அன்று சித்தப்பாவுக்காக விட்டுக் கொடுத்த அஜித் பவார் இன்று எதிர்க்கத் துணிந்தது ஏன்?

    • எழுதியவர், நாம்தேவ் காட்கர்
    • பதவி, பிபிசி மராத்தி

தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party - NCP) தலைவர் சரத் பவாரின் தம்பி மகனான அஜித் பவார் ஞாயிறன்று (ஜூலை 2) தனது ஆதரவாளர்கள் பலருடன் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்தார், துணை முதல்வராகப் பதவியும் ஏற்றார்.

தற்போது பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா பிளவு சேர்ந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி நடத்துகின்றன. தேவேந்திர ஃபட்னாவிஸ் ஏற்கனவே துணை முதல்வராக இருக்கிறார்.

பதவியேற்ற பின் அஜித் பவார் ‘அடுத்த தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து NCP சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இதற்கு சரத் பவார், ‘NCP யாருடையதென்று மக்கள் முடிவெடுப்பார்கள்’ என்றார்.

அஜித் பவாருக்கு NCPயின் ஆதரவு இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஊடகத் தொடர்பாளர் மகேஷ் பரத் தபாசே கூறியிருக்கிறார்.

பெரிய அரசியல் ஆசைகள் உள்ள தலைவர்

சமீப நாட்களாகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. அஜித் பவார் கலகம் செய்யப்போவதாக பேச்சுகள் அடிபட்டன.

இதற்கிடையில் சரத் பவார் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து, அதை திரும்பப்பெற்றார். அப்போதே கட்சியை அஜித் பவார் கைப்பறி விட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.

பொதுவாகவே, அஜித் பவார், பெரும் அரசியல் ஆசைகள் உள்ள ஒரு தலைவராகப் பார்க்கப்படுகிறார். அவசரமாக முடிவெடுப்பவர். கட்சியின் குறைகளை வெளிப்படையாகப் பேசி, அதைச் சரிசெய்ய வலியுறுத்துபவர்.

ஐந்து முறை துணை முதல்வராகியும், ஒவ்வொரு முறையும் முதல்வர் வாய்ப்பைத் தவற விட்டார்.

அவரது அரசியல் பயணம் எப்படித் துவங்கியது?

பவார் குடும்பத்தின் ஆரம்பகால அரசியல்

சரத் பவாரின் குடும்பம் விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள்.

தாயார் ஷார்தாபாய் பவார், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினராக இருந்தவர்.

அவரது தந்தை கோவிந்த்ராவ் பவார் உள்ளூர் விவசாய தலைவராக இருந்தவர்.

சரத் பவார் 1958ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.

1967-ஆம் ஆண்டு, 27 வயதானபோது, சட்டமன்ற தேர்தலில் பாராமதி தொகுதியிலிருந்து போட்டியிட்டு, முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்கு அவரது அண்ணன் அனந்த்ராவ் பவார் கடினமாக உழைத்தார்.

1977-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பிளவுண்ட போது, இந்திரா காந்தியின் குழுவில் இணைந்தார். ஒரு வருடத்திற்குப் பின், ஜனதா கட்சியில் சேர்ந்து 38 வயதிலேயே முதலமைச்சரானார்.

சரத் பவாரின் தலைமுறையில் அவரது குடும்பத்திலிருந்து வேறு யாரும் அரசியலுக்கு வரவில்லை. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தான் அக்குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்.

ஆனால் அவரது அரசியல் பிரவேசத்திற்குப் பின் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலுக்கு வந்தபோது, நிலைமை முற்றிலுமாக மாறியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

32 வருடங்களாக ஒரே தொகுதியின் எம்.எல்.ஏ

அஜித் பவார், மகாராஷ்டிராவின் தேவ்லாலி எனும் சிறிய ஊரில் 1959ஆம் ஆண்டு பிறந்தார், 1982ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.

முதலில் சர்க்கரை ஆலைகளின் கூட்டுறவு உறுப்பினர், கூட்டுறவு வங்கியின் தலைவர் போன்ற பதவிகளில் இருந்தவர், 1991ஆம் ஆண்டு பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் அதை அவரது சித்தப்பா சரத் பவாருக்காக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.

இதைத்தொடர்ந்து, அவர் அப்பகுதியின் அரசியலில் முக்கியமானவராக உருவெடுத்தார்.

1991ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை, பாராமதி தொகுதியில் போட்டியிட்டு ஏழுமுறை தொடர்ந்து வென்றார். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கும் மேலாக பாராமதி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

அவரது அரசியல் பயணத்தை கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் உத்தவ் பட்சல்கரின் கருத்துப்படி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் அப்பகுதியில் அரசியல் செய்துவந்த காலத்தில், அஜித் பவார் கட்சிக்குள் இளைஞர்களைக் கொண்டுவந்தார்.

சித்தப்பாவின் வழியில் துவங்கி, தனித்த அடையாளத்தை உருவாக்கினார்

சித்தப்பா சரத் பவாருக்காக எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தபின் அஜித் பவார் தன் கவனத்தை மாநில அரசியல் பக்கம் திருப்பி ஆர்வமாக ஈடுபடத் துவங்கினார்.

1991ஆம் ஆண்டு வேளாண் துறைக்கான இணை அமைச்சராக இருந்தார்.

அதன்பின் பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் மும்பையில் பெரும் கலவரங்கள் வெடித்தன. அதைச் சமாளிக்க, அனுபவசாலியான சரத் பவாரை முதல்வராக்கினார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்.

உடனடியாக பதவியேற்ற சரத் பவார், அஜித் பவாரை மின்சாரத் துறை அமைச்சராக்கினார்.

அதன்பின், 1995ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோற்று, சிவசேனா-பா.ஜ.க கூட்டணி மீண்டும் வென்றது. சரத் பவர் மீண்டும் எம்.பி ஆனார். அஜித் பவாரோ மாநில அரசியலிலேயே தங்கிவிட்டார்.

இந்நிலையில் அவர் மகாராஷ்டிராவில் காங்கிரஸின் செல்வாக்கினை மேம்படுத்தி, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். தான் சரத் பவாரின் அரசியல் வாரிசு என்ற நிலையை உருவாக்கினார், என்று தனது கட்டுரை ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் கிரண் தாரே கூறுகிறார்.

அதன்பின் 1999ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரானார்.

2004ஆம் ஆண்டு, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து தேர்தலில் வென்றன. காங்கிரசுக்கு 69 தொகுதிகளும், தேசியவாத காங்கிரசுக்கு 71 தொகுதிகளும் கிடைத்தன. ஆனால் கூட்டணிக் கணக்குகளைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தார் சரத் பவார். அப்படிச் செய்திருக்காவிட்டால், அப்போது அஜித் பவார் முதல்வராகியிருக்கக் கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இதற்குக் காரணம், அப்போதைய தேசியவாத காங்கிரசில் முதல்வர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்டனர் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அபய் தேஷ்பாண்டே.

சமீபத்தில் ஒரு பேட்டியில், இதைப்பற்றிப் பேசும்போது, அஜித் பவார் இப்படி சொன்னார்: “2004ல் தேசியவாத காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்திருக்கக் கூடாது. அப்போது கட்சியில் இருந்த யாராவது ஒருவரை முதல்வராக்கியிருக்க வேண்டும்.”

அஜித் பவரின் அரசியல் வாழ்வில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இல்லை. 1999ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை அணைகள் கட்டுவதில் ஊழல் செய்ததாகவும், 2005ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை கூட்டுறவு வங்கிகளில் கடன் மோசடி குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்தது.

சுப்ரியா சூலேவின் அரசியல் பிரவேசம் உருவாக்கிய போட்டி

2006ஆம் ஆண்டு, சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலில் நுழைந்தார், ராஜ்ய சபா உறுப்பினரானார்.

அப்போது, அஜித் பவாருக்கும் சுப்ரியாவுக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை, என்கிறார் அபய் தேஷ்பாண்டே. “ஆனால் சுப்ரியா சூலே தேசியவாதியாக அறியப்பட்டு, அவரது தலைமை பரவலாக வெளியே தெரிந்தது. அஜித் பவாரின் செல்வாக்கும் கட்சிக்குள் வளர்ந்ததால் அவர்களிடையே போட்டியும் வளர்ந்தது,” என்கிறார்.

2009ஆம் ஆண்டு, சுப்ரியா சூலேவுக்கு, பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இது அஜித் பவாரின் செல்வாக்கு மிக்க பகுதி.

ஆனால் அஜித் பவாரும் சுப்ரியா சூலேவும் தங்களுக்கிடையே போட்டி இல்லை என்று கூறிவந்திருக்கின்றனர்.

ஆனால் சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: