாக்கப்பட்டது.
தாக்குதலால் ஏற்பட்ட தீயை ஊழியர்கள் உடனடியாக அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கப்பல் பணியாளர்களில் 21 இந்தியர்களும் ஒரு வியட்நாம் நாட்டவரும் இருந்தனர்.
எம்வி கெம் புளூட்டோ என்ற இரசாயனக் கப்பல் ஜப்பானுக்குச் சொந்தமானது, லைபீரியாவின் கொடியின் கீழ் பறந்தது மற்றும் நெதர்லாந்தால் இயக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே, கப்பல் இஸ்ரேலுடன்தொடர்புடையதாக கூறியது, இருப்பினும் அது விரிவாகக் கூறப்படவில்லை.
இந்திய ஊடகங்களின் தரவுகள்படி, இந்த கப்பல் சவூதி அரேபியாவில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்றதாகவும், தாக்குதலின் போது தென்னிந்தியாவில் உள்ள மங்களூர் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து, எம்வி கெம் புளூட்டோ இந்திய கடலோர காவல்படையின் கப்பல் மூலம் திங்கள்கிழமை மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது.
"அரபிக்கடலில் சமீபத்தில் நடந்த தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியக் கடற்படை ஐஎன்எஸ் மர்மகோவா, ஐஎன்எஸ் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய போர்க்கப்பல்களை அரபிக் கடலுக்கு அனுப்பியுள்ளது" என்று இந்திய கடற்கடை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிலைமையை கண்காணிக்கும் வகையில், நீண்ட தூர கடல்சார் உளவு விமானத்தை பறக்கவிட்டிருப்பதாகவும் இந்திய கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் இராக்கில் இருந்து மத்திய கிழக்கு பெட்ரோல் இறக்குமதியை இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. இந்த பாதையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் இந்தியா சிரமங்களை சந்திக்க நேரிடும்.
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்களன்று, “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்வழி வர்த்தகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது” என்று கூறினார்.
இந்திய கடற்படை இப்போது கடல்வழிகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எந்த குழுவும் ட்ரோன் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலின் பின்னணியில் இரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதை "அடிப்படையற்ற குற்றச்சாட்டு" என்று குறிப்பிட்டார்.
காஸாவில் இஸ்ரேலின் இராணுவ தாக்குதலை எதிர்க்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வது குறித்து சர்வதேச கடல்சார் துறை கவலை கொண்டுள்ளது
கடந்த இரண்டு மாதங்களில், ஹூதி பயங்கரவாதிகள் குறைந்தது பதினைந்து வணிகக் கப்பல்களைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
செங்கடலைத் தவிர்ப்பதற்காக பல கப்பல் நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் கப்பல்கள் செல்லும் பாதையை மாற்றியுள்ளன .
இதனால் தெற்காசிய ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
"நாங்கள் கவலைப்படுகிறோம். எங்கள் கப்பல் ஏஜென்சிகளின் கூற்றுப்படி, பயண காலம் ஐந்து முதல் ஏழு நாட்கள் அதிகரிக்கும் மற்றும் போக்குவரத்து செலவு 10 முதல் 15% வரை உயரக் கூடும்" என்று பிபிசியிடம் வங்கதேச ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் துணைத் தலைவர் சையத் நஸ்ருல் இஸ்லாம் கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு வங்கதேசம் பல கோடி டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.
மேற்குலகில் உள்ள ஆடை நிறுவனங்கள் பெரும்பாலும் போக்குவரத்துச் செலவை ஈடுகட்டினாலும், வங்கதேச ஏற்றுமதியாளர்கள், வாங்குபவர்கள் தங்கள் அடுத்த ஆர்டரை கேட்கும்போது தள்ளுபடி கேட்பார்கள் என்று கவலைப்படுவதாக இஸ்லாம் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)