பதான் விமர்சனம்: ஷாருக்கானின் பொழுதுபோக்கு மசாலாவுக்குள் மறைந்திருப்பது என்ன?

பட்டான்

பட மூலாதாரம், YRF PR

    • எழுதியவர், நம்ரதா ஜோஷி
    • பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி இந்தி

சித்தார்த் ஆனந்தின் புதிய பாலிவுட் ஆக்‌ஷன் படமான பதானில் ஒரு காட்சியில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி ரூபினா மொஹ்சின் (தீபிகா படுகோன்) இந்திய உளவு அமைப்பான RAW (ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு) ஏஜெண்ட் பதானிடம் (ஷாருக்கான்) நீங்கள் ஒரு முஸ்லிமா என்று கேட்கிறார்.

பதிலுக்கு பதான், தான் ஒரு அனாதை என்பதால் அது தனக்குத் தெரியாது என்றும், பெற்றோர் தன்னை திரையரங்கில் விட்டுச் சென்றதாகவும் கூறுகிறார்.

இந்த பதில் ஒரு மசாலா திரைப்படக் கதை போல இருக்கலாம். ஆனால் இதில் ஒரு ஆழமான செய்தியும் அடங்கியுள்ளது.

பாலிவுட் படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் சம்பாதிப்பதை விட பெரிய விஷயம் எதுவும் இல்லை. நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான அமைப்புகளில் இந்திய இந்தி திரைப்படத்துறை முக்கியமான ஒன்றாகும்.

கடந்த சில ஆண்டுகளாக சமூகம் மாறிய விதம் திரைப்படங்களையும் பாதித்துள்ளது. திரைப்படங்களும் ஒருமுனைப்பட்டுள்ளன. வெறுப்பு பிரச்சாரங்கள், தடைகள் மற்றும் புறக்கணிப்புகளை சில திரைப்படங்கள் எதிர்கொண்டுள்ளன. பட்டான் படத்தின் பேஷரம் ரங் பாடலில் தீபிகா படுகோனின் பிகினியின் காவி நிறம் குறித்த சர்ச்சையும் இந்த பட்டியலில் அடங்கும்.

நான்கு வருடங்கள் கழித்து திரும்பியுள்ள ஷாருக்

இருப்பினும், பதான் திரைப்படத்தின் இந்த சின்ன காட்சி, திரையுலகில் எல்லா மதங்களையும் உள்ளடக்கிய உணர்வு திரும்புவதை நமக்கு நினைவூட்டுகிறது. காதல் மன்னன் ஷாருக்கானே இந்த வேண்டுகோளை முன்வைப்பதை பார்க்க முடிகிறது.

பிரம்மாஸ்திரா படத்தின் கேமியோ ரோலை விட்டுவிட்டால், நான்கு வருடங்களுக்கு பிறகு ஷாருக் மீண்டும் திரைக்கு வந்துள்ளார். பதானுக்கு முன் 2018ல், ஆனந்த் எல். ராயின் ’ஜீரோ’வில் அவர் கடைசியாகத்தோன்றினார்.

சாமானியர்களின் வாழ்க்கையைப் போலவே திரைப்படங்களுக்கும் நேரம் மிக முக்கியமானது. வேறு ஒரு காலகட்டமாக இருந்தால் ஊடகங்களும், ரசிகர்களும், தொழில்துறையினரும் பதான் திரைப்படத்தை ஒரு முக்கியமான பெரிய நட்சத்திரப் படமாக கருதியிருப்பார்கள். பொழுதுபோக்கின் அடிப்படையில், கொடுத்த பணம் வசூலானதா என்று பார்த்திருப்பார்கள்.

ஆனால் தற்போதைய அரசியல் சூழலைப் பார்க்கும்போது பதான் ஒரு வகையில் வெறுப்பு நிறைந்த ஒரு காலகட்டத்தில் அன்பை மீட்டெடுக்கும் இயக்கமாக மாறியுள்ளது.

யஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் சீரீஸின் நான்காவது படம் பதான். இதற்கு முன் 2012ல் டைகர், 2017ல் டைகர் ஜிந்தா ஹை, 2019ல் வார் வந்துள்ளன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் பதானில் புதிதாக எதுவும் இல்லை. பதானின் கதையை ஒரு வரியில் சுருக்கமாகக் கூறலாம் - ஒரு RAW ஏஜென்ட் மற்றொரு முரட்டு ஏஜெண்ட் ஜிம்முடன் (ஜான் ஆபிரகாம்) மோதுகிறார். ஜிம், கார்ப்பரேட் பாணியில் ஒரு தீவிரவாத அமைப்பை நடத்தி, தனது உயிரியல் ஆயுதமான ரக்தபீஜ் மூலம் இந்தியாவை அழிக்கத் திட்டமிடுகிறார்.

விறுவிறுப்பான திரைக்கதை, வலுவான உரையாடல்கள்

கதை ஒரு வரியாக இருக்கலாம். ஆனால் பிளாஷ்பேக் காட்சிகள் பலமுறை வரும் நீண்ட படம் இது. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் காட்சிகள் மிகுதியாக இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் படத்தைப் பார்க்கும்போதே கிளைமாக்ஸை யூகிக்க முடிகிறது.

சிந்தனையையும் லாஜிக்கையும் ஒதுக்கி வைத்துவிட்டுப்பார்த்தால், பொழுதுபோக்கின் ஒவ்வொரு மசாலாவையும் கொண்ட படமாக பதான் உள்ளது. அழகான காட்சிகள் மட்டுமின்றி, பார்வையாளர்களின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் பல அதிரடி காட்சிகளும் இதில் உள்ளன.

ஸ்ரீதர் ராகவன் எழுதிய திரைக்கதையும் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. அப்பாஸ் டயர்வாலா எழுதிய வசனங்கள் ஷாருக்கானின் உணர்ச்சிபூர்வ நடிப்பு மற்றும் நகைச்சுவையுடன் பொருந்துகின்றன.

இந்த நாட்களில் பாலிவுட்டில் நிலவும் தேசபக்தியின் கதையை ஷாருக் எப்படி தனது பாணிக்கு ஏற்ப மாற்றிக்கொண்டுள்ளார் என்பது சுவாரசியமானது. இதிலும் ஷாருக்கின் சொந்த முத்திரை தெரிந்தாலும், அவர் அதை கண்மூடித்தனமான தேசியவாதத்தில் இருந்து பிரித்து தனது பாத்திரத்திற்கு ஒரு மனிதத் தன்மையைக் கொடுக்கிறார்.

படத்தின் திரைக்கதை இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் சர்ச்சைக்குரிய சிக்கலைச் சுற்றி சுழல்கிறது. இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட முயற்சிப்பது மற்றும் சிக்கல்களை உருவாக்குவதை இது காட்டுகிறது. இந்த மேலாதிக்கத்தை நிலைநாட்டும் பிராந்திய விளையாட்டில் இந்தியா மேலிடத்தில் உள்ளது என்பதையும் பதான் திரைப்படம் காட்டுகிறது. இதையெல்லாம் காட்டினாலும் முக்கிய கதாபாத்திரமான பதான் கண்ணியமாகத் தெரிகிறார்.

பட்டான்

பட மூலாதாரம், INSTAGRAM/YRF

வலுவான வில்லன்

பதான் மற்றும் இந்தியாவின் எதிரிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் ஒரு சில கெட்டவர்களால் முழு நாட்டையும், அரசையும், மக்களையும் மாற்ற முடியாது என்பதை பதான் பாத்திரத்தில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் ஷாருக்.

ஆப்கானிஸ்தானில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக செல்லும் பதான் அங்குள்ள ஒரு குடும்பத்துடன் கலந்து பழகுகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர்களுடன் ஈத் கொண்டாடுகிறார். அவர் ஒரு இந்திய முகவர். அத்துடன் உலகின் மிகப்பெரிய சாஃப்ட் பவர் முகவரும் கூட. ஷாருக்கின் புகழ் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பரவியுள்ளது போல, இந்த இரண்டுக்கும் இடையே ஒருங்கிணைவு உள்ளது.

திரையில் அவரது காதல் இமேஜ் காரணமாக, ஷாருக் காதல் மன்னன் என்று அழைக்கப்படுகிறார், ஆனால் பதானfல், அவர் ஒரு ஆண்மைத்தனமான தோற்றத்தை காட்ட முயற்சிக்கிறார். வெற்று மார்போடு, வெயிலில் தன் தசைகளை முழுமையாக வெளிக்காட்டி, முதன்முறையாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கிறார்.

லதா மங்கேஷ்கரின் 'ஏ மேரே வதன் கே லோகோன்' பாடலுக்கு பட்டானின் வில்லன் விசில் அடிக்கிறார். ஹீரோவை விட அவரது கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. அவரது கோபத்திற்கு சரியான சூழல், விவேகம் மற்றும் பச்சாதாபத்தின் டச் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜான் ஆபிரகாம் இந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். உலகில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தினாலும் அது பெண்களுக்கு ஆபத்தான இடம் அல்ல. அவர்களுக்கென்று ஒரு இடம் இருக்கிறது என்பதையும் பட்டான் காட்டுகிறார்.

தீபிகா படுகோன் முதலில் பிகினியில் தோன்றுகிறார். ஆனால் பின்னர் அவர் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் தோன்றுகிறார்.

பட்டானின் பாஸாக டிம்பிள் கபாடியா இருக்கிறார். தனது தேசபக்தியால் மரியாதையை உருவாக்குகிறார்.

அதிரடி காட்சிகள்

படத்தில் ஆக்‌ஷன் அதிகம். இது நிலம், காற்று, நீர் மற்றும் பனியில் படமாக்கப்பட்ட ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளைக் கொண்டுள்ளது.

இதில், கார்கள், ஹெலிகாப்டர்கள், பைக்குகள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் சைபீரியாவில் உள்ள கண்ணைக்கவரும் இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் ஒரு ரயிலில் படமாக்கப்பட்ட அற்புதமான அதிரடி காட்சியும் பத்தில் உள்ளது. அதே நேரத்தில் சைபீரியாவில் உறைந்த பைக்கால் ஏரியில் வைரஸ் நிரப்பப்பட்ட பந்துகளுக்கு இடையே ஒரு அற்புதமான சண்டைக் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

ஏஜெண்ட் பட்டான், இரும்பு மற்றும் எஃகு போன்று வலிமையானவர் மட்டுமல்ல. அவர் புத்திசாலி மற்றும் அடக்கமானவரும் கூட. அழவும், காதலிக்கவும், தன்னைத்தானே கேலி செய்துகொள்ளக்கூடிய திறமையும் பெற்ற துப்பறிவாளர் அவர். பதானில், லாவாரிஸ், குதா கவா மற்றும் கரண் அர்ஜுன் ஆகிய திரைப்படங்களின் காட்சிகளையும் பார்க்கமுடிகிறது. 1993 ஆம் ஆண்டு வெளியான ’டர்’ திரைப்படத்தின் 'து ஹை மேரி கிரண்' உடன் மாஸ்கோவில் நடக்கும் ஒரு திருட்டு அழகாக இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது கேலிக்கூத்து போலவும் உள்ளது.

பட்டான்

பட மூலாதாரம், YRF

ஷாருக்கிற்கும் தீபிகாவிற்கும் இடையே ஒரு வேடிக்கையான காட்சி உள்ளது. அங்கு இருவருக்கும் இடையே நம்பிக்கை நெருக்கடி எழுகிறது. ஏனென்றால் இரு நாடுகளின் சம்மந்தப்பட்ட ஏஜென்சிகள் ஒருவரையொருவர் நம்புவதில்லை. ஆனால் இந்த இருவருக்கிடையிலான காதல் காரணமாக அவர்கள் ஐஎஸ்ஐ அலுவலகத்தை நகைச்சுவையாக டேட்டிங் இணையதளம் என குறிப்பிடுகின்றனர்.

ஜப்பானிய கலையான கின்ட்சுகி பற்றிய விரிவான குறிப்பை இந்தத் திரைப்படம் கொண்டுள்ளது. உடைந்த மண்பாண்டத் துண்டுகளுடன் தங்கத்தை எவ்வாறு இணைத்து இன்னும் அழகான மற்றும் மதிப்புமிக்க கலைப் படைப்பை உருவாக்கலாம் என்று அது விளக்குகிறது. காயமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற முகவர்களை ஒன்றிணைத்து கூட்டு செயல்பாடுகள் மற்றும் ரகசிய ஆராய்ச்சி என்ற புதிய பிரிவை உருவாக்க இது படத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஷாருக் பாலிவுட்டைப் பற்றி பேசுவது போல் தோன்றினாலும், தற்போதைய கட்டத்தை கடந்த பிறகு அது எப்படி நன்றாக இருக்கும் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: