You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கணவர் சொத்தில் மனைவிக்கு சரிபாதி உரிமை - குடும்பத்தில் பெண்களுக்கு சமமான மதிப்பை ஈட்டித் தருமா?
- எழுதியவர், சுசீலா சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கணவன் தன் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்துகளில் அவரது மனைவிக்கும் சம உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளது.
துபாயில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
துபாயில் இருந்து தான் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் தன் மனைவி ஐந்து விதமான சொத்துகளை வாங்கி உள்ளதாகவும், அந்த சொத்துகளுக்கு முழு உரிமை கொண்டாடுவது தொடர்பாக அந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடும்ப பொறுப்புகளை ஒரு பெண் அக்கறையுடன் கவனித்துக் கொள்வதால் தான், அவரின் கணவர் தன் பணியை சிறப்பாக செய்து பணம் சம்பாதிக்க முடிகிறது. எனவே சொத்துகள் ஒரு கணவரின் பெயரில் வாங்கப்படுகிறதா அல்லது அவரது மனைவியின் பெயரில் வாங்கப்படுகிறதா என்பது விஷயமல்ல என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
“கணவனோ, மனைவியோ யார் குடும்பத்தை கவனித்து கொண்டாலும், அவர்கள் வாங்கும் சொத்துகளில் இருவருக்கும் சம உரிமை உண்டு. அதேசமயம் ஒரு ஆண் ஒரு நாளைக்கு எட்டு மணி வேலை செய்கிறார் என்றால், இல்லதரசியாக இருக்கும் அவரின் மனைவி 24 மணி நேரமும் உழைக்கிறார்” என்று இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
“ஓர் இல்லத்தரசியாக இருப்பவர் உணவு சமைப்பது மட்டுமின்றி, குடும்ப மருத்துவர், நிதி ஆலோசகர் போன்று பல்வேறு பொறுப்புகளை வகிக்கிறார். இல்லத்தரசிகள் மேற்கொள்ளும் இதுபோன்ற பணிகளின் பயனாகவே, அவர்களின் கணவர் அலுவலகத்தில் செவ்வனே பணிபுரிய முடிகிறது. இல்லத்தரசி என்று ஒருவர் இல்லையென்றால், அவர் நிலையில் இருந்து வீட்டில் அவர் மேற்கொள்ளும் பல்வேறு பணிகளை செய்யும் நபர்களுக்கு, கணவர் நிறைய செலவு செய்ய வேண்டி வரும்” என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
நீதிமன்றத்தின் கருத்துக்கு வரவேற்பு
குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களின் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தி உள்ள இந்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பெண்ணியம் பேசும் ஆர்வலர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர்.
“என்ன தான் இருந்தாலும், பொதுவாக பெண் குழந்தைகள் தான் பிறந்த வீட்டில் இரண்டாம்பட்சமாக தான் பார்க்கப்படுகின்றனர். திருமணத்திற்கு பின் அவர்கள் தங்கள் கணவர் வீட்டுக்கு உரிமையானவர்கள் ஆகின்றனர்.
ஓர் இல்லத்தரசியாக, வாழ்நாள் முழுவதும் தான் வாழ்க்கைப்பட்ட குடும்பத்திற்காக உழைக்கும் பெண், ஏதோயொரு காரணத்திற்காக தனது கணவனின் வீட்டில் இருந்து வெளியேற நேர்ந்தால், அப்போது அவர் உணர்வுபூர்வமாக மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியான ஒத்துழைப்பையும் இழக்க நேரிடுகிறது.
இதுபோன்ற சூழல்களில் சொத்துரிமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ள கருத்து, பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் மிக்கவர்களாக மாற வழி வகுக்கும்” என்று பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வு துறையை சேர்ந்த டாக்டர். அமீர் சுல்தானா தெரிவித்துள்ளார்.
வீட்டை அன்றாடம் சுத்தம் செய்வது. குழந்தைகள், முதியோர் என்று குடும்ப உறுப்பினர்களை பராமரிப்பது என பெண்கள் தினமும் பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்தப் பணிகளுக்காக அவர்கள் ஊதியம் எதுவும் பெறுவதில்லை என்று அமீர் சுல்தானா கூறுகிறார்.
உழைப்புக்கு ஊதியம்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கமல் ஹாசன், 2018 இல் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து அரசியலில் அடியெடுத்து வைத்தார். அப்போது அவர், “தமது கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகள் அன்றாடம் மேற்கொள்ளும் பணியை கணக்கில் கொண்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். அதன் மூலம் அவர்களின் திறன் மற்றும் சுயாட்சி அதிகரித்து உலகளாவிய அடிப்படை வருமானத்திற்கு வழி பிறக்கும்” என்று கமல் ஹாசன் கூறியிருந்தார். அவரது இந்த திட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவரான சசி தரூர் வரவேற்றிருந்தார்.
இதேபோன்று, பெண்கள் வீட்டில் மேற்கொள்ளும் பணிகள், அவர்களின் கணவன்மார்கள் அலுவலகத்தில் செய்யும் வேலைக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்று 2021 இல் மேல்முறையீட்டு மனு ஒன்றை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதாவது, டெல்லியை சேர்ந்த ஓர் தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விபத்தில் இறந்த தம்பதியில், பெண் குடும்ப தலைவியாக இருந்ததால், அவர்களது குடும்பத்தின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தின் அடிப்படையில் இழப்பீட்டை 22 லட்சம் ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, “ஒரு இல்லத்தரசியின் வருமானத்தை நிர்ணயிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதன் மூலம் விருப்பத்தின் பேரிலோ, சமூக, கலாசார நெறிமுறைகளின் காரணமாகவோ வீட்டு வேலைகள் செய்யும் அனைத்து பெண்களின் பணியும் அங்கீகரிக்கப்படும்.
அத்துடன், இல்லதரசிகளின் கடின உழைப்பு, சேவைகள் மற்றும் தியாகங்களின் மதிப்பை சட்டமும், நீதிமன்றங்களும் நம்புகின்றன என்பதையும் சமூகத்துக்கு உணர்த்துவதாக அமையும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
அதே நேரம், “ இல்லதரசிகளின் வேலைக்கு ஊதியம் வழங்கும் யோசனை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாக இருக்கும். ஆனால், பொருளாதார பகுப்பாய்வில் பராம்பரியமாக இந்த விஷயம் கருத்தில் கொள்ளப்படாமல் உள்ளது” என்றும் உச்ச நீதிமன்றம் கவலையுடன் தெரிவித்திருந்தது.
குடும்ப நலனில் பெண்களின் பங்களிப்பு
இல்லத்தரசிகள் பொருளாதாரத்தில் மறைமுகமாக பங்களிப்பு செய்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு குடும்பத்திற்காக பெண்கள் மேற்கொள்ளும் உழைப்பு ஒருபோதும் கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NTIC) பேராசிரியர் சோல்னேட் தேசாய் கூறுகிறார்.
அதற்கு அவர் ஓர் உதாரணத்தையும் கூறுகிறார். “பெண்கள் குடும்ப விவசாயத்தையும், ஆண்கள் வெளியில் வேலை செய்யும் குடும்பங்களில் வருமானம் அதிகமாக இருப்பது எங்களின் ஓர் ஆய்வில் தெரிய வந்தது. இத்தகைய சூழலில் வீட்டு வேலைகளில் பெண்களின் பங்கு அங்கீகரிக்கப்படாவிட்டால், கணவரின் வீட்டு சொத்திலும் அவர்களுக்கு உரிமை வழங்கப்படாது.
அதேசமயம், பெண்களின் உழைப்பு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும்போது, பொருளாதாரத்தில் அவர்கள் எவ்வளவு பங்கு வகிக்கிறார்கள் என்பதும் தெரிய வரும். மேலும் அவர்களுக்கான கொள்கையை உருவாக்கவும் இது உதவும்” என்கிறார் தேசாய்.
மறுபுறம் மற்றொரு முக்கிய விஷயத்தை குறிப்பிடுகிறார் பொருளாதார நிபுணரான ஜெயந்தி கோஷ். “சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வேலைக்கான வரையறையை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, ஒருவர் செய்யும் வேலைக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதை பெறுவது வேலைவாய்ப்பாக கருதப்படுகிறது. அதேநேரம், சம்பளம் இல்லாமல் ஒருவர் ஒரு வேலையை செய்தாலும், அதுவும் வேலையாகவே கருதப்படும்” என்று கூறுகிறார் அவர்..
பெண்கள் செய்யும் வேலைகளை பணியாகவே இந்த சமூகம் கருதுவதில்லை. ஆனால் இந்தப் போக்கு மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
வேலையில் பாரபட்சம்
உலகில் எந்த வேலையை செய்பவர் அதிக ஊதியம் பெறுபவராக இருக்க வேண்டும் என்று 2017 இல் உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற மனுஷி சில்லரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு “ஒரு தாயாக சேவை ஆற்றுபவருக்கே இந்த உலகில் அதிக சம்பளம் அளிக்கப்பட வேண்டும்” என்று மனுஷி பதிலளித்தார்.
ஏழு மணி நேரத்துக்கு மேல் உழைக்கும் இல்லத்தரசிகள்
ஆனால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 15.98 கோடி பெண்கள் வீட்டு வேலைகளை செய்வதையே தங்களின் பிரதான பணியாக கொண்டுள்ளனர்.
‘இந்தியாவில் நேரத்தை பயன்படுத்துதல்’ என்ற தலைப்பில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2019 இல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி, பெண்கள் அன்றாடம் சராசரியாக 299 நிமிடங்களை வீட்டு வேலைகளுக்காக (ஊதியம் இல்லாமல்) செலவிடுகிறார்கள். இதுவே ஆண்கள் 97 நிமிடங்கள் மட்டுமே இந்தப் பணிகளுக்காக ஒதுக்குகிறார்கள்.
அதேநேரம், குடும்ப உறுப்பினர்களை கவனிக்க பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 134 நிமிடங்களையும், ஆண்கள் 76 நிமிடங்களும் செலவிடுகின்றனர் என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்தது.
சிந்தனையில் மாற்றம் வேண்டும்
“உன் கணவர் என்ன செய்கிறார்’ என்று ஒரு பெண்ணிடம் கேட்டால், ‘அவர் பணிபுரிகிறார்’ என்று உடனே பதில் வரும். ஆனால், பெண்களின் பணியாக கட்டமைக்கப்பட்டுள்ள வீட்டு வேலைகளை பெண்கள் உழைப்பாக கருதாமல், அதை தங்களின் பொறுப்பாக கருதுகின்றனர். ஆனால் அவர்களின் இந்த உழைப்பும் கணக்கில் கொள்ளப்பட்டு அதற்காக ஊதியமும் அளிக்கப்பட வேண்டும்” என்கிறார் ஹரியானாவில் பெண்களின் உரிமைகளுக்காக போராடி வரும் ஜக்மதி சங்வான்.
என்ன கஷ்டம் வந்தாலும் வீட்டு வேலைகளை செய்வதையோ, குழந்தைகள் மற்றும் முதியோர்களை கவனிப்பதையோ பெண்கள் கைவிட மாட்டார்கள் என்பது சமூகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
எனவே, “வீட்டில் பெண்கள் மேற்கொள்ளும் பணிகள் அத்தியாவசியமாக கருதப்படும் நிலை உருவாக வேண்டும்" என்று வலியுறுத்துகிறார் பொருளாதார நிபுணரான ஜெயந்தி கோஷ்.
வீட்டு வேலைகளை பகிர்வது தொடர்பாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள புரிதலில் மாற்றங்கள் வர வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதாவது, அலுவலக பணிக்கு செல்லவில்லையென்றால், வீட்டில் உள்ள அனைத்துப் பணிகளுக்கும் தாங்கள் தான் பொறுப்பு; அவற்றை நிறைவேற்றுவது தங்களின் கடமை என்ற எண்ணத்தில் பெண்களிடம் மாற்றம் வர வேண்டும்.
மற்றொரு புறம், வேலைக்கு செல்லும் காரணத்தால் வீட்டு வேலைகளில் குறைவான பங்களிப்பை அளித்தால் போதும் என்ற ஆண்களின் நினைப்பிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் அவர்கள்.
எனினும், மாறிவரும் இன்றைய வாழ்க்கை சூழலில் கணவன் -மனைவி இருவரும் பணிக்கு செல்லும் குடும்பங்களில், கணவர்களே தாமாக முன்வந்து வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதை காண முடிகிறது. ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இருவரும் பணிக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களில் அலுவலக வேலையுடன், வீட்டு வேலைகளையும் பெண்களே அதிகம் செய்ய வேண்டியுள்ளது.
இத்தகைய சூழலில், நீதிமன்றங்களின் இதுபோன்ற கருத்துக்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கு மட்டும் நிவாரணம் அளிப்பதாக அமைகிறது. பெண்கள் செய்யும் வீட்டு வேலைக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைக்க, ஒட்டுமொத்த சமூகத்தின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்