You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக நிர்வாகி கொலை: திமுக நிர்வாகி கைது - உளவுத்துறை எச்சரித்தும் நடந்த விபரீதம்
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலைக்கு உள்ளூர் திமுக நிர்வாகி காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை கையாண்டு வந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யும் நோக்கத்துடன் இரு பிரிவினரும் உள்ளனர் என்று உளவுத் துறை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளது.
அந்தத் தகவலை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதால்தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாரா என்ற கேள்வியும், கொலை செய்தது உண்மையில் யார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
முன்விரோதம் காரணமா?
திருநெல்வேலி மாவட்டம் மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன் (34). இவர் பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகச் செயல்பட்டு வந்துள்ளார். இது தவிர ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு இருந்தார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நெல்லை மாநகர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் குற்றப் பின்னணி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
அதேபோல் திருநெல்வேலி மாநகராட்சி மண்டல சேர்மன் ரேவதியின் கணவர் பிரபு(46). இவர் திருநெல்வேலி மாநகரின் திமுக துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே அரசியல் சார்ந்த முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரை பயணம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது.
அப்போது ஜெகன் மூளிக்குளம் பகுதியில் இருந்து அதிக அளவில் பொது மக்களைத் திரட்டிச் சென்று கூட்டத்தில் பங்கேற்க வைத்திருக்கிறார். மேலும் அப்பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பிரபுவுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த பிரபு தனது ஆட்களை ஏவிவிட்டு ஜெகன் பாண்டியனை கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு ஜெகன் பாண்டியன் வீட்டின் அருகே இருக்கும் சுடலை மாடன் கோவிலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஜெகன் பாண்டியனை கழுத்து, தலை, மார்பகப் பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திற்கு உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் வந்த போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியைத் தேடும் பணியில் காவல்துறையினர் இறங்கினர்.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர்.
குற்றவாளியை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள்
ஜெகன் பாண்டியனின் உறவினர்கள் திமுகவை சேர்ந்த பிரபுதான் இந்தக் கொலைக்கு முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவத்துக்குப் பிறகு, மூளிக்குளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கொலை நடந்த மறுநாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையும் மீறி சாலை மறியலைத் தொடர்ந்ததால் போலீசார் அவர்களை குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றனர்.
அப்போது சில பெண்கள் காவல்துறை அதிகாரியைத் தாக்கியதால் பதற்றம் நிலவியது.
உதவி ஆணையர் பிரதீப் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
அதில் இந்த கொலை தொடர்பாக விக்னேஷ், பிரபு, அனிஷ், சந்துரு பரமராஜ் உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், தனிப்படை போலீசார் பிரபுவை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பிரபு நேரில் சரணடைந்தார்.
அங்கு உதவி ஆணையர்கள் பிரதீப், அனிதா ஆகியோர் பிரபுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தன்னுடன் இருக்கும் கூட்டாளிகள் ஜெகன் பாண்டியனை கொலை செய்துவிட்டதாகக் கூறியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திமுகவினரே கொலைக்கு காரணம் என அண்ணாமலை குற்றச்சாட்டு
முக்கியக் குற்றவாளியான திமுக பிரபுவை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து ஜெகன் பாண்டியனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாளையங்கோட்டை மருத்துவமனை முன்பாக ஜெகன் உடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, "பாஜகவை வளர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக திருநெல்வேலி வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் பாண்டியன் திமுகவினரால் கொல்லப்பட்டு இருக்கிறார்.
திமுக பொறுப்பாளரான பிரபு மீது 16 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஜெகன் பாண்டியனின் தாய்க்கு வீடு கட்டிக கொடுப்பேன் என உறுதி அளித்துள்ளேன்.
தொடர் அரசியல் அழுத்தம் காரணமாகவே பிரபு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி," எனக் கூறினார்.
"பாஜக அழுத்தம் காரணமாகவே கைது நடவடிக்கை"
பாஜக மாநிலத் தலைவர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக சட்டமன்ற குழுத் தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இளைஞரணி பொதுச் செயலாளராக ஜெகன் பாண்டியன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவுக்காக மிகத் தீவிரமாக களப்பணி ஆற்றி வந்தார். அவரது மறைவு திருநெல்வேலி மாவட்ட பாஜகவிற்கு மிகப்பெரிய இழப்பு.
அவர் நல்ல இளைஞராக கட்சிப் பணியைச் செய்ததோடு சமூகப் பணிகள் பலவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்தக் கொலை தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொடுத்த அழுத்தம் காரணமாகவே குற்றவாளிகள் சரணடைந்தனர்.
இந்த கொலையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதில் நீதி கிடைக்க வேண்டும்," என்றார்.
கொலை நடக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை
பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் பாண்டியனுக்கும் திமுகவின் மாநகர் துணை செயலாளர் பிரபுவுக்கும் இடையே முன்விரோதம் வலுத்து வந்தது.
இருவரும் ஒருவரையொருவர் கொலை செய்யும் நோக்கில் சுற்றி வருகின்றனர் என்ற தகவலை காவல்துறையினக்கு உளவுத்துறை தெரிவித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து கொலை நடைபெற்ற நாள் காலை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் காசி பாண்டியன் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசியிருக்கிறார். இருவரும் சமரசம் ஏற்பட்டு காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அன்று இரவே ஜெகன் பாண்டியன் கொலை செய்யப்பட்டார். உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் வழக்கை உரிய முறையில் கையாளாத பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் உத்தரவை வழங்கியுள்ளார்.
தற்போது காசி பாண்டியன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திடீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "குற்ற சரித்திரப் பதிவேடு உடைய நபர்களை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும். அவர்களை ஆர்.டி.ஓ, தாசில்தார் முன்னிலையில் ஆஜர் செய்து நன்னடத்தை பத்திரம் பெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை குற்றப் பின்னணி உடையவர்களின் செயல்பாடுகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றப் பின்னணி உடையவர்களை அவர்களது வழக்குகளில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதன் மூலம் பெருங்குற்றங்களைத் தவிர்க்கலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்," என்று கூறினார்.
இதனிடையே பாளையங்கோட்டை காவல் நிலையத்தின் ஆய்வாளர் காசி பாண்டியனின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி நெல்லை மாவட்ட தேவேந்திரர் இளைஞரணி சார்பில் மாநகர் பகுதிகள் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் "தமிழக அரசே காவல்துறையே நேர்மை மிக்க துணிச்சலான காசி பாண்டியன் பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்க” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்