பாரதம் என்ற பெயர் எப்படி வந்தது?

    • எழுதியவர், அஜித் வட்னர்கர்
    • பதவி, மொழியியலாளர்

ஜி-20 மாநாட்டையொட்டி இந்திய குடியரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்துக்காக அச்சிடப்பட்ட அழைப்புக் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்புக் கடிதத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ‘இந்தியக் குடியரசுத் தலைவர்’ என்பதற்குப் பதிலாக ‘பாரதக் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

'இந்தியா' என்ற வார்த்தையை நாட்டின் பெயராக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தற்போது அதை 'பாரத்' என்று மட்டுமே அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசிடமிருந்தோ, குடியரசுத் தலைவர் அலுவலகத்திடமிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை. ஆனால் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் தங்களது அழைப்புக் கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டனர்.

இதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, “ஜி-20 மாநாட்டுக்கான விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்புக் கடிதத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக, பாரதக் குடியரசுத் தலைவர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘INDIA’ கூட்டணியைக் கண்டு இவ்வளவு பயமா? இது மோதி அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் மீது காட்டும் வெறுப்பா அல்லது ஒரு பயந்த சர்வாதிகாரியின் தனிப்பட்ட விருப்பமா?" என்று கூறியிருக்கிறது.

இந்த அழைப்பு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'இந்தியா' கூட்டணிக்கு பா.ஜ.க, அஞ்சுவதாக ஒருபுறம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட, மறுபுறம் ஆளும்கட்சி தலைவர்கள், 'பாரத்' என்ற பெயரை பயன்படுத்துவதில் அரசியலமைப்பின்படி தவறில்லை என கூறுகின்றனர்.

பாரதம் என்ற பெயர் எப்படி வந்தது?

பழங்காலத்திலிருந்தே, இந்திய நிலம் ஜம்புத்வீபம், பாரத்காண்ட், ஹிம்வர்ஷ், அஜ்னாபவர்ஷ், பாரத்வர்ஷ், ஆர்யவர்தா, ஹிந்த், ஹிந்துஸ்தான் மற்றும் இந்தியா என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆனால் இவற்றில் ‘பாரதம்’ என்ற பெயர் மிகப் பிரபலமாகவும் பரவலாகவும் இருந்து வருகிறது.

இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களைப் போலவே, அதன் பெயரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறாக மாறிவந்துள்ளது.

சில சமயங்களில் இந்தப் பெயர்களில் புவியியல் வெளிப்படுகிறது, சில சமயங்களில் சாதி உணர்வு, சில நேரங்களில் கலாச்சாரம்.

ஹிந்த், ஹிந்துஸ்தான், இந்தியா போன்ற பெயர்களில் புவியியல் வெளிப்படுகிறது. இந்தப் பெயர்களின் மூலத்தில் சிந்து நதி முக்கியமாகக் காணப்படுகிறது, ஆனால் சிந்து ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் நதி மட்டுமல்ல.

சிந்து என்பது ஒரு நதியின் பெயர், இது கடலைக் குறிக்கும் சொல்லும் ஆகும். நாட்டின் வடமேற்கு பகுதி ஒரு காலத்தில் சப்தசிந்து அல்லது பஞ்சாப் என்று அழைக்கப்பட்டது. எனவே இது ஏழு அல்லது ஐந்து முக்கிய நீரோடைகளுடன் கூடிய ஒரு பெரிய வளமான பகுதியைக் குறிக்கிறது.

இதேபோல், பாரதம் என்ற பெயருக்குப் பின்னால், சப்தசாந்தவப் பகுதியில் செழித்தோங்கிய அக்னிஹோத்திரக் கலாச்சாரத்தின் (அக்கினியில் வேள்வி வளர்ப்பது) அடையாளம் உள்ளது.

இந்தியாவின் 'பாரத்' என்ற பெயரை யாரெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்கள்?

புராண காலத்தில் ‘பரதன்’ என்ற பெயரில் பலர் இருந்துள்ளனர். துஷ்யந்த மன்னனின் மகனைத் தவிர, தசரதனின் ஒரு மகனும் பரதன் என்று அழைக்கப்பட்டார். இவர் இமாச்சலத்தின் கடான் என்ற பகுதியை ஆண்டதாக நம்பப்படுகிறது.

நாட்டிய சாஸ்திரத்தை எழுதியவர் பரதமுனி. மகாபாரதத்தில், பரதன் என்ற ஒரு ராஜரிஷி பற்றிய குறிப்பு உள்ளது.

மகதராஜ இந்திரத்யும்னனின் அரசவையில் பரத முனிவர் இருந்தார். பத்மபுராணத்தில் பரதன் என்ற ஒரு கொடிய பிராமணன் பற்றியக் குறிப்பு வருகிறது.

துஷ்யந்த மன்னனின் மகன் பரதன் நான்கு திசைகளின் நிலத்தையும் கையகப்படுத்தி, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, அஸ்வமேத யாகம் செய்தார், அதனால் அவரது ராஜ்யத்திற்கு பாரதவர்ஷம் என்று பெயர் வந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.

அதுபோலவே, மனிதர்களைப் பிறப்பித்து அவர்களைப் பேணிக் காத்தவர் என்பதால் மனுவுக்கு பரதன் என்று பெயர் வந்ததாக மத்ஸ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஆட்சி செய்த பகுதி பாரதவர்ஷம் என்று அழைக்கப்பட்டது.

ஜைன மரபில் கூட இப்பெயருக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. ரிஷபதேவரின் மூத்த மகனான மகாயோகி பரதனின் பெயரால் இந்த நாடு பாரதவர்ஷம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் பரதம் என்ற சொல்லுக்கு ஆண்டு, பகுதி, பிரிவு, போன்ற பொருளும் உள்ளன.

துஷ்யந்தன் – சகுந்தலையின் மகன் பரதன்

மகாபாரதத்தின் ஆதிபர்வத்தில் ‘பாரதம்’ என்ற பெயருக்குப் பின்னால் ஒரு கதை உள்ளது.

மகரிஷி விஸ்வாமித்திரர் மற்றும் தேவலோகப் பெண்ணான மேனகையின் மகள் சகுந்தலைக்கும், புருவஞ்சியின் மன்னர் துஷ்யந்தனுக்கும் இடையே கந்தர்வ திருமணம் நடைபெறுகிறது. அவர்களின் மகனின் பெயர் பரதன்.

பரதன் பிற்காலத்தில் ஒரு பேரரசராக மாறுவார் என்றும், இந்த நிலத்தின் பெயர் பாரதம் என்று அழைக்கப்படும் என்றும் கன்வ முனிவர் ஆசீர்வதித்தார்.

பாரதம் என்ற பெயரின் தோற்றம் பற்றிய இந்தக் காதல் கதை பிரபலமானது. இக்கதையை அடிப்படையாக வைத்தே சமஸ்கிருத மகாகவியான காளிதாசர் அபிஞானசகுந்தலம் என்ற நாடகத்தை இயற்றினார். அடிப்படையில் இது ஒரு காதல் கதை என்பதால் தான் இந்த கதை பிரபலமடைந்தது என்று நம்பப்படுகிறது.

இரண்டு காதலர்களின் இந்த அழியாத காதல் கதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. சகுந்தலை-துஷ்யந்தனின் மகன் பற்றி மற்ற விஷயங்கள் தெரியவில்லை.

துஷ்யந்தனின் மகனான பரதனுக்கு முன்பே பரதஜன் என்பவர்கள் இந்த நாட்டில் இருந்ததாக வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள். எனவே, இந்தியாவின் பெயர் ஜாதி-குழுவின் பெயரால் பிரபலமடைந்தது, எந்தவொரு குறிப்பிட்ட நபரின் பெயரிலும் அல்ல என்பது தர்க்கரீதியாக நம்பப்படுகிறது.

பாரத கானாவிலிருந்து பாரதம்

இங்குள்ள மக்கள் அக்னி வேள்வியைச் செய்தவர்கள். வேதத்தில் பாரதம் என்றால் நெருப்பு, என்ற பொருளும் உள்ளது.

சரஸ்வதி மற்றும் ககர் நதிக்கரையில் ஆட்சி செய்த மன்னன் பரதன். சமஸ்கிருதத்தில் 'பார்' என்ற சொல்லுக்குப் போர் என்பதும் ஒரு பொருள்.

இரண்டாவது பொருள் 'குழு' அல்லது 'மக்கள்' மற்றும் மூன்றாவது பொருள் 'வாழ்க்கை'.

பிரபல மொழியியலாளர் டாக்டர் ராம் விலாஸ் சர்மாவின் கூற்றுப்படி, "இந்த அர்த்தங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவும், ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவும் தெரிகிறது. எனவே, பார் என்றால் போர் மற்றும் வாழ்வாதாரம் என்று இரண்டும் இருந்தால், அது இந்த வார்த்தையின் சொந்த சிறப்பு அல்ல. 'பார்' என்பதன் வேர்ச்சொல் ‘கானா’. அதாவது ‘ஜனம்’ என்பதுபோல. கானாவைப் போலவே, இது எந்த ஜனத்திற்கும் பயன்படுத்தப்படலாம். தவிர, அது 'பாரத்' என்ற பெயரில் பிரபலமான அந்த குறிப்பிட்ட கானாவின் குறிகாட்டியாகவும் இருந்தது."

பாரதம் என்பதன் பொருள் என்ன?

உண்மையில், பாரதம் என்ற சொல்லின் கதை ஆரிய வரலாற்றில் மிகவும் பின்னோக்கிச் செல்கிறது. சில சமயங்களில் போர், நெருப்பு, ஒன்றியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய 'பாரத்' என்பதன் பொருள் வெறும் பெயர்ச்சொல்லாக குறைக்கப்பட்டது . அதனுடன் 'தாசரதேய பாரதம்' சில நேரங்களில் தொடர்புபடுத்தப்படுகிறது. துஷ்யந்தனின் மகன் பரதன் பாரதத்தின் தோற்றத்தின் பின்னணியில் நினைவுகூரப்படுகிறார்.

'பாரதி'க்கும் 'சரஸ்வதி'க்கும் பாரதத்துடன் உள்ள உறவு

ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், அக்னி வேள்வியை விரும்பிய பரதர்களின் கலாச்சாரம் பரவி, பரதம் மற்றும் அக்னி என்ற சொற்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தன. பாரதம் என்ற வார்த்தை நெருப்பின் பெயராக மாறியது.

தேவாஷ்ரவன் மற்றும் தேவ்வதன் என்ற இரண்டு பரதவம்சத்தைச் சேர்ந்த முனிவர்கள் குடைவதன் மூலம் நெருப்பை உருவக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்தனர் என்று குறிப்புகள் கூறுகின்றன.

டாக்டர் ராம் விலாஸ் ஷர்மாவின் கூற்றுப்படி, ரிக்வேதத்தின் கவிஞர்கள் நெருப்புடனான பாரதத்தின் உறவின் வரலாற்றுப் பாரம்பரியத்தை அறிந்திருக்கிறார்கள்.

பாரத வம்சத்தினருடனான தொடர்பின் காரணமாக நெருப்பு ‘பாரதம்’ என்று அழைக்கப்பட்டது. அதேபோல யாகத்தில் தொடர்ந்து கவிதை ஓதுவதால் கவிகளின் பேச்சு பாரதி என்று அழைக்கப்பட்டது.

இந்தக் கவிதைப் பாராயணம் சரஸ்வதி நதிக்கரையில் நடப்பதால் இந்தப் பெயரும் கவிஞர்களின் பேச்சுடன் தொடர்புடையது.

பாரதியும் சரஸ்வதியும் பல வேத மந்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தசராக்ய போர் அல்லது பத்து அரசர்களின் போர்

பண்டைய நூல்களில், வேத காலத்தின் புகழ்பெற்ற சாதியான ‘பரதன்’ என்ற பெயர், பல சூழல்களில் தோன்றுகிறது. இது சரஸ்வதி நதி அல்லது இன்றைய காகர் கரையில் குடியேறிய குழுவினரை குறிக்கிறது. இவர்கள் அக்னியால் வேள்வியைச் செய்பவர்கள்.

இந்த பாரத ஜனம் என்ற பெயரில், அக்காலத்தில் இந்த நிலம் முழுக்க பாரதவர்ஷம் என்று அழைக்கப்பட்டது. அறிஞர்களின் கூற்றுப்படி, சுதஸ் என்பவர் பாரத சாதியின் தலைவர்.

வேத காலத்திற்கு முன்பே, வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த மக்களின் பல சங்கங்கள் இருந்தன. அவர்கள் ஜனம் என்று அழைக்கப்பட்டனர்.

இந்த வகையில், பரதர்களின் இந்த சங்கம் பாரத ஜனா என்ற பெயரில் அறியப்பட்டது. மற்ற ஆரிய சங்கங்களும் பல மக்களாகப் பிரிக்கப்பட்டனர். அவர்களில் புரு, யது, துர்வசு, திரித்சு, அனு, த்ருஹ்யு, காந்தாரர், விஷானின், பக்த, கேகய, சிவன், அலின், பாலன், திரிட்சு, சஞ்சய் முதலிய குழுக்களும் இருந்தன.

இவர்களில் பத்து குழுக்களுடன் சுதஸ் மற்றும் அவரது திரிட்சு பழங்குடியினர் சண்டையிட்டனர்.

சுதஸின் திரிட்சு குலத்திற்கு எதிராக, பத்து முக்கிய சாதிகள் அல்லது பழங்குடியினர் சண்டையிட்டனர். இதில் பஞ்சாஜன் (பிரிக்கப்படாத பஞ்சாப் என்று புரிந்து கொள்ளப்படுகிறது) அதாவது புரு, யது, துர்வசு, அனு மற்றும் த்ருஹ்யு, பலனாஸ் (போலான் பாஸ் பகுதி), அலின் (காபிரிஸ்தான்), ஷிவ் ( சிந்து), பக்த் (பஷ்டூன்) மற்றும் விஷனினி பழங்குடியினர் சேர்க்கப்பட்டனர்.

மகாபாரதத்திற்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்னான 'பாரதம்'

இந்த மாபெரும் போர் மகாபாரதத்திற்கு 2,500 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, கிறிஸ்துவுக்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பெரும் போர் நடந்தது.

ஒரு உள்நாட்டுத் தகராறு பெரிய போராக மாறியது. ஆனால் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான தீர்க்கமான சண்டையில் நாட்டின் பெயர் ஏன் வந்தது?

இதற்குக் காரணம், இந்தியாவின் புவியியல் எல்லையில் வரும் ஏறக்குறைய அனைத்து ராஜ்ஜியங்களும் இந்தப் போரில் பங்கேற்றன, எனவே இது மகாபாரதம் என்று அழைக்கப்படுகிறது.

தசராக்ய போர் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இன்றிலிருந்து ஏழரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று பொருள்.

இதில், திரிட்சு சாதி மக்கள், பத்து மாநிலங்களின் ஒன்றியத்தின் மீது வரலாறு காணாத வெற்றியைப் பெற்றனர். திரிட்சு மக்கள் பரதவர்களின் கூட்டமைப்பு என்று அழைக்கப்பட்டனர். இந்தப் போருக்கு முன்பு, இந்தப் பகுதி பல பெயர்களில் பிரபலமானது.

இந்த வெற்றிக்குப் பிறகு, அப்போதைய ஆரியவர்த்தத்தில் பரதர்களின் மேலாதிக்கம் அதிகரித்தது மற்றும் அப்போதைய ஜனபதாக்களின் கூட்டமைப்பு பாரத் என்று பெயரிடப்பட்டது.

இந்தோ-ஈரானிய கலாச்சாரம்

இப்போது ஹிந்த், ஹிந்துஸ்தான் பற்றி பேசலாம்.

இரானியர்கள்-இந்துஸ்தானியர்கள் பழைய உறவினர்கள்.

இரான் முன்பு பெர்சியாவாக இருந்தது. அதற்கும் முன்பு, ஆரியம் என்று இருந்தது. இந்த பெயர்கள் ஜோராஸ்டிரியத்தின் புனித நூலான அவெஸ்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்துகுஷ் மலைக்கு அப்பால் இருந்த ஆரியர்களின் கூட்டமைப்பு இரான் என்றும், கிழக்கில் இருந்தவர்களின் கூட்டமைப்பு ஆரியவர்தா என்றும் அழைக்கப்பட்டது.

அண்மையில், இந்தியாவின் பெயர் இரானியர்களால் மேற்குப் பகுதிக்கு தெரிவிக்கப்பட்டது. குர்திஷ் எல்லையில் உள்ள பெஹிஸ்துன் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள ஹிந்துஷ் என்ற வார்த்தை இதற்கு சாட்சி.

பாரசீகர்களும் அரபு மொழியைக் கற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களது சொந்த பாணியில்.

ஒரு காலத்தில் அங்கு நெருப்பை வணங்கும் ஜோராஸ்ட்ரியர்களின் இருப்பு பலமானதாக இருந்தது. அங்கு இஸ்லாம் கூடத் தோன்றவில்லை. இந்த விஷயங்கள் இஸ்லாத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கும், கிறிஸ்துவுக்கு நான்கு நூற்றாண்டுகளுக்கும் முந்தையவை.

அவெஸ்டாவிற்கும் சமஸ்கிருதத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. இந்துகுஷ்-பாமியானின் இந்தப் பக்கத்தில் யாகம் நடத்தப்பட்டிருந்தால், ஆர்யமான், அதர்வன், ஹோம், சோம், ஹவன் போன்ற சொற்களும் புழக்கத்தில் இருந்தன.

ஹிந்த், ஹிந்தாஷ், ஹிந்த்வான்

ஹிந்துஷ் என்ற வார்த்தை கிறிஸ்துவுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அக்காடிய நாகரீகத்தில் இருந்தது.

அக்காட், சுமர், எகிப்து ஆகிய நாடுகளுடன் இந்தியா உறவு கொண்டிருந்தது. இது ஹரப்பான் காலத்தைப் பற்றியது.

சிந்து ஒரு நதி மட்டுமல்ல, அது கடல், நீரோடை மற்றும் தண்ணீரைக் குறிக்கும்.

ஏழு நதிகளைக் கொண்ட சிந்துவின் புகழ்பெற்ற 'சப்தசிந்து' பகுதி பண்டைய பாரசீக மொழியில் 'ஹஃப்தஹிந்து' என்று அழைக்கப்பட்டது.

'இந்து' என்பதற்கு வேறு அர்த்தம் உள்ளதா?

ஹிந்த், இந்து, ஹிந்த்வான், ஹிந்துஷ் போன்ற பல பெயர்ச்சொற்கள் மிகவும் பழமையானவை.

இந்தஸ் என்பது ஹிண்டாஷ் என்பதற்கு சமமான கிரேக்கச் சொல்லாகும். இது இஸ்லாத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது.

கிரேக்க மொழியில் ‘பாரதம்’ என்பதற்கு இந்தியா என்றும் சிந்து என்பதற்கு இண்டஸ் என்றும் வழங்கப்பட்டது. அவை இந்தியாவின் அடையாளம் என்பதற்குச் சான்றாகும். சமஸ்கிருதத்தில் 'ஸ்தான்' என்பது பாரசீக மொழியில் 'ஸ்டான்' ஆகிறது.

இவ்வாறே ‘ஹிந்துடன்’ ‘ஸ்டான்’ இணைந்து ஹிந்துஸ்தான் உருவானது. ஹிந்து மக்கள் வசிக்கும் இடம்.

இந்துக்கள் மட்டுமே மெசபடோமிய கலாச்சாரங்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இந்து என்ற சொல் கிரேக்கம், சிந்து, அரபு, அக்காட் மற்றும் பாரசீக உறவுகளின் விளைவாகும்.

'இண்டிகா' என்ற சொல்லை மெகஸ்தனிஸ் பயன்படுத்தினார். அவர் பாடலிபுத்திரத்தில் நீண்ட காலம் தங்கியிருந்தார். ஆனால் அங்கு செல்வதற்கு முன், அவர் பக்த்ரா, பக்த்ரி (பாக்ட்ரியா), காந்தாரா, தக்ஷஷிலா (தக்சலா) ஆகிய பகுதிகளைக் கடந்து சென்றார்.

ஹிந்த், ஹிந்தவான், ஹிந்து போன்ற சொற்கள் இங்கு பரவலாக இருந்தன.

கிரேக்க ஸ்வரதந்திரத்தின் படி, அவர் சிந்து, இந்தியா போன்றவற்றின் வடிவங்களை ஏற்றுக்கொண்டார். இது கிறிஸ்துவுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கும் முஹம்மது நபிக்கு 10 நூற்றாண்டுகளுக்கும் முந்தையது.

ஜம்புத்வீப்பை என்பது மிகப் பழமையான பெயர்.

ஆனால் இவற்றிற்கு நிறைய விவரங்கள் தேவை. தீவிர ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

ஜாமுன் பழம் சமஸ்கிருதத்தில் 'ஜம்பு' என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த மத்திய நிலத்தில் அதாவது இன்றைய இந்தியாவில் ஏராளமான ஜாமுன் மரங்கள் இருந்ததாகப் பல குறிப்புகள் உள்ளன. அதனால்தான் இது ஜம்புத் தீவு என்று அழைக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: