You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக்க முயற்சியா? இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்க நேபாளம் முயல்வது ஏன்?
- எழுதியவர், பிபிசி நேபாளி சேவை
- பதவி, .
நேபாளத்தின் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா அரசு, இந்து மத ஆராய்ச்சி மற்றும் கலாச்சார தூதாண்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் 'ஸ்ரீ பசுபதி இந்து பல்கலைக்கழகம்' நிறுவப்பட வேண்டியதன் அவசியத்திற்கான ஆய்வைத் தொடங்கியுள்ளது.
ஆனால் போதிய ஏற்பாடுகள் இல்லாமல் இது போன்ற பல்கலைக்கழகம் அமைக்கப்படக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மத்திய சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சர் சுதன் கிராதி, சமய சார்பின்மைக்காக வாதிடுகிறார், அதோடு ஒரு பல்கலைக்கழகத்தின் தேவை குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளார்.
கிராதி, மாவோயிஸ்ட் கட்சியில் தீவிர சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். முதல்முறையாக அவர் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
அரசால் அமைக்கப்பட்ட குழு பல்கலைக்கழகம் தொடர்பான பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்து மதம் மற்றும் வேத கலாச்சாரம் பற்றிய ஆய்வு நேபாள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான ஆய்வு
நேபாளத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் இந்துக்கள். மாவோயிஸ்ட் இயக்கத்திற்குப் பிறகு நேபாளம், இந்து மேலாதிக்க முடியாட்சியில் இருந்து கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாற்றப்பட்டது. அதன் பிறகு சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பெயர்கள் மாற்றப்பட்டன.
மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ளார். அவரது அரசின் சுற்றுலாத் துறை அமைச்சரான கிராதி, 'பசுபதி இந்து பல்கலைக் கழகம்' அமைப்பதன் அவசியத்தை ஆய்வு செய்யும் பொறுப்பை, பேராசிரியர் டாக்டர் ஜக்மான் குருங் தலைமையிலான குழுவிடம் அளித்துள்ளார்.
“இவ்வளவு பணிகளை முடித்துள்ளோம் என இரு வாரங்களுக்கு முன்பு அவர்கள் எங்களிடம் கூறினார்கள். பசுபதி இந்து பல்கலைகழகத்தின் வடிவம் என்ன, எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும், அதில் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்படும் ஆகிய விஷயங்கள் பற்றிய முழு அறிக்கை இன்னும் வரவில்லை," என்று சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர குமார் கேசி கூறினார்.
ஆய்வறிக்கை வந்த பிறகு அமைச்சகம் 'பொருத்தமான' முடிவை எடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
'கலாசார தூதாண்மை வலுவாகும்'
'பசுபதி இந்து பல்கலைக்கழகம்' கல்வி, சுற்றுலா போன்ற துறைகளை மேம்படுத்தும் என நம்புவதாக சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கிராதி கூறியிருந்தார்.
"சமயசார்பற்ற நாட்டில் எல்லா மதங்களும் மதிக்கப்படுகின்றன. இன்று வரை நாம் வெளிநாட்டு பொருட்களைத் தேடிக்கொண்டிருந்தோம். ஆனால் உள்நாட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. நமது நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் பாணிகளை உள்ளூர்மயமாக்க முடியவில்லை" என்று அவர் கூறினார்.
"உலகம் முழுவதும் அறிவுஜீவிகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். இது கலாசார தூதாண்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியும் ஆகும்" என்று அவர் கூறினார்.
ஆன்மிகப் பயிற்சிக்கு நேபாளம் சிறந்த இடம் என்றும் நேபாளத்தின் அசல் அம்சங்களைக் கொண்ட பாடப் பிரிவுகளைச் சேர்த்துக்கொண்டு புதிய பல்கலைக்கழகம் முன்னேறும் என்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குருங் கூறினார்.
"உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தத்துவம் மற்றும் நேபாளம் குறித்து படிக்க வருவார்கள். நேபாளம் தொடர்பான பாடங்களைப் படிப்பது மற்றும் ஆராய்ச்சி செய்வது பற்றி நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்," என்றார் அவர்.
"உலகம் முழுவதும் மறைந்து போன முற்கால வஜ்ராயன பௌத்தம், உலகில் வேறு எங்குமே இல்லாத முண்டும் கிராத் மதம் போன்ற மதங்கள் பற்றி கற்பிக்கப்படும்.
நேபாளத்தில்கூட அழித்துவிட்ட, குருங் பழங்குடியின சமூகத்தின் பான் பாரம்பரியம் குறித்தும் இங்கே பாடங்கள் இருக்கும். நேபாளத்தின் மற்ற கலாசார பாரம்பரியம், செபாங் மற்றும் ரவுதே போன்ற சமூகங்களின் வாழ்க்கை முறை பற்றியும் நாங்கள் கற்பிப்போம்," என்று அவர் குறிப்பிட்டார்.
நேபாளம் கிழக்கத்திய தத்துவம் மற்றும் உயர்நிலை ஆன்மீக பயிற்சிக்கு ஏற்ற இடம் என்பதை அவர் விரிவாக விளக்கினார். பசுபதிநாத் இந்து பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கான நிதிப் பொறுப்பு ஒரு சவாலாக இருக்காது என்று டாக்டர் குருங் தெரிவித்தார்.
வளங்களைச் சேர்ப்பது கடினம்
தற்போது நேபாளத்தில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அதே நேரத்தில் மாகாண அரசுகள் சில புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதை நோக்கி நகர்கின்றன.
நேபாள சமஸ்கிருத பல்கலைக்கழகம், மதம் மற்றும் கலாசாரத்தில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் லும்பினி பெளத்த பல்கலைக்கழகம் மற்றும் ராஜரிஷி ஜனக் பல்கலைக்கழகம் தொடர்பாகவும் பணிகள் நடந்து வருகின்றன.
புதிய பல்கலைக்கழகம் அமைப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுரேஷ்ராஜ் ஷர்மா கூறினார்.
"நேபாளத்தில் சமஸ்கிருத பல்கலைக் கழகம் உள்ளது. ஆனால் அதற்கு அரசு நிதியுதவி அளிக்காவிட்டால் அதுவும் செயல்பட முடியாது. திரிபுவன் பல்கலைக்கழகத்தின் நிதிச் சுமையும் அரசின் மீது உள்ளது," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
நிதியுதவி அல்லது பிற ஆதாரங்களில் இருந்து பணம் பெறப்பட்டால், மதம் தொடர்பான கல்வி நோக்கங்களுக்காக ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவது எளிதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
''கல்லூரியை துவங்கி அதை பல்கலைக் கழகமாக மாற்றுவது சிறந்தது. ஆனால் நேரடியாக பல்கலைக்கழகத்தைத் திறப்பதால் பொறுப்புகள் அதிகரிக்கின்றன. இது அவ்வளவு எளிமையானது என்று நான் நினைக்கவில்லை," என்றார் அவர்.
பல நாடுகளில் முதலில் பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச பணம், நிலம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை நிர்ணயம் செய்யப்படுகின்றன என்று பேராசிரியர் ஷர்மா குறிப்பிட்டார்.
அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்த பிறகே பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றார் அவர்.
இந்து தத்துவம் கற்கும் இடம் எங்கே?
பசுபதி இந்து பல்கலைகழகத்தைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தெரியவில்லை என்று நேபாள சமஸ்கிருத பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் குல் பிரசாத் கொய்ராலா கூறினார்.
”பல்கலைக்கழகத்தைத் திறப்பது குறித்து தற்போது பல்வேறு ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. நேபாள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தின் 12 முக்கியப் பாடங்கள் உள்ளன.
அதை 24 ஆக அதிகரிக்க மேலும் 12 நவீன பாடங்களைச் சேர்க்கலாம். ஒரு பாணியை உருவாக்குவது என்பது ஒத்த பாணியை மற்றொரு ஒத்த பாணியுடன் இணைப்பதாகும்," என்று அவர் குறிப்பிட்டார்
போதிய திட்டமிடல் மற்றும் ஆய்வு இல்லாமல் நிறுவப்படும் பல்கலைக்கழகங்கள், நேபாளம் போன்ற நாட்டிற்குத் தாங்க முடியாத அளவுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
”நேபாள சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் ஒரு துறையைத் திறந்து பௌத்த தத்துவத்தைக் கற்பிக்க முடியும். எனவே தனி பௌத்த பல்கலைக் கழகம் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
இப்போது யோக்மாயா ஆயுர்வேத பல்கலைக்கழகத்தைத் திறப்பது பற்றிப் பேசப்படுகிறது. சமஸ்கிருத துறையில் ஆச்சார்யா வரை எட்டு வகையான யோகாக்கள் கற்பிக்கப்படுகின்றன. சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தின் ஒரு கிளையாக இந்து மதத்தைப் பற்றிய ஆராய்ச்சியை வைப்பது பொருத்தமாக இருந்திருக்கும்," என்று குல் பிரசாத் கொய்ராலா கூறினார்.
இந்து தேசத்திற்கான கோரிக்கை
பசுபதிநாத் இந்து பல்கலைக்கழகம் நிறுவப்படுவதன் பின்னணியில் உள்ள நோக்கமும் காரணமும் தனக்குப் புரியவில்லை என்று காத்மாண்டுவில் உள்ள வால்மீகி வித்யாபீடத்தின் பேராசிரியை பிரியம்வதா ஆச்சார்யா கஃப்லே கருத்து தெரிவித்தார்.
“திரிபுவன் பல்கலைக்கழகத்தின் கீழ் கலாச்சாரம் படித்தால், பசுபதிநாத் மற்றும் பிற பாடங்கள் அங்கு கற்பிக்கப்படுகின்றன. இந்துக்கள் அதிக அளவில் இருப்பதால் நாட்டில் எல்லாமே இந்துமயமாக உள்ளது. எனவே வெளித்தோற்றத்தைப் பற்றிப் பேசுவதற்கு பதிலாக, மதம் மற்றும் கலாசாரத்தில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு ஆதரவான உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பக்தர்கள் தங்குவதற்கு சத்திரங்கள், சமையலறை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான புதிய ஆய்வுக்காக அரசு அதிகாரிகள் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அதேநேரம், ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி, ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி நேபாள் போன்ற கட்சிகள், நாட்டை மீண்டும் இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றன.
இந்தியா-நேபாள சமய தூதாண்மை
சமீப காலமாக, நேபாளத்தின் அண்டை நாடான இந்தியாவில் இந்து அரசியலின் வேர்கள் ஆழமடைந்து வருகின்றன. 'ராமாயண சர்க்யூட்' உள்ளிட்ட மத சுற்றுலாவுக்கு இரு நாட்டு அதிகாரிகளும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
இந்தியாவின் இந்து சமூகம் பசுபதிநாதருக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி பசுபதிநாத் தவிர, முக்திநாத் மற்றும் ஜனக்பூர் தாம் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளார்.
வாரணாசி உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு மதக் கல்விக்காக நேபாளிகள் பலர் செல்கின்றனர்.
அதேபோல் இந்தியர்கள் நேபாளத்தை மத சுற்றுலா மற்றும் ஆராய்ச்சிக்கான இடமாகக் கருதி வருகின்றனர்.
இந்து பல்கலைக்கழகம் நிறுவப்பட்டவுடன் இந்த வகையான பரிமாற்றம் மேலும் விரிவடையும் என்று சில நிபுணர்களின் ஆய்வு குறிப்பிடுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்