'பயணத் தடை அரசியலுக்கு' தக்க பதிலடி கொடுப்போம் - சீனா எச்சரிக்கை

பயணத் தடையால் மீண்டும் தனிமைப்படுத்தப்படும் சீனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சீன சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு நாடுகளும் பயண கட்டுப்பாடு விதித்துள்ளது அரசியல் நோக்கத்தை கொண்டது என அந்நாட்டு அரசு விமர்சித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 

சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயம் மாக்கியுள்ளன. 

தனது கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், சீனாவில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் குறைத்து காட்டப்படுவதாகவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

சீனா கடைசியாக டிசம்பர் 24ம் தேதி வெளியிட்ட தினசரி கொரோனா பாதிப்பு குறிப்பில், 5 ஆயிரத்துக்கும் குறைவாக எண்ணிக்கையே பதிவாகி இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், தினசரி தொற்று எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது என்றும் இந்த மாதத்தில் 40 லட்சம் என்ற அளவில் இந்த எண்ணிக்கை உச்சத்தை தொடலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

தரவு பற்றாக்குறை மற்றும் ஜனவரி 8 முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சீனாவின் அறிவிப்பு ஆகியவை அந்நாட்டில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்னும் அறிவிப்பை பல நாடுகளும் வெளியிட வழிவகுத்துள்ளது.

கூடுதல் நிகழ்நேர தகவல்களைப் பகிருமாறு சீனாவை உலக சுகாதார அமைப்பு (WHO) வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் செவ்வாயன்று பேசும்போது, உலக நாடுகளுடனான தொடர்பை மேம்படுத்த சீனா விருப்பமாக உள்ளது என்று தெரிவித்தார். 

எனினும், “தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசியல் நோக்கங்களுக்காக கையாளும் முயற்சிகளை அரசாங்கம் உறுதியாக எதிர்க்கிறது, மேலும் பரஸ்பர கொள்கையின்படி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்” என்று செய்தித் தொடர்பாளர் மாசே நிங் குறிப்பிட்டார். 

கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தின் மத்தியில் சீனாவின் எல்லைகள் பெருமளவில் மூடப்பட்டது. குறைவான எண்ணிக்கையிலேயே வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட்டனர். கடுமையான பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர். 

பயணத் தடையால் மீண்டும் தனிமைப்படுத்தப்படும் சீனா

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய் தடுப்பு நிறுவனம் மற்றும் ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி இருவரும் அதிக அளவிலான தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா ஏற்படுத்தும் அச்சுறுத்தலைக் குறைக்கிறது என்று வாதிட்டனர்.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளும் சீன பயணிகளுக்கான பரிசோதனையை அமல்படுத்தியுள்ளன. 

“ஃபிரஞ்ச் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எங்கள் கடமையை செய்யும்விதமாக பரிசோதனைகளுக்கு கோருகிறோம் ” என்று ஃபிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே செவ்வாயன்று தெரிவித்தார். 

பயண கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பல்வேறு உறுப்பு நாடுகளிடம் இருந்து ஆதரவாக கருத்து வருகின்றன என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆட்சிமன்ற அமைப்பான ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளன. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டன. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளிலும் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து புதன்கிழமை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முழுக்க முழுக்க அறிவியலை சார்ந்தது என்று அமெரிக்காவும் தனது சோதனை நடவடிக்கைகள் நியாயப்படுத்துகிறது. 

பயணத் தடையால் மீண்டும் தனிமைப்படுத்தப்படும் சீனா

பட மூலாதாரம், Reuters

கொரோனா தொடர்பாக சர்வதேச நாடுகளால் சீனா தனிமைப்படுத்தப்படுவது இது முதல்முறையல்ல. சீனாவின் வூஹானில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டது. எனினும் அதன் தொற்றம் குறித்து ஆய்வு செய்ய சீனா மறுத்தது. 

இதற்கிடையே, அதிகரித்துவரும் தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக கூறிய ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை சீனா நிராகரித்துள்ளது. தங்களிடம் போதுமான மருந்துகள் இருப்பதாகவும் பீஜிங் கூறியுள்ளது. 

சீனா 340 கோடிக்கும் அதிகமான டோஸ்களை வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன - அவற்றில் பெரும்பாலானவை கொரோனாவாக் ஆகும். சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பயன்படுத்தவே அந்நாட்டு அரசு வலியுறுத்துகிறது. ஆனால், ஒமிக்ரான் திரிபுகளுக்கு எதிராக மேற்கு நாடுகள் தயாரித்துள்ள எம்.ஆர்.என்.ஏ தடுப்பு மருந்துகளைவிட சீனாவின் தடுப்பு மருந்துகள் வீரியம் குறைவானவை என்று நிரூப்பிக்கப்பட்டுள்ளது. 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: