You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"தமிழ்நாடு வளர்ந்தால், இந்தியாவும் வளரும்" - பிரதமர் மோதியின் உரையும் ஸ்டாலின் வைத்த கோரிக்கையும்
வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய விவேகானந்தரை, தமிழ்நாடு ஹீரோ போல வரவேற்றது என்றும் விவேகானந்தர் வலியுறுத்திய பெண்களின் முன்னேற்றத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பேசிய அவர், விவேகானந்தர் கண்ட கனவு நனவாகும் வகையில் இந்தியாவிற்கான காலம் கனிந்துள்ளது என்று தெரிவித்தார்.
சென்னையில் விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் தொடங்கி வைப்பது, சென்னை- கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குப் பிறகு சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பங்கெடுத்தார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "பிரதமர் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் ரூ.38 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது, அந்தத் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் தொழில் முனைவோர் கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது," என்று குறிப்பிட்டார்.
மேலும், ''உயர்கல்வி, விளையாட்டுத்துறை எனப் பல துறைகளிலும் பெண்கள் தடைகளைத் தகர்த்து வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்தை விவேகானந்தர் அதிகம் வலியுறுத்தினார். அதை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது,'' என்றார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பேசும்போது, திருக்குறள் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதைப் போல, இந்த நிகழ்ச்சியிலும் குறள் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பேசிய மோதி, சென்னை நகரத்தின் உத்வேகம் தனக்குப் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.
பிரதமருக்கு புத்தகம் பரிசளித்த ஸ்டாலின்
முன்னதாக, பிரதமர் மோதி சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு மோதியை வரவேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 'தமிழ்நாட்டில் காந்தியின் பயணம்' என்ற நூலை அளித்து, சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அவ்வப்போது, பிரதமரும் முதல்வரும் இணக்கமாகப் பேசிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை-கோவை இடையிலான ரயில் சேவையைத் தொடங்கி வைத்து, பின்னர் ரயிலில் சிறிதுநேரம் பயணித்தார். ரயிலில் இருந்த மாணவர்களிடம் பிரதமர் உரையாடினார்.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் பிரதமருடன் பங்குபெற்ற முதல்வர் ஸ்டாலின், அவருடன் கைகோர்த்தபடி சில நிமிடங்கள் நின்றிருந்தார். ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழா நிகழ்வில் பிரதமர் மட்டும் பங்குபெற்றார்.
முதல்வர் ஸ்டாலின் பங்குபெறவில்லை. மூன்று நிகழ்வுகளிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்குபெறவில்லை. அவர் கர்நாடகாவில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் காரணமாக அவர் வருகை தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டாலின் வைத்த கோரிக்கை
பல்லாவரம் கிரிக்கெட் மைதானத்தில், தமிழ்நாட்டில் ரூ.3,700கோடி மதிப்புள்ள சாலை மற்றும் ரயில் திட்டங்களை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார். பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் இவ்விழாவில் பேசிய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை போலவே சென்னை-மதுரை பாதையிலும் வந்தே பாரத் ரயில் தேவை என்றும், வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைக்கப்படவேண்டும் என்றும் பிரதமர் மோதியிடம் கோரிக்கை வைத்தார். தனது உரையை தமிழில் பேசினாலும், முக்கிய கோரிக்கைகளை அவ்வப்போது முதல்வர் ஆங்கிலத்திலும் பேசினார்.
ரயில் சேவை குறித்து மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்குத் தேவையான பல ரயில் திட்டங்கள் பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருப்பதாகவும், ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் தேவையான புதிய ரயில் சேவை திட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு போதிய நிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் மோதி முன்னர் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார் என்பதால், மாநில சுயாட்சிக்கு உள்ள முக்கியத்துவம் என்ன என்பது அவருக்குத் தெரியும் என்றும் அதற்கு அவர் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாட்டுக்கு வருவது அருமையான அனுபவம்
இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதுமே தனக்கு அருமையான அனுபவம் என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்போதுமே மத்திய அரசுக்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
''தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு ரூ.6,000கோடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது இதுவரை வரலாறு காணாத அளவிலான ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களைக் கொண்டுவருவதில் அதிக கவனம் எடுத்துவருகிறோம். வந்தே பாரத் ரயில் சென்னைக்கு வந்தபோது, இளம் நண்பர்கள் எவ்வளவு உற்சாகத்தோடு இருந்தார்கள் என்பது எனக்கு தெரியும்.
இந்த விரைவு ரயில் ஜவுளி மற்றும் பிற தொழில்களுக்குத் தேவையான ஆதாரங்களைக் கொண்டுசேர்க்கிறது. வந்தே பாரத் திட்டத்தில், இந்தியாவில் தயாரிப்போம் என்ற கொள்கையை வைத்திருக்கிறோம். அதில் மிகவும் பெருமிதம் கொண்டிருக்கிறோம். அதுவும் அந்த பெருமிதம் தமிழ்நாட்டில், வ.உ.சி.யின் பூமியில் இயல்பான விஷயம். இந்தியாவின் வளர்ச்சிக்கான என்ஜின்களில் தமிழ்நாடும் ஒன்று. அதனால், தமிழ்நாடு வளரும் போது, இந்தியா வளர்கிறது,'' என்றும் மோதி தெரிவித்தார்.
பெரியார் வாழ்க - மோதி வாழ்க கோஷம்
முன்னதாக நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான திமுக, பாஜக தொண்டர்கள் வந்திருந்தனர். அங்கே இரண்டு கட்சி தொண்டர்களும் தங்களது தலைவர்களின் பெயர்களைச் சொல்லி கோஷமிட்டனர்.
திமுகவினர் 'பெரியார் வாழ்க' என்றும் 'ஸ்டாலின் வாழ்க' என்றும் ஒருபக்கம் கோஷமிட, பாஜகவினர் 'பிரதமர் மோதி வாழ்க' என்று கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக காவல்துறையினர் இரண்டு கட்சியினரையும் கட்டுப்படுத்தினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்