You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறுமிகளின் ஆபாசக் காட்சிகளை AI மூலம் உருவாக்கும் கும்பல்கள் - பிபிசி ஆய்வில் வெளியான அதிர்ச்சி
- எழுதியவர், ஏங்கஸ் க்ராஃபோர்ட் மற்றும் டோனி ஸ்மித்
- பதவி, பிபிசி நியூஸ்
குழந்தைகள் மீது பாலியல் இச்சைகொள்ளும் நபர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சிறுமிகளின் தத்ரூபமான ஆபாச காட்சிகளை உருவாக்கி விற்பனை செய்து வருவதை பிபிசி அம்பலப்படுத்தியுள்ளது.
பேட்ரியான் (Patreon) போன்ற உள்ளடக்கப் பகிர்வு தளங்கள் மூலம் இந்த படங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் படங்களை ஏராளமான நபர்கள் பணம் கொடுத்து பதிவிறக்கம் செய்கின்றனர்.
இது போன்ற செயல்களை 'ஒரு போதும் ஏற்க முடியாது' என பேட்ரியான் வலைதளம் தெரிவித்துள்ளது.
சிறிதும் அக்கறையின்றி 'பொறுப்பில்லாமல்' ஒரு சில நிறுவனங்கள் இது போல் முறைகேடான வழிகளில் 'பெரும் பொருள்' ஈட்ட விரும்புவது மிகவும் 'கண்டிக்கத்தக்கது' என பிரிட்டன் காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
'ஸ்டேபில் டிஃப்யூசன்' (Stable Diffusion) எனப்படும் வரைகலை மென்பொருளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இது போன்ற படங்கள் உருவாக்கப்படுகின்றன.
மனித அறிவாற்றலுடன் கூடிய சில பணிகளை கணினிகள் மூலம் மேற்கொள்ள செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.
'ஸ்டேபில் டிஃப்யூசன்' மென்பொருளைப் பயன்படுத்தும் போது, நாம் கொடுக்கக்கூடிய விவரங்களின் அடிப்படையில் காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இப்படி எந்த ஒரு காட்சியையும் நாம் உருவாக்கமுடியும். இந்த வழியில் தான் இதுபோன்ற படங்கள் வரையப்படுகின்றன.
ஆனால், இந்த மென்பொருளைப் பயன்படுத்தி குழந்தைகள் மற்றும் சிறுமிகள் தொடர்பான பாலியல் காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டு விற்பனை செய்யப்படுவதை பிபிசி கண்டுபிடித்துள்ளது. இவற்றில் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
குழந்தைகள் தொடர்பான இணையவழிப் பாலியல் குற்றங்களுக்கு எதிராகச் செயல்படும் பிரிட்டன் போலீசார் ஏற்கெனவே இது போன்ற குற்றங்களைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவரும், ஊடகவியலாளருமான ஆக்டேவியா ஷீப்ஷாங்ஸ் பல மாதங்களாக புலனாய்வு செய்துவருகிறார். இந்த குற்றத்தை அம்பலப்படுத்துவதற்காக என்.எஸ்.பி.சி.சி. என்ற குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தின் மூலம் அவர் பிபிசியைத் தொடர்புகொண்டார்.
"செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு இந்தப் படங்கள் உருவாக்கப்படுவதால், இது போன்ற படங்கள் ஆற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்துள்ளன. சிறுமிகள் மட்டுமின்றி, தவழும் பெண் குழந்தைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை," என்றார் அவர்.
குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற படங்கள் கற்பனையாக வரையப்பட்டாலும், அவை உண்மையான படங்களைப் போன்றவை தான் என்றே சட்டம் கருதுகிறது. பிரிட்டனில் இது போன்ற படங்களை வைத்திருப்பது, பிறருக்குப் பகிர்வது, பதிவேற்றம் செய்வது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகின்றன.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு காவல் பிரிவின் தலைவர் இயான் கிரிட்ச்லி இது குறித்துப் பேசிய போது, 'உண்மையான குழந்தைகளைப் பயன்படுத்தி இது போன்ற காட்சிகளை உருவாக்கவில்லை' என்றும், 'இந்த படங்களை உருவாக்கிய போது யாருக்கும் எந்தத் தீங்கும் நேரவில்லை' என்றும் வாதிடுவது தவறானது என்றார்.
இது போல் கற்பனையான படங்களை உருவாக்கி குழந்தைகள் மீதான பாலியல் இச்சைகளை வளர்க்கும் எந்த ஒரு நபரும் "இதே பாதையில் பயணித்தால் உண்மையிலுமே ஒரு குழந்தையை பாலியல் ரீதியாகத் தாக்கும் நிலை உருவாகும்," என அவர் எச்சரித்தார்.
இது போன்ற சட்டவிரோதப் படங்கள் மூன்று நிலைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன
1. குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொண்ட நபர்கள் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு இப்படங்களை உருவாக்குகின்றனர்.
2. ஜப்பான் நாட்டில் இருந்து செயல்படும் படங்களைப் பகிர்வதற்கான சமூக வலைதளமான Pixiv மூலம் இந்தப் படங்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன.
3. இந்த சமூக வலைதள கணக்குகள் பேட்ரியான் போன்ற படங்களைப் பகிரும் தளங்கள் மூலம் வெளியிடப்படும் போது, பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் நபர்களுக்கு இவை எளிதாக கிடைக்கின்றன.
இது போன்ற படங்களை உருவாக்குபவர்கள் ஜப்பான் நாட்டில் படங்களைப் பகிர்வதற்கென்றே செயல்படும் சமூக வலைதளமான Pixiv மூலம் பகிர்கின்றனர்.
ஜப்பானில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பாலியல் படங்களை கற்பனையாக வரைவது சட்டவிரோதம் அல்ல என்பதால் இந்த இணையதளம் அந்நாட்டில் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த வலைதளத்தில் படங்களைப் பதிவேற்றம் செய்து விளம்பரம் செய்யப்படுகிறது. இதற்கென சில பிரத்யேக சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், தவறான நோக்கில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் படங்களைப் பயன்படுத்துவதை ஒரு போதும் ஏற்கமுடியாது என்றும், கடந்த மே 31 முதல் இது போன்ற படங்களைத் தடை செய்துவிட்டதாகவும் Pixiv வலைதளத்தின் செய்தித் தொடர்பு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், அந்த வலைதளத்தில் பகிரப்படும் விவரங்களைக் கண்காணிக்கும் நடைமுறைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும், அதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு இது போல் குற்றங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது போல் படங்களை உருவாக்குபவர்கள் அதை ஒரு தொழிலாகவே செய்துவருவதாக பிபிசியிடம் பேசிய ஷீப்ஷாங்ஸ் தெரிவித்தார்.
"ஏராளமான படங்கள் இது போல் உருவாக்கப்படுகின்றன. ஒரு மாதத்துக்கு குறைந்தது 1,000 படங்களையாவது உருவாக்க அவர்கள் முயல்கிறார்கள்," என்றார் அவர்.
Pixiv தளத்தில் பகிரப்படும் இந்த படங்களுக்கு பின்னூட்டம் இட்டவர்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் இச்சை உள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கும் படங்களைத் தவிர, உண்மையிலுமே இது போன்ற காட்சிகளை படம்பிடித்துக் காட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்த இணையதளத்தில் இது போல் செயல்படும் சில குழுக்களை ஷீப்ஷாங்ஸ் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
"100 பேரை உறுப்பினராகக் கொண்டுள்ள இந்த குழுக்களுக்குள் தகவல்களைப் பகிரும் சிலர், 'ஓ... இது போன்ற உண்மையான காட்சிகளைக் காணும் லிங்க்குகள் இங்கே கிடைக்கின்றன பாருங்கள்' என்பது போன்ற தகவல்களையும் ஆர்வத்துடன் பகிர்கின்றனர்," என்றார் ஷீப்ஷாங்ஸ்.
"அது போன்ற படங்கள் எப்படியிருந்தன என்பது குறித்து, நான் இதுவரை கேள்விப்பட்டிராத சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்தி சிலர் விளக்கங்களைப் பகிர்ந்தனர்."
பலவிதமான கட்டண முறைகள்
Pixiv தளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை வெளியிட்டவர்களில் பலர், 'மாற்றம் செய்யப்படாத உண்மையான' படங்களைப் பார்க்க இந்த லிங்க்கைப் பயன்படுத்தவும் என அமெரிக்காவில் செயல்படும் பேட்ரியான் இணையதளத்திற்கான லிங்க்குகளை அளித்துள்ளனர்.
பேட்ரியான் இணையதளம் சுமார் 400 கோடி அமெரிக்க டாலர்கள் விலைமதிக்கத்தக்க தொழிலைச் செய்துவருகிறது. இந்த இணையதளத்தில் 2,50,000-க்கும் அதிகமான படைப்பாளிகள் இருப்பதாகவும், அவற்றில் பல கணக்குகள் பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்குச் சொந்தமானவை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேட்ரியான் வலைதளத்துக்கு மாத சந்தா செலுத்தி இந்த நபர்களின் கணக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அதன் மூலம் சிறந்த படைப்பாளிகளின் போட்காஸ்ட்கள், படக்காட்சிகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் பெறமுடியும் இதற்கு குறைந்தது மாதம் ஒன்றுக்கு 3.85 டாலர் கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆனால், செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் வரையப்பட்டிருப்பது, இந்தப் படங்கள் பேட்ரியான் வலைதளத்தில் கிடைப்பது, தேவைப்படும் படங்களைப் பெற பல்வேறு கட்டண முறைகள் இருந்தது உள்ளிட்ட விவரங்கள் எங்கள் புலனாய்வில் தெரியவந்தது.
"சிறுமிகளின் ஆபாசக் காட்சிகளைப் படமெடுக்க பயிற்சி அளித்து வருகிறேன். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்," என ஒரு வாடிக்கையாளர் பேட்ரியான் வலைதளத்தில் எழுதியுள்ளார். மற்றொருவர், சிறுமிகள் தொடர்பான உண்மையான ஆபாசப் படங்களைப் பார்க்க ஒரு மாதத்துக்கு 8.30 டாலர் கட்டணம் செலுத்தவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
உதாரணத்துக்காக ஒரு பதிவை எடுத்து பேட்ரியான் நிறுவனத்துக்கு பிபிசி அனுப்பிவைத்தது. அந்த பதிவைப் பகிர்ந்த கணக்கை உடனடியாக அகற்றிய பேட்ரியான், "எங்கள் கொள்கைகளை இந்த கணக்கு வைத்திருந்த பயனர் மீறிவிட்டார்," என்றும் தெரிவித்திருந்தது.
"இது போன்ற ஆபாச காட்சிகளை உருவாக்கும் நபர்களுக்கு எங்கள் வாடிக்கையாளர்கள் நிதி அளிக்கமுடியாது என்பது மட்டுமல்ல, ஒருபோதும் அதுபோன்ற செயல்களை அனுமதிக்கமுடியாது," என பேட்ரியான் தெரிவித்துள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு இது போல் உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள் இணையதளங்களில் கொட்டிக் கிடப்பது "உண்மையில் வருத்தமளிக்கும்" விஷயமாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் ஆபாசக் காட்சிகளைப் பகிர்வதை நாங்கள் ஏற்கெனவே தடை செய்துள்ளோம்," எனத் தெரிவித்துள்ள பேட்ரியான், இந்த வகையான பகிர்வுகளைத் தடுக்க பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகக் கூறியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டெபிலிட்டி ஏஐ (Stability AI) என்ற நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து ஸ்டேபில் டிஃப்யூஸன் (Stable Diffusion) என்ற செயற்கை நுண்ணறிவுடன் காட்சிகளை உருவாக்கும் வலைதளத்தைத் தொடங்கியது.
அதன் பின் அந்த வலைதளத்தின் பல்வேறு பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பதிப்புக்களில் என்ன மாதிரியான உள்ளடக்கங்கள் இடம்பெறவேண்டும் என்பது குறித்த நெறிமுறைகள் பல மென்பொருட்களின் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு பதிப்பில் அனைத்து கட்டுப்பாடுகளையும் புறந்தள்ளிவிட்டு புதிய படைப்புக்களை உருவாக்க பயனர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் மூலம் சட்டவிரோதமாக படங்கள் உள்ளிட்ட எந்த மாதிரியான காட்சிகளையும் உருவாக்க முடியும்.
"குழந்தைகள் மற்றும் சிறுமிகளைத் தவறாக காட்சிப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத மற்றும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட படைப்புக்கள் முழுக்க முழுக்க தடை" செய்யப்பட்டுள்ளதாக ஸ்டெபிலிட்டி ஏஐ தெரிவித்துள்ளது.
"எங்களுடைய வலைதளத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம்."
செயற்கை நுண்ணறிவு அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் பொதுமக்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கு எந்ந மாதிரியான ஆபத்துக்கள் நேரும் என்பது குறித்த கவலைகளும் அதிகரித்துவருகின்றன.
இது போல் வெள்ளமெனப் பெருகும் தத்ரூபமான படங்கள், எதிர்காலத்தில் சில குற்றச் செயல்களில் பாதிக்கப்படுபவர்களைக் கண்டுபிடிப்பதில் வேலைப்பளுவை அதிகரிக்கும் என இயான் கிரிட்ச்லி கவலை தெரிவித்துள்ளார். இதனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது கூடத் தெரியாமல் போய் விடும் என்றார் அவர்.
"இது போல் ஒரு குழந்தையின் தத்ரூபமான ஆபாச உருவம் இணையதளத்தில் பரவும் போது, உண்மையில் அப்படி ஒரு குழந்தை உலகில் இருக்கிறதா இல்லை அது வெறும் பொம்மையா என்பதைக் கண்டறிவதில் கூட அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் வேலைப் பளு அதிகரிக்கும் நிலை உருவாகலாம்," என அவர் விளக்கினார்.
இது மனித சமூகத்துக்கு ஒரு முக்கியமான தருணம் எனக் கருதுவதாகவும் இயான் கிரிட்ச்லி கூறினார்.
"வளர்ந்துகொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இணையதளமும், புதிய தொழில்நுட்பங்களும் ஏராளமான புதிய நல்வாய்ப்புக்களையும், உதவிகளையும் அளிப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் மோசமான விளைவுகளை நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்," என எச்சரித்தார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்