You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வென்றுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஓபன்ஹைமர் படம் ஏழு பிரிவுகளிலும், மற்ற படங்கள் ஆறு பிரிவுகளிலும் விருதுகளை வென்றன.
சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற வந்தபோது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவருக்கு கோப்பையை வழங்கினார்.
அந்தச் சந்தர்ப்பத்தில், நோலன் தனது மனைவியும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளருமான எம்மா தாமஸுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய எம்மா தாமஸ், அந்த தருணத்தைப் பற்றி தான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், அந்தத் தருணத்திலேயே தான் நின்றிருப்பதாகவும் கூறினார்
அவர் தனது கணவரை 'தனித்துவமானவர் என்று வர்ணித்தார். இருப்பினும், ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக அவர் பெருமையடைவதாகக் கூறினார். மேலும் தனது மூன்று குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற எம்மா ஸ்டோன்
எம்மா ஸ்டோன் சிறந்த நடிகையாக அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தார்.
"நான் அந்த நேரத்தில் அப்படியே சுயநினைவு இழந்துவிட்டேன். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்,” என்று அவர் மேடைக்குப் பின்னால் கூறினார்.
"நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சுழல்வது போல் உணர்கிறேன். இது ஒரு பெரிய மரியாதை. எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது," என்றார்.
யோர்கோஸ் லாந்திமோஸ் படத்தில் பெல்லா பாக்ஸ்டராக நடித்ததில் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
"புதிதாக ஆனால் உருவகமாக நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு... மொழி மற்றும் திறமைகளை வேகமாகப் பெறும் ஒரு நபராக நடிக்கும் வாய்ப்பு... அவள் மகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையான அன்பும் நிறைந்தவளாக இருந்தாள்," என அந்தக் கதாப்பத்திரத்தைப் பற்றி அவர் பேசினார்.
ஓபன்ஹைமர் சிலியன் மர்பிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது
சில்லியன் மர்பி செய்தியாளர் அறைக்குள் வரும்போது அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதைப் போலத் தெரிந்தது. (அவர் வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை என்றாலும்).
"நான் கொஞ்சம் திகைப்புடன் இருக்கிறேன், இன்று இங்கு நிற்கும் ஐரிஷ் நாட்டவராக இருப்பதில் நான் மிகவும் வியப்படைகிறேன், பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
“இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கும் கிறிஸுக்கும் (நோலன்) அத்தகைய சிறப்பு உறவு இருக்கிறது. நாங்கள் 20 வருடங்களாக இணைந்து பணியாற்றி வருகிறோம், அவர் சரியான இயக்குநர் என்று நினைக்கிறேன்...என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை. நான் சிறுவயதில் அவருடன் ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் செய்தேன், அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்!"
ஐரிஷ் நாட்டில் பிறந்த, ஆஸ்கார் வாங்கும் முதல் நடிகராக இங்கு நிற்பதில் அவர் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.
"நான் என்ன சொன்னேன் என்பது எனக்கு நினைவில் இல்லை (ஏற்புரையில்), ஆனால் அயர்லாந்தில் கலைஞர்களை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் சிறந்தவர்கள். அது தொடர வேண்டும்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)