You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறுவனுடனான வீடியோவால் சர்ச்சை - வருத்தம் தெரிவித்தார் தலாய் லாமா
பெளத்த மத தலைவர் தலாய் லாமா, சிறுவன் ஒருவனை சந்திக்கும் வீடியோ அவருக்கு எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது சிறுவனிடம் அவர் நடந்து கொண்ட விதத்திற்குப் பல முனைகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், அவரே முன்வந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் வசிக்கும் பௌத்த மத்தைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் மதத் தலைவரான தலாய் லாமா, திபெத்தின் ஆட்சித் தலைவராகவும் அவர்களால் கருதப்படுகிறார்.
திபெத்தை சீனா வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டதன் எதிரொலியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த அவர், தற்போது இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் வசித்து வருகிறார். 87 வயதை எட்டிவிட்ட அவர் அவ்வப்போது தன்னைப் பின்பற்றும் மக்கள் மற்றும் மாணவர்களிடையே ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.
அவ்வாறான நிகழ்ச்சி ஒன்று, பிப்ரவரி 28ஆம் தேதியன்று தரம்சாலாவில் உள்ள தலாய் லாமா கோவிலில் நடந்தது. அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்3எம் குழுமத்தின் எம்3எம் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறன் பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் சுமார் 120 மாணவர்களுடன் தலாய் லாமா உரையாடினார்.
மார்ச் மாதத்தில், அந்த அறக்கட்டளை இந்த நிகழ்வின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில் இருக்கும் சிறுவன், தலாய் லாமாவை கட்டிப்பிடித்து நிற்கும் படமும் அறக்கட்டளை பதிவேற்றிய படங்களில் ஒன்று.
இணையத்தில் வைரலாக பரவிய அந்த வீடியோவில், தலாய் லாமாவை தான் கட்டிப்பிடிக்கலாமா என்று அந்தச் சிறுவன் கேட்கிறான். அதற்கு அவர் சிறுவனை அழைத்து, அவரது கண்ணத்தைக் காட்டி, “முதலில் இங்கே” என்று கூற, சிறுவன் அவரது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு பிறகு அவரை அணைத்துக் கொள்கிறான்.
அதுவரையிலும் பிரச்னை இல்லை. வீடியோவில் அடுத்து இடம் பெற்றிருந்த காட்சிதான் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது.
அதன் பின்னர், சிறுவனின் கையைப் பிடித்தபடி, தலாய் லாமா அவரது உதடுகளைக் காட்டி, “இங்கேயும்” என்று கூறி சிறுவனின் உதடுகளில் முத்தமிட்டார்.
சிறுவனின் உதடுகளில் முத்தமிடும் தலாய் லாமா பின்னர் சிரித்துக் கொண்டே தனது நாக்கை வெளியே நீட்டி, “Can you suck my tongue,” என்று கூறுவதைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
பிறகு மேலும் பல அரவணைப்புகளோடு சிறுவனிடம் தொடர்ந்து சிறிது நேரம் பேசியவர், “அமைதியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும் நல்ல மனிதர்களைத் தேடுமாறு” கூறினார்.
இந்தக் காட்சிதான் சமூக ஊடகங்களில் தலாய் லாமாவுக்கு எதிரான அலையைக் கிளப்பியுள்ளது. பல தரப்பிலும் இருந்து சமூக ஊடகங்களில் தலாய் லாமாவின் செயலைக் கண்டித்து பலரும் கருத்துகளை பதிவிட்டபடி இருந்தனர்.
இதையடுத்து, தலாய் லாமா தரப்பில் இருந்து வருத்தம் தெரிவித்து அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தலாய் லாமா மன்னிப்பு கேட்பது முதல் முறையல்ல
சர்ச்சையான பேச்சுகளுக்காக தலாய் லாமா இதற்கு முன்பும் வருத்தம் தெரிவித்த நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. பிபிசி நேர்காணல் ஒன்றில், ஒரு பெண் தலாய் லாமா ஆவதென்றால் அவர் கவர்ச்சிகரமானவராக இருக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.
பின்னர், அவரது அதிகாரப்பூர்வ அலுவலகம் இதற்காக மன்னிப்பு கோரியது. அவர் நகைச்சுவைக்காகவே அவ்வாறு குறிப்பிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பெண்களை ஒரு பொருளாகப் பாவிப்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தே வரும் தலாய் லாமா, ஆண் - பெண் சமத்துவத்தையும் ஆதரித்து வருவதாக அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
பிபிசி நேர்காணலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்தும் அவரது திபெத் மீள் வருகை சாத்தியமா என்பது குறித்தும் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாயின.
அகதிகள் குறித்துப் பேசும் போது, ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் அவர்களது தாயகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த அவரது அலுவலகம், தலாய் லாமாவின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகக் கூறியது.
தாயகத்தை விட்டு வெளியேறியவர்களில் மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பாத மக்களின் உணர்வுகளைத் தாம் மதிப்பதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ட்ரம்பின் பார்வையில் ஒழுங்கில்லை என்ற தனது கருத்துக்காக தலாய் லாமா மன்னிப்பு கோரவில்லை.
திபெத் பாரம்பரியம் என்ன?
நாக்கை வெளியே நீட்டுவது உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் நல்ல விஷயமாகக் கருதப்படாவிட்டாலும், திபெத்தை பொருத்தவரை அதுவொரு வாழ்த்து முறை.
அங்கே, 9ஆம் நூற்றாண்டு முதலே இந்தப் பழக்கம் இருந்து வருகிறது. அப்போது, திபெத்தை ஆட்சி செய்த லாங் தர்மா என்ற அரசரின் நாக்கு கருப்பு நிறத்தில் இருந்துள்ளது.
அந்த அரசர் மறுபிறவி எடுத்திருப்பதாக மக்கள் நம்பினார்கள். அதனால்தான், சாமான்யர்கள் தாங்கள் அரசரின் மறுபிறப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்த நாக்கை வெளியே நீட்டும் வழக்கம் உருவாகியுள்ளது. தற்போதும் மக்கள் மரியாதையை வெளிப்படுத்தும் பழக்கமாக அங்கே அந்த பாரம்பரியம் நீடிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்