You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணாமலை 'திமுக ஃபைல்சில்' சாரமில்லை என விமர்சனம்: ஊழல் புகார் சுமத்த அடிப்படையாக என்ன வேண்டும்?
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கு 1.34 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாக நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை.
சில பக்கங்கள் அடங்கிய அந்தப் பட்டியலை திமுக ஃபைல்ஸ் என அவர் அழைக்கிறார். இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, வி.செந்தில் பாலாஜி, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரின் பெயர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்புகள் என்று கூறி சில தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, குறிப்பாக தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த சென்னை மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெறுவதற்கு ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக ரூ. 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டினார்.
"நிழல் நிறுவனங்கள் மூலம் இந்த பணம் திமுகவுக்கு செலுத்தப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார். அதில் ஒரு நிறுவனம் அமெரிக்காவில், "ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டது," என்றும் அவர் கூறினார்.
திமுக எதிர்வினை
அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த திமுக முன்னாள் எம்பி ஆர்.எஸ். பாரதி, "இன்னும் 15 நாட்களில் தமது குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை அண்ணாமலை வழங்காவிட்டால், திமுக தலைவர்கள் அனைவரும் மாநில அளவில் அண்ணாமலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள். அவர் தொடர்ந்து நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டி வரும்" என்றும் எச்சரித்தார்.
அதானி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் ஆருத்ரா ஊழல் ஆகியவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்பவே அண்ணாமலை முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார் ஆர்.எஸ். பாரதி.
ஏமாற்றத்தில் முடிந்த பரபரப்பு
இது குறித்து அண்ணாமலையிடம் கேட்டதற்கு, "இப்போது பட்டியலின் முதல் பகுதி மட்டுமே வெளியாகியுள்ளது. மேலும் மூன்று பகுதிகள் அடுத்தடுத்து வெளியிடப்படும். தற்போதைக்கு நேரடி சொத்துகள், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள் விவரத்தை வெளியிட்டுள்ளோம். உலக அளவில் எப்படி திமுக மிகப்பெரிய பணப் பரிவர்த்தனை தொழிலை விரிவுபடுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்துவதே எங்களின் நோக்கம்," என்று கூறினார்.
விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள்
இந்த நிலையில், அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் தொடர்பாக, ஊழல் தகவல்களை வெளியிடும் இடித்துரைப்பாளர்கள் (விசில் ப்ளோயர்ஸ்) சிலர் விமர்சித்துள்ளனர்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் பொத்தம் பொதுவானவை என்று 'சவுக்கு' இணையதளத்தை நடத்தி வரும் அதன் ஆசிரியரும் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஊழியருமான சங்கர் தெரிவித்துள்ளார்.
"ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், பொதுவெளியில் கிடைக்கக் கூடிய தரவுகளை ஆவணங்கள் போல பேட்டி கொடுத்து ஏமாற்றத்தை அளித்து விட்டார் அண்ணாமலை," என்கிறார் சங்கர்.
என்ன செய்திருக்க வேண்டும்?
நியாயமாக பார்த்தால் அண்ணாமலை தான் கட்டியிருந்த கைகடிகாரம் தனிப்பட்ட விஷயம் என ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாம். அவர் முறைப்படி எழுப்பியிருக்க வேண்டிய பிரச்னை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையில் கட்டியிருக்கும் கைகடிகாரம் பற்றியதுதான். காரணம் அது பல கோடி மதிப்பிலானது. ஸ்டாலின், முதல்வர் பதவி வகிக்கும் முன்பு அந்த கைகடிகாரத்தை அணிந்திருக்கவில்லை. அதன் பிறகு அது பரிசாக வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், எங்கும் அது கணக்கில் காட்டப்படவில்லை.
அரசு பதவியில் இருப்பவர் தனக்கு வரும் பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்ப்பது அவரது கடமை. அந்த கைகடிகாரத்தின் பின்னணி பற்றிய விளக்கத்தை முதல்வர் தர அண்ணாமலை வலியுறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அதை எல்லாம் செய்யாமல் ஏதேதோ தகவல்களை வெளியிட்டு நேரத்தை வீணடித்து விட்டார் அண்ணாமலை. அவரது பேட்டி சமூக ஊடக பரபரப்புக்கு மட்டுமே தீனி போடும். அவர் எழுப்பியது மிகப்பெரிய பிரச்னை. ஆனால், அது வெடிக்காத குண்டாக இருக்கிறது," என்று சங்கர் தெரிவித்தார்.
ஆதாரங்களை நிரூபிப்பது சவாலான பணி
தமிழ்நாட்டில் ஆளும் ஆட்சியாளர்கள் மற்றும் தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தொடர்புடைய சொத்து மதிப்பு, ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் வெளியிடும் அமைப்பு அறப்போர் இயக்கம். அந்த இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராமன் அண்ணாமலையின் 'திமுக ஃபைல்ஸ் வெளியீடு', அடிப்படையில் சட்ட வலுவில்லாதது என்று கூறுகிறார்.
"எங்களுடைய இயக்கம் ஒரு ஊழலை வெளியிடுகிறது என்றால் முதலில் அதை நிரூபிக்கும் ஆவணத்தைத்தான் தேடும். குற்றம்சாட்டப்படும் நபருக்கு அந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதா என்பதை கிடைத்த ஆவணங்களைக் கொண்டு சரிபார்ப்போம்.
ஆவணங்கள் போதவில்லை என்றால் கூடுதல் தகவல்களை திரட்டுவோம். அப்படி ஆதாரங்கள் திரட்டினால் கூட நீதிமன்றத்தில் அவற்றை நிரூபிப்பது மிகவும் கடினம். அதனால் அண்ணாமலை வெளியிடும் தகவல்கள் அல்லது குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை அற்றதாகிவிட வாய்ப்புள்ளது. 12 வருடங்களுக்கு முந்தைய இந்த விஷயத்தை இதுநாள் வரை ஏன் அவரோ அவரது கட்சியோ கையில் எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்புகிறார் ஜெயராமன்.
அடிப்படையில், ஊழல் நடந்ததற்கு முகாந்திரம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். முகாந்திரம் இருந்தால்தான் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறையோ மாநில லஞ்ச ஒழிப்புத்துறையோ விசாரிக்கும். ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு பணப் பரிவர்த்தனை இடம்பெற்றிருந்து முறைகேடு நடந்திருந்தால் சிபிஐ விசாரிக்க முடியும். இல்லாவிட்டால் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்கலாம்" என்று ஜெயராமன் தெரிவித்தார்.
அதிமுக கருத்து
சென்னை செய்தியாளர் சந்திப்பின்போது, திமுக ஆட்சியில் நடந்த ஊழல் மட்டுமின்றி முந்தைய ஆட்சியில் நடந்த ஊழலையும் வெளிப்படுத்துவோம் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அப்படியென்றால் திமுக மட்டுமின்றி முன்பு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த பாஜகவின் கூட்டணியான அதிமுக ஆட்சியையும் அண்ணாமலை குறிப்பிடுவதாகவே கருதப்படுகிறது.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது. அதற்கு அவர், "அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டது எல்லாம் சரிதான். இவரது கட்சிதானே மத்தியில் ஆட்சி செய்கிறது. மாநிலத்தில் ஆளும் கட்சி மீது புகார்கள் இருந்தால் டெல்லியில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட ஊழல் பற்றி சிபிஐ விசாரணை நடத்தி இவர்களுக்கு எல்லாம் எப்படி சொத்துகள் குவிந்தன என கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கலாமே?" என்று கேட்டார்.
அண்ணாமலை குறிப்பிடும் முந்தைய ஆட்சி ஊழல் கருத்து பற்றி கேட்டதற்கு, "மடியில் கணம் இருப்பவர்கள்தான் இதற்கு எல்லாம் பயப்படுவார்கள். எங்களுக்கு எந்த கணமும் இல்லை. அதனால் எங்களுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை," என்கிறார் ஜெயக்குமார்.
இது ஆரம்பம்தான் - தமிழக பாஜக
ஆனால், அண்ணாமலை தெரிவித்துள்ளது வெறும் புகார் மட்டுமல்ல, இதுதான் ஆளும் திமுகவுக்கு எதிரான முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பாஜகவின் ஆரம்க கட்ட நடவடிக்கை என்கிறார் அந்த கட்சியின் மாநில ஊடகப்பிரிவு முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத்.
அண்ணாமலை வெளியிட்ட தகவல்களை வெறும் சொத்து பட்டியல் விவரங்களாக பார்க்கக் கூடாது. அந்த பட்டியலில் தொடர்புடைய நபர்களின் இதற்கு முந்தைய நிதி பின்புலம், அவர்கள் கடந்த 20 வருடங்களில் குவித்த சொத்துகளின் விவரம் அடங்கிய அடுத்த கட்ட பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுவார் என்கிறார் பிரசாத்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை ஏளனம் செய்யும் திமுகவினர், அவர் மீது வழக்கு தொடுப்பது பற்றி எச்சரிக்கும் முன்னர் தங்களுடைய கட்சித் தலைமையின் பழைய நிதி முறைகேடுகள் பற்றிய தகவல்களை ஆராய்ந்து உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார் அவர்.
சட்டத்துக்கு எது தேவை?
இந்தியாவில் மத்திய அரசு, மத்திய அரசுத்துறைகள் தொடர்புடைய ஊழல், முறைகேடு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் அதிகாரத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் பெற்றுள்ளது. இது தவிர, மத்திய அரசு, உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் மூலமாகவும் ஒரு வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க முடியும் என்கிறது மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளம்.
இதுவே மாநில அரசு என வரும்போது, மாநில அரசு வரம்புக்கு உள்பட்ட துறைகள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகரத்துக்கு அதிகாரம் உள்ளது. அதுவே, மாநில முதல்வர், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் அல்லது முறைகேடு புகார்கள் என்றால் அதற்கு முதலில் அரசாங்கம் அல்லது உயர் நீதிமன்ற உத்தரவு மூலமே இந்த இயக்குநரகத்தால் விசாரிக்க முடியும்.
ஒரு மாநிலத்தில் மத்திய-மாநில அரசுகள் சேர்ந்து செயல்படுத்தும் ஒரு மத்திய அல்லது பொதுத்துறை திட்டத்தில் மத்திய அரசின் நிதி 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதில் முறைகேடு புகார்கள் அளிக்கப்பட்டால், அதன் மீதான விசாரணையை மத்திய அரசு நேரடியாக அதன் புலனாய்வுத்துறை மூலமாகவோ அல்லது மாநில அரசுடன் ஆலோசித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாகவோ விசாரிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த திட்டத்தில் முதல்வர், மாநில அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தால் அது பற்றிய தகவல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதன் மூலமோ மாநில ஆளுநரிடம் புகார் தருவதன் மூலமோ தெரிவிக்கப்பட்டால், குற்றச்சாட்டுகள் மீதான அடிப்படை முகாந்திரத்தின் அடிப்படையில் மத்திய புலனாய்வு விசாரணைக்கு நீதிமன்றம் அல்லது ஆளுநர் உத்தரவிடலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்