You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாடநூலில் வரலாறு நீக்கம்: வாட்ஸ்ஆப் மூலம் போலி வரலாறு பரவும் என 250 வரலாற்று அறிஞர்கள் எச்சரிக்கை
என்.சி.இ.ஆர்.டி. பாட நூல்களில் இருந்து முகலாயர் வரலாறு, 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம், காந்தி படுகொலையில் நாதுராம் கோட்சேவின் பங்கு போன்ற சில குறிப்பிட்ட பகுதிகள் நீக்கப்பட்டதற்கு வரலாற்று அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையிலான கண்ணியை துண்டித்துவிட்டு, அந்த இடைவெளியை வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்படும் சாதிய, வகுப்புவாத போலி வரலாறுகள் மூலம் இட்டு நிரப்ப சதி நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்திய, வெளிநாட்டு வரலாற்று அறிஞர்கள் 250 பேர் இணைந்து இதுதொடர்பாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் பின்வரும் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
250 வரலாற்று ஆய்வாளர்கள் அறிக்கை - விவரம்
12-ம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் ஒட்டுமொத்த பாகங்களும், மற்ற வகுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளையும் நீக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) செயல் மிகுந்த கவலையளிக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பதாகக் கூறி, 6 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு முகலாய தர்பார், 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம், நெருக்கடி நிலை காலம், தலித் எழுத்தாளர்கள், நக்சலைட் இயக்கம், சமத்துவத்துக்கான போராட்டம் போன்ற பகுதிகள் சமூகவியல், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களில் இருந்து நீக்கப்பட்டன.
கொரோனாவில் இருந்து மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் வழக்கொழிந்து பள்ளிக் கல்வி இயல்பு நிலையை அடைந்துவிட்ட பிறகு, என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகள் நீக்கம் அப்படியே தொடர்கின்றன.
12-ம் வகுப்பு வரலாறு பாகம்-2 பாடப் புத்தகத்தில் முகலாயர் வரலாறு முழுமையாகவும், பாகம்-3 வரலாற்றுப் பாடத்தில் நவீன இந்திய வரலாறு குறித்த 2 தலைப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. என்.சி.இ.ஆர்.டி. உறுப்பினர்களே இந்த முடிவை எடுத்துள்ளனர். அந்த பாடப்புத்தகங்களை தயாரித்த வரலாற்றாய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்கவே இல்லை. மிகப் பரந்த விவாதம், ஆலோசனைக்குப் பின்னரே அந்த புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது பொருளடக்கத்தில் மட்டுமின்றி, கற்பித்தல் மற்றும் அதன் வாயிலான இயற்கையான, படிப்படியான வரலாற்றுப் புரிதலை மாணவர்களுக்குத் தரவும் வல்லது.
இந்திய துணைக்கண்டம் மற்றும் உலகளாவிய மனித வரலாற்றின் பன்முகத்தன்மையை முடிந்த வரையிலும் மாணவர்களுக்குக் கொடுக்கும் வகையில் இந்த பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. சில பாடப்பிரிவுகளை அல்லது பக்கங்களை நீக்குதல் என்பது கற்பவர்களிடம் இருந்து மதிப்பு வாய்ந்த உள்ளடக்கங்களை பறிப்பது மட்டுமின்றி, நிகழ்கால, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தயாரிக்கும் கற்பித்தலிலும் பிரச்னைக்குரியதாக மாறியுள்ளது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ள அதேநேரத்தில், அது அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று ஆய்வாளர்களால் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். எவ்வாறாயினும், பாடப்புத்தகத்தில் திருத்தம் என்ற பெயரில் செய்யப்பட்டுள்ள, குறிப்பிட்ட சில பகுதிகளை நீக்கும் நடவடிக்கை பிரிவினைவாத அரசியலை பிரதிபலிக்கிறது.
என்.சி.இ.ஆர்.டி. இயக்குநரின் கருத்துப்படி, மாணவர்களின் சுமையைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. கூற்றுப்படி, கொரோனா பேரிடரின் போது மாணவர்களின் கற்றல் நேர குறைபாடை கருத்தில் கொண்டும், கொரோனாவுக்குப் பிந்தைய தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களின் பாடச்சுமையை கருத்தில் கொண்டும் சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. சில பாடப்புத்தகங்களில் மீண்டும் மீண்டும் வரக் கூடிய பாடங்களை நீக்குவதே பகுத்தறிவுக்கு ஒத்துப் போகும் அறிவார்ந்த நடவடிக்கையாக இருக்க முடியும். தற்போதைய பாடங்களை நீக்கும் முடிவுக்கு பின்னே அரசியல் நோக்கம் இல்லை என்று என்.சி.இ.ஆர்.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்.சி.இ.ஆர்.டி. இயக்குநர் மறுத்தாலும் கூட, தற்போதைய ஆளும் தரப்பின் சித்தாந்தத்துடன் ஒத்துப் போகாத பாடப்பிரிவுகளை என்.சி.இ.ஆர்.டி. நீக்கியிருப்பது, பள்ளிப் பாடப் புத்தகங்களைத் திருத்துவதன் மூலம் பிரிவினைவாத அரசியலை திணிக்கும் முயற்சியை காட்டுகிறது. இந்திய வரலாற்றை ஒருமுகத்தன்மை வாய்ந்த இந்து பாரம்பரியத்தின் நீட்சியாக தவறாகக் கருதும் தற்போதைய மத்திய அரசின் கருத்தியல் செயல்திட்டத்தின் பின்னணியில் என்.சி.இ.ஆர்.டி. நடவடிக்கையை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யும் போது இது தெளிவாகிறது.
அந்த செயல்திட்டத்தின் அடிப்படையில்தான், என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புக்கான வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் “மன்னர்கள் மற்றும் வரலாறு, முகல் தர்பார்” என்ற 9வது அத்தியாயம் நீக்கப்பட்டுள்ளது. கிபி. 16 மற்றும் 17-ம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை முகலாயர்கள் ஆட்சி செய்த போதிலும் அது நீக்கப்பட்டுள்ளது. அந்த கால கட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தை ஆட்சி செய்த முகலாய பேரரசு, விஜய நகர பேரரசு ஆகிய இரண்டுமே முந்தைய புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன.
திருத்தப்பட்ட தற்போதைய புத்தகத்தில், முகலாயர் வரலாற்றைக் கூறும் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. விஜயநகரப் பேரரசு குறித்த பாகங்கள் மட்டும் அப்படியே இடம் பெற்றுள்ளன. இந்த நீக்கம் வகுப்புவாத சிந்தனையை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன. இது 'இந்து' சகாப்தம், 'முஸ்லிம்' சகாப்தம் போன்ற ஆழமான பிரச்சனைக்குரிய யோசனைக்கு வழிவகுக்கிறது. வரலாற்று ரீதியாக மிகவும் மாறுபட்ட சமூகக் கட்டமைப்பின் மீது இந்த வகைப்பாடுகள் விமர்சனமின்றி திணிக்கப்படுகின்றன.
அதேபோல், 12ம் வகுப்பு வரலாறு பாகம்-3 ல் நவீன இந்தியா குறித்த ‘Colonial Cities: Urbanisation, Planning and Architecture’ மற்றும் ‘Understanding Partition: Politics, Memories, Experiences’ ஆகிய 2 பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. காந்தி படுகொலையில் இந்து தீவிரவாதிகளுக்கு இருந்த தொடர்பை அம்பலப்படுத்தும் பாடமும் நீக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 'மகாத்மா காந்தி மற்றும் தேசியவாத இயக்கம்' என்ற பாடத்தில் நாதுராம் கோட்சேவை இந்து தீவிரவாத நாளிதழின் ஆசிரியர் என்ற குறிப்பு நீக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் என்.சி.இ.ஆர்.டி. மேற்கொண்டுள்ள நீக்க நடவடிக்கை, கல்வி அல்லது கற்பித்தல் ரீதியிலா ஆய்வுக்குப் பின் எடுக்கப்பட்டது அல்ல. தற்போதைய ஆட்சியாளர்களின் போலி வரலாற்றுத் திட்டங்களுக்கு ஒத்துப்போகாத பாடங்களே நீக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. வரலாற்றில் எந்தவொரு பகுதியையும் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்குவது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைக்கும் கண்ணியை மாணவர்கள் புரிந்து கொள்ளவிடாமல் செய்வதாகும்.
வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் வரலாற்றின் ஒரு பகுதியை முழுமையாக நீக்குவது தவறான எண்ணங்களையும் தவறான புரிதல்களையும் நிலைநிறுத்துவதுடன் மட்டுமின்றி, ஆளும் தரப்பின் பிளவுபடுத்தும் வகுப்புவாத மற்றும் சாதிய நிகழ்ச்சி நிரலை மேலும் மேம்படுத்திடவும் உதவும்.
என்.சி.இ.ஆர்.டி.யால் வடிவமைக்கப்பட்ட முந்தைய புத்தகங்கள் மற்றும் வரலாற்று பாடத்திட்டங்கள் பல்வேறு குழுக்கள், இனங்கள் போன்ற பலதரப்பட்ட கலாசாரங்களை உள்ளடக்கிய இந்திய துணைக்கண்டத்தைப் பற்றிய புரிதலை வழங்குவதாக இருந்தது. இந்திய துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த பாரம்பரியம் மற்றும் தற்போதைய காலத்தின் வரலாற்று மரபுகள் ஆகியவை பழைய NCERT பாடத்திட்டத்தின் முக்கிய மையமாக இருந்தன. அதில் இருந்து அத்தியாயங்கள் இப்போது மூலோபாய ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன.
11ம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் இருந்து தொழில்துறை புரட்சி உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை குறித்த தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன. 11-ம் வகுப்பு சமூகவியல் புத்தகத்தில் ‘Understanding Society’ என்ற பாடத்தில் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்த மேற்கோள்கள் நீக்கப்பட்டுள்ளன.
பிரிவினைவாத, பாரபட்சமான செயல்திட்டத்தால் உந்தப்பட்டதன் விளைவாக, என்.சி.இ.ஆர்.டி. குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து நீக்கியுள்ளது. காலனித்துவ கட்டுமானங்களும் அவற்றின் சமகால மறுஉற்பத்தியும் இந்திய நாகரிகத்தை ஒற்றைத் தன்மை வாய்ந்த இந்து பாரம்பரியத்தின் விளைபொருளாக தவறாகக் கருதுவதை வெளிப்படுத்துகிறது. அதாவது வரலாற்று ரீதியாக மிகவும் மாறுபட்ட சமூகக் கட்டமைப்பில் 'இந்து சமூகம்' போன்ற பிரிவுகள் விமர்சனமின்றி திணிக்கப்படுகின்றன.
இந்திய துணைக்கண்டத்தில் ஒரே மாதிரியான 'இந்து' சமூகத்தின் தூய்மைவாத வரலாற்றை மாணவர்களுக்கு வழங்க இந்த நீக்குதல்கள் வழிவகுக்கின்றன. இது அரசு உருவாக்கம், பேரரசுகளை கட்டமைத்தல் மற்றும் இடைக்கால மாற்றங்களை ஒரே மாதிரியான 'இந்து' சமூகம் மற்றும் 'இஸ்லாமிய' படையெடுப்பாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இடையிலான நீடித்த போட்டியாக மாற்றுகிறது. பாலினம், சாதி மற்றும் வர்க்க ரீதியிலான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையை மறைத்து, கடந்த காலத்தில் சமூக நல்லிணக்கம் நிலவியது என்பதான கருத்தையும் இது முன்வைக்கிறது.
வரலாறு படிப்பதைக் குறைப்பதன் மூலம் வகுப்புவாத, சாதிய ரீதியிலான போலி வரலாறுகளை பரப்புவதற்கான களம் தயார் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய போலி வரலாறுகள் தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவ விடப்பட்டுள்ளன.
வரலாற்று பாடப்புத்தகங்களில் இருந்து அத்தியாயங்கள் மற்றும் அறிக்கைகளை நீக்கும் என்.சி.இ.ஆர்.டி. முடிவைக் கண்டு நாங்கள் திகைத்துப் போயுள்ளோம். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் சில பாகங்கள் நீக்கப்பட்டதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம். என்.இ.ஆர்.டி. முடிவு பிரிவினைவாத செயல் திட்டத்தால் வழிநடத்தப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தின் அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த கலாச்சாரத்திற்கு எதிரான முடிவு என்பதால் அதை விரைவில் ரத்து செய்ய வேண்டும்.
ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், ஜெயதி கோஷ், பார்பரா டி மெட்காஃப் போன்ற இந்திய மற்றும் சர்வதேச வரலாற்று ஆய்வாளர்கள் 250 பேர் கூட்டாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்