மாணவர்களின் தலைமுடியில் ஆசிரியர்கள் அதிக அக்கறை செலுத்துவது அவசியமா?

    • எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
    • பதவி, பிபிசி தமிழ்

சில நாட்களுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

‘ஆசிரியர்கள் மாணவர்களின் உடை, சிகை, மற்றும் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமா?’ என்பதே அது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், 12ஆம் வகுப்பு மாணவன் தனது தலைமுடியைச் சரியாக வெட்டவில்லை என்ற கோபத்தில், அம்மாணவனைத் தள்ளி விட்டிருக்கிறார். அதில் சுவற்றில் மோதி, அம்மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் உடை ஒழுக்கம் குறித்தும், தற்கால மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக பிபிசி தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கல்வி உளவியலாளர்கள் ஆகியோரிடம் பேசியது.

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் நடக்கும் வகுப்பறைகள்

ஒரு மாணவரின் தோற்றத்திற்கும் அவரது கற்றல் திறனுக்கும் தொடர்பில்லை என்று ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும், என்கிறார் ஆசிரியரும் கல்விச் செயற்பாட்டாளருமான சு. உமா மகேஷ்வரி.

பொதுவாக, தலைமுடியைச் சரியாக வெட்டாமல், ஒழுங்காக தலை சீவாமல் வரும் மாணவர்கள் சரியாகப் படிக்க மாட்டார்கள், சொல்படி நடக்க மாட்டர்கள் என்ற பிம்பம் ஆசிரியர்கள் மத்தியில் உண்டு என்கிறார் அவர். “இது ஒரு பொதுப்பிம்பம். ஆனால் இவையெல்லாம் பிரச்னைகளே அல்ல என்று ஆசிரியர்கள் உணர வேண்டும்,” என்கிறார் உமா மகேஷ்வரி.

இன்றைய வகுப்பறைகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருமே பல நெருக்கடிகளுக்கிடையேதான் செயல்பட வேண்டியிருப்பதாகக் கூறுகிறார் உமா மகேஷ்வரி. பாடத்திட்டம், மதிப்பீடு, தேர்வு, ஆகியவற்றினால் உண்டாகும் நெருக்கடியை ஆசிரியர்கள் மாணவர்களின் மீது காட்டுவது பல சமயங்களில் நடக்கிறது என்கிறார் அவர். “இதனால் மாணவர்கள் படிப்பிலிருந்து மேலும் விலகிப்போகக் கூடும்,” என்கிறார்.

‘சென்சிட்டிவான’ இன்றைய மாணவர்கள்

அதேபோல், இக்காலத்தின் மாணவர்கள் மிகவும் ‘சென்சிட்டிவாக’ இருக்கின்றனர் என்கிறார் ஆசிரியரும், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவருமான த. அருளானந்தம். “தலைமுடி, கம்மல் போன்றவற்றைப்பற்றி ஆசிரியர்கள் கடுமையாக நடந்துகொண்டால், மாணவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை,” என்கிறார் அவர்.

மேலும், சீருடை என்பது கட்டாயம். ஆனால் அதற்குமேல் மாணவர்களின் தலைமுடி, அணிகலன்கள் ஆகியவற்றைப்பற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்லை என்பது அவரது கருத்து.

“இன்று இதுதான் சரியான ஆடை, இதுதான் சரியான தோற்றம் என்று யாராலும் வரையறுக்க முடியாது. அதற்கும் மேல் பள்ளிகளில் இதுசார்ந்த விதிகள் இருக்கவெண்டுமெனில் கல்வித்துறை அதற்கான கலந்துரையாடல் மூலம் சட்டப்பூர்வமான விதிகளைக் கொண்டுவர வேண்டும்,” என்கிறார் அவர்.

அந்நியமாகும் மாணவர்கள்

பொதுவாக ஆசிரியர்கள், மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை எனும் ஆதங்கத்தை அவர்களது தலைமுடி, பழக்கவழக்கங்கள், மற்றும் அவர்களது நண்பர்களை குறைகூறுவதன் மூலம் வெளிப்படுத்துகின்றனர், என்கிறார் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார்.

“தலைமுறை இடைவெளியினால், இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களின் உலகத்திற்கு வெளியே இருக்கின்றனர். ஆசிரியர்கள் அறிவுரை சொல்வது மாணவர்களை அந்நியப்படுத்துகிறது. மாணவர்கள் பேசும் மொழி ஆசிரியர்களுக்கு புதியதாக இருக்கிறது,” என்கிறார்.

மேலும், “ஆசிரியர் அதிகமாக அறிவுரை கூறினால், மாணவர்கள் அவர்களை ‘பூமர்’ என்று ஏளனம் செய்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள்,” என்கிறார் சரண்யா.

இதன்மூலம் மாணவர்கள் அந்நியப்படுவதுமட்டுமல்ல, சில சமயங்களில் அவர்கள் பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிடுவதும் நடக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

ஆசிரியர்-மாணவர் சிக்கல்களுக்கு என்னதான் தீர்வு?

இப்பிரச்னைகளுக்கு ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், உளவியலாளர்கள் மூவரும் சொல்லும் சில பொதுவான தீர்வுகள்:

1) ஆசிரியர்கள் வகுப்பறைகளை சுவாரஸ்யமானவையாக மாற்றவேண்டும்

2) எல்லாவற்றிற்கும் தண்டிப்பதே தீர்வு என்றில்லாமல், மாணவர்களோடு உரையாடவேண்டும்

3) துரிதமாக மாறிவரும் காலத்திற்கேற்ப, ஆசிரியர்களுக்கான பயிற்சியும் 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப் படவேண்டும்.

உளவியலாளர் சரண்யாவின் கருத்துப்படி, இன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி பழையதாகிவிட்டது. “ஆனால் மாணவர்களின் உளவியல் வெகுவாக மாறிவிட்டது. அதற்கேற்ப, ஒவ்வொரு 5 வருடத்திற்கும், மாணவர்களின் உளவியலையும், அவர்களது உலகத்தையும் புரிந்துகொள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கவேண்டும்,” என்கிறார்.

அதேபோல் உமா மகேஷ்வரி, அசிரியர்கள் வகுப்பறைகளை மாணவர்களுக்கு சுவாரஸ்யமானவையாக மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

வகுப்பறைகளை சுவாரஸ்யமாக்கினால் இடைநிற்றலையும் தடுக்கலாம் என்கிறார் சரண்யா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: