சச்சின் முதல் தோனி வரை: இந்தியா - பாகிஸ்தான் மோதிய மறக்க முடியாத 5 ஆட்டங்கள்

    • எழுதியவர், விதான்ஷூ குமார்
    • பதவி, பிபிசி இந்தி

“அந்த போட்டிக்கு முந்தைய இரவு முழுவதும் என்னால் தூங்கவே முடியவில்லை. இதுவே எங்கள் மீது எவ்வளவு அழுத்தம் இருந்தது என்பதை காட்டுகிறது. ஒருவேளை நான் அப்படிதான் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தேன்.”

இந்த வார்த்தைகள் 2003ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த உலகக்கோப்பை போட்டி குறித்து பேசுகையில் சச்சின் டெண்டுல்கர் உதிர்த்தவை.

இந்த போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது மட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கர் 98 ரன்கள் குவித்து வரலாற்றில் மறக்க முடியாத சாதனையை பதிவு செய்தார். அதே சமயம் சச்சின் கூறிய இந்த வார்த்தைகள் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள் மீது எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.

கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போது ரசிகர்களும் பரபரப்பின் உச்சத்தில் இருப்பார்கள். வெற்றி பெற்றவர்களின் வீடுகளில் பட்டாசுகள் வெடிப்பதும், தோல்வியடைந்த அணியின் ரசிகர்களின் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் உடைக்கப்படுவதாகவும் இன்றளவும் நம்பப்படுகிறது.

அப்படி பரபரப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 5 முக்கிய போட்டிகள் குறித்து பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கராச்சி ஒருநாள் போட்டி, 2004

முதலில் கராச்சியில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி குறித்து பார்க்கலாம். அங்கு நானும் கூட செய்தி சேகரிக்க சென்றிருந்தேன்.

2004ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முழு தொடரை விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தது இந்திய அணி. இதனால், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பும், உற்சாகமும் காணப்பட்டது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் போட்டி எல்லை கடந்து பல பிரபலமான தலைவர்கள், நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் என பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. கிரிக்கெட் மைதானத்தில் காணப்பட்ட ரசிகர்களின் உற்சாகம் ஒருவரையும் அவர்களது இருக்கையில் அமரவிடவில்லை. இந்த போட்டியில் 700 ரன்கள் குவிக்கப்பட்டன.

முதலில் விளையாடிய இந்தியா 349 ரன்களை குவித்தது. இதில் வீரேந்தர் சேவாக் 79 ரன்களும், ராகுல் டிராவிட் 99 ரன்களையும் குவிந்திருந்தனர்.

இரண்டாவதாக களமிறங்கிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும், இன்சமாம் உல்-ஹக்கின் அற்புதமான சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் கடும் சவால் தந்தது.

கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 9 ரன் தேவைப்பட்ட நிலையில், அற்புதமாக பந்து வீசிய ஆஷிஷ் நெஹ்ரா முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

கடைசி பந்தில் மொயீன் கான் சிக்ஸர் அடிக்க முயற்சிக்க, ஜாகீர் கான் அந்த பந்தை பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க, 5 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

ஷார்ஜா ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 1986

ஆனால், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தில் வெற்றிபெற முடியும் என்று 38 ஆண்டுகளுக்கு முன்பு ஷார்ஜாவில் நிரூபித்துக் காட்டினார் ஜாவேத் மியாண்டட்.

ஆஸ்திரேலேசியா கோப்பைக்கான இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 245 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கவாஸ்கர் 92 ரன்களும், ஸ்ரீகாந்த் மற்றும் வெங்சர்க்கார் அரைசதம் அடித்தனர்.

இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட் இழந்தாலும், அந்த அணி வீரர் ஜாவேத் மியாண்டட் அபாரமாக ஆடி ரன்களை குவித்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், பந்து வீச்சாளர் சேத்தன் சர்மாவிடம் எக்ஸ்ட்ரா எதுவும் வீசி விட வேண்டாம் என்று கேப்டன் கபில் தேவ் கூறினார்.

அதுவரை 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்த சேத்தன் சர்மா, யார்கர் பந்து வீச முயல, அது ஃபுல் டாஸ் பந்தாக மாறியது. அந்த பந்தை மியாண்டட் சிக்சருக்கு விளாசினார். டி-20க்கு முந்தைய காலகட்டமான அந்த சமயத்தில், ஒரு ஓவருக்கு 5 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோர் என்று கருதப்பட்டது மற்றும் பவுண்டரிகள் எல்லாம் அரிதானதாக கருதப்பட்டது.

இந்நிலையில் அப்போது என்ன நடந்தது என்பதையே இந்திய அணியால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஜாவேத் மியாண்டட் கிரிக்கெட்டில் நட்சத்திர வீரராக மாறிப்போனார்.

டாக்கா ஒருநாள் போட்டி , 1998

வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற சுதந்திரக் கோப்பை ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின், மூன்றாவது மற்றும் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டன.

48 ஓவர்கள் கொண்ட இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 314 ரன்கள் குவித்தது. இதில் சயீத் அன்வரின் 140 ரன்கள் மற்றும் இஜாஸ் அகமதுவின் 117 ரன்கள் முக்கிய பங்கு வகித்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியின் சவுரவ் கங்குலி முதல் விக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து 71 ரன்கள் சேர்த்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ராபின் சிங்குடன் இணைந்து 179 ரன்கள் சேர்த்தார்.

124 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 43-வது ஓவரில் கங்குலி ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகும் 5 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவர்களில் மைதானத்தின் வெளிச்சம் ஏறக்குறைய குறைந்துவிட்ட நிலையில், ரன்களை எடுப்பது இந்தியாவுக்கு கடினமாக இருந்தது. ஆனால் போட்டியின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார் கனிட்கர்.

டர்பன் டி20, 2007

2007ல் டர்பனில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானுக்கு இந்த ஸ்கோர் கடினமானதாகத் தோன்றவில்லை. ஆனால் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவர்களும் 141 ரன்களே எடுத்தனர். இதனால் ஆட்டம் டிரா செய்யப்பட்டது.

பிறகு வெற்றி 'பால்-அவுட்' முறையில் முடிவு செய்யப்பட இருந்தது. ஒருவகையில், இது கால்பந்தில் பெனால்டி ஷூட்-அவுட் போன்றது. இதில், பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனே இல்லாமல் ஸ்டம்பை நோக்கி பந்து வீச வேண்டும்.

இந்தியாவின் வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய மூன்று பேரும் ஸ்டம்பை துல்லியமாக தாக்கினர். அதேசமயம் பாகிஸ்தான் தரப்பில் யாசிர் அராபத், உமர் குல் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகிய மூவரும் ஸ்டம்பை தவறவிட்டனர்.

இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற அடிப்படையில் பவுல் அவுட்டில் வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினம் ஒருநாள் போட்டிகள், 2005

2004 பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு அடுத்த ஆண்டு, பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில்தான் இந்தியாவுக்கு ஒரு புதிய ஹீரோ கிடைத்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 356 ரன்கள் குவித்தது. அந்த இன்னிங்ஸின் நாயகன் இளம் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி. இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்த தோனி 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் நானும் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தேன். தோனி அடித்த சிக்ஸர்கள் இன்னும் என் நினைவுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த மைதானத்தில் ஸ்டேடியத்தின் பல பகுதிகள் மூங்கில் பட்டைகளால் மூடப்பட்டிருந்தன. தோனியின் ஒவ்வொரு சிக்ஸர்களும் அந்த மூங்கில் மட்டைகள் மீது படும்போது, ஏதோ ஒரு தோட்டா வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. இந்த இன்னிங்ஸில் 4 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் அடித்து தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார் தோனி.

பாகிஸ்தான் அணி 298 ரன்களுக்குள் சுருண்டது. இந்த ஆட்டத்தின் வழியாக எப்படி தோனி தன்னை எதிர்த்து பந்து வீசும் பந்து வீச்சாளர்களை நிலைகுலைய செய்வார் என்பதை உலகம் பார்த்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)