You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி: ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களின் நிலை குறித்து கவலை தெரிவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்
டெல்லியிலுள்ள ராஜேந்திர நகர் எனும் பகுதியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் ஒன்றில் வெள்ளம் புகுந்ததில் ஓர் ஆண், இரு பெண்கள் என மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்தப் பயிற்சி மையத்தில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்திற்குள் திடீரென வெள்ளம் சூழ்ந்த நிலையில், அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் சில மாணவர்கள் தஞ்சம் புகுந்தனர்.
சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் இந்தக் கட்டடத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, டெல்லி காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்கு வந்து சிக்கியிருந்தவர்களை மீட்கத் தொடங்கினர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ராஜேந்திர நகர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பயிற்சி மையங்களுக்கு வெளியே தொடர்ச்சியாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் நீதி கோரும் அம்மாணவர்கள், டெல்லி மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
எப்போதும் மழை பெய்த உடனேயே அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துவிடுவதாக அம்மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறு மழைக்கே இப்பகுதியில் வெள்ளம் சூழ்கிறது. இயற்கைப் பேரிடர் எப்போதாவதுதான் ஏற்படும், ஆனால் இங்கு எப்போதும் நிகழ்கிறது. ஆறு நாட்களுக்கு முன்புகூட படேல் நகரில் மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்” என்று ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய மற்றொரு மாணவர், இப்பகுதியில் 80% நூலகங்கள் அடித்தளத்தில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கூடுதல் காவல் துணை ஆணையர் சச்சின் ஷர்மா அப்பகுதிக்கு சென்று மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.
போராட்டம் நடத்திய மாணவர்களிடம், “மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நான்கு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.
மத்திய துணை காவல் ஆணையர் எம். ஹர்ஷ்வர்தன் கூறுகையில், “அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்து மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளோம். கட்டடத்தின் மற்ற பகுதிகளில் இருந்தவர்களையும் மீட்டுள்ளோம். இச்சம்பவத்திற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதுதொடர்பாக இருவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் சிலரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் என்ன கூறுகின்றனர்?
டெல்லியின் பழைய ராஜேந்திர நகர், படேல் நகர், லஷ்மி நகர், கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற பயிற்சி மையங்கள் உள்ளனர். குறிப்பாக, குடிமைப் பணிகள், சி.ஏ., வங்கித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்கள் அதிகம். ஆனால், அங்கு கட்டுமான அமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறுகிறார், மதுரையைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவி ஒருவர்.
வெள்ள பாதிப்பால் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்த மையத்திற்கு அருகேயுள்ள தனியார் மையத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சியை முடித்த அவர் பிபிசி தமிழிடம் பேசினார்.
“இந்தப் பகுதி பல விஷயங்களில் ஆபத்தாக உள்ளது. சிறிய மழை பெய்தாலே முழங்கால் அளவு தண்ணீர் தேங்கிவிடும். இங்கு பெரும்பாலும் பயிற்சி மையங்கள்தான் உள்ளன. குடியிருப்புப் பகுதி என்பதால் பெரும்பாலும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கவனிப்பு இங்கு இருக்காது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிப்பதால், தேர்தல் நேரங்களில்கூட அரசியல்வாதிகள் அங்கு வர மாட்டார்கள்” என அவர் கூறுகிறார்.
பயிற்சி வகுப்புகள், தங்கும் அறைகள் என அதிக பணம் புழங்கும் இடமாக இருந்தாலும், மோசமான உள்கட்டமைப்பே இங்கிருக்கும் என்கிறார் அவர்.
“நான் படித்த மையத்தில் சிறு மழைக்கே தண்ணீர் வந்துவிடும் என்பதால், முதல் தளத்தில் இருந்துதான் கட்டடம் இருக்கும். ஆனால், இச்சம்பவம் நிகழ்ந்த மையத்தில் அப்படியில்லை. அடித்தளத்தில்தான் நூலகம் இருக்கும். பயிற்சி மையம் சிறியதாகத்தான் இருக்கும்,” என்கிறார் அவர்.
பெரும்பாலான பயிற்சி மையங்களில் ஓராண்டுக்கு சுமார் 1.5 முதல் 1.8 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாகக் கூறும் அவர், பெரும்பாலான மையங்களில் வாகன நிறுத்துமிடம்கூட இருக்காது என்றார். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இதைப் பேசுவதற்குத் தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அந்தப் பகுதியில் மின்சார வயர்களை பார்த்தாலே அது எவ்வளவு ஆபத்தானது எனத் தெரியும். பயிற்சி மையங்கள் மட்டுமல்லாமல் மாணவர்கள் அப்பகுதிகளில் தங்கும் வீடுகளும் மிக மோசமான நிலையிலேயே இருக்கும்" எனக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மாணவர்.
“பெரும்பாலும் 400 சதுர அடி அறையில் ‘பங்க் படுக்கைகள்’ அமைக்கப்பட்ட வடிவத்தில்தான் அறைகள் இருக்கும். அதில் 4-6 பேர் தங்க வேண்டும். அறையில் போதிய வெளிச்சம்கூட இருக்காது. தீயணைக்கும் கருவி, அவசர வழி இருக்காது. கட்டடங்கள் மிக நெருக்கமாக இருக்கும். ஆனால், அதற்கு 10,000 முதல் 18,000 வரை வாடகை தரவேண்டும்” எனக் கூறினார்.
இதுமட்டுமின்றி, பயிற்சி மையங்களில் இணைய நூலக வசதி எனக் கூறி நாற்காலி, மேசை மட்டும் அமைத்து, அதைப் பயன்படுத்துவதற்கு, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு தொகை என மாணவர்களிடம் வசூல் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்படியாக, போதிய அடிப்படை வசதிகளோ பாதுகாப்பு அம்சங்களோ இல்லாத நிலையிலேயே அப்பகுதியில் உள்ள பயிற்சி மையங்கள் இருப்பதாகவும், அங்கு அதிகளவில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் படிப்பதால் அரசியல்வாதிகளும் இந்தப் பிரச்னைகள் மீது அதிக அக்கறை செலுத்துவதில்லை எனவும் பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சூடுபிடித்துள்ள அரசியல்
ராஜேந்திர நகரில் நடந்த இந்தச் சம்பவத்தால் டெல்லி அரசியல் சூடுபிடித்துள்ளது. இதற்கு ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்க வேண்டுமென்று பாஜக கூறியுள்ளது. தற்போது டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது.
தங்கள் எதிர்காலத்தை மேம்படுத்த வந்த மாணவர்களுக்கு இப்படி நேர்ந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ், அங்குள்ள மக்கள் கடந்த ஒரு வாரமாக சாக்கடையைச் சுத்தம் செய்யுமாறு பலமுறை கூறி வந்ததாகவும், இந்தச் சம்பவத்திற்கான முழு பொறுப்பும் ஆம் ஆத்மி கட்சியுடையது எனவும் கூறினார்.
அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியும், இந்த விவகாரத்தில் டெல்லி மாநகராட்சியை நீண்டகாலமாக ஆட்சி செய்த பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
அப்பகுதியின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் துர்கேஷ் பதக், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது, இந்தச் சம்பவம் நடந்த இடம் தாழ்வான பகுதி என்றும், திடீரென வடிகால் உடைந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், போலீசார் இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
அதோடு, இதில் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை எனக் கூறிய துர்கேஷ் பதக், “15 ஆண்டுகளாக கவுன்சிலராக இருந்தபோது, இங்கு ஏன் வடிகால் கட்டவில்லை என்பதை பாஜக விளக்க வேண்டும். ஓர் ஆண்டில் அனைத்து வடிகால்களையும் கட்டிவிட முடியாது” என்றார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பாகும் எந்த அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி மேயர் ஷைலி ஓபராய் கூறினார்.
விசாரணைக்கு உத்தரவிட்ட டெல்லி அரசு
ஏ.என்.ஐ. செய்தி முகமையின்படி, டெல்லி அரசின் அமைச்சர் அதிஷி இந்த விவகாரத்தை விசாரித்து 24 மணிநேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியின் முகர்ஜி நகர் மற்றும் ராஜேந்திர நகர் பகுதிகள் பயிற்சி மையங்களுக்குப் பெயர் பெற்றவை. இந்த்தப் பகுதிகளில் உள்ள டஜன் கணக்கான பயிற்சி மையங்கள் குடிமைப்பணி மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துகின்றன.
நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக இங்கு வருவதால், இப்பகுதிகளில் மாணவர்கள் கூட்டம் அதிகம். கடந்த ஆண்டு ஜூன் மாதம், முகர்ஜி நகரிலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் மாணவர்கள் கூரையிலிருந்து வெளியே குதித்து உயிர் பிழைத்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)