மகாராஷ்டிர நிலச்சரிவு: 109 பேரின் கதி என்ன? வாகனங்களே செல்ல முடியாத இடத்தில் மீட்புப் பணி எப்படி நடக்கிறது?

“இரவு 10:30 மணிக்கு இது நடந்தது. பூமி திடீரென அதிர்ந்தபோது, நாங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினோம். எங்கள் இரண்டு வீடுகளில் மொத்தம் 10 அல்லது 12 பேர் இருந்தார்கள்.

நாங்கள் அனைவரும் தப்பித்து வெளியே வந்து, இரவு முழுவதும் மழையிலேயே இருந்தோம். ஆனால் என் அக்காவின் குடும்பம் நிலச்சரிவில் புதையுண்டு இறந்துவிட்டது,” என்று கண்ணீர் சிந்தியபடி சம்பவத்தின்போது நடந்தது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் விவரித்தார்.

மேலும் அவர், தனது மூத்த சகோதரியின் குடும்பம் முழுவதும் இறந்துவிட்டதாகவும் ஒரேயொரு மகன் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் ஆனால் அவரையும் தற்போது காணவில்லை என்றும் தெரிவித்தார்.

இர்ஷல்வாடி நிலச்சரிவில் புதையுண்ட வீட்டில் இறந்துபோன ஒரு குடும்பத்தினுடைய உறவினரின் வேதனைக் குரல் இது.

இந்தப் பெண்கள் விபத்து நடந்த இடத்திற்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் அடிவாரத்தில் தங்கள் உறவினர்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது. அதில் பலரும் மனமுடைந்து நிற்கின்றனர். அவர்களுடன் இருந்த சின்னஞ்சிறு குழந்தைகளும் அழுதுகொண்டே நின்றிருந்தார்கள்.

“எங்கள் வீடு மாடியில் இருந்தது. வெளியிலிருந்து சிலர் அழைத்தபோதுதான் எங்களுக்கு என்ன நடக்கிறது எனத் தெரிய வந்தது. அம்மா, அண்ணன், அண்ணி எல்லோரும் இருந்தார்கள். இடிபாடுகளுக்கு நடுவே ஒரு சிறுவன் மாட்டிக்கொண்டான். அவனால் வெளியே வர முடியாமலே போய்விட்டது.

இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை. மலை இடிந்து விழுமென்று நாங்கள் நினைக்கவே இல்லை. அதனால்தான் இங்கு மக்கள் நம்பி வாழ்ந்தார்கள். ஆனால், திடீரென இப்படியொரு பேரிடர் நடந்தது அதிர்ச்சியாக இருக்கிறது,” என்று சம்பவம் பற்றிய அதிர்ச்சி விலகாமல் அங்கு நின்றிருந்த பெண்களில் ஒருவர் விவரிக்கிறார்.

நிலச்சரிவில் சிக்கிய மக்களின் நிலை என்ன?

மகாராஷ்டிராவில் உள்ள ராய்கார்ட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 12 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை 119 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 109 பேரை காணவில்லை. அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

இந்தப் பேரிடரில் இதுவரை என்ன நடந்தது? நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களின் நிலை என்ன?

ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமம் மற்றும் பிற கிராமங்களில் உள்ள பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுக்காகக் கதறி அழுதுகொண்டிருந்தனர். அவர்களது உறவினர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா இல்லையா என அவர்களுக்குத் தெரியவில்லை.

கடந்த புதன்கிழமையன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டு வெளியே ஓடத் தொடங்கினர். அதில் சிலர் பிழைத்தனர், மற்றவர்கள் சிக்கிக் கொண்டனர்.

நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட தங்கள் குடும்பத்தினர் எங்கே, அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களைச் சந்திப்போமா இல்லையா என்று உயிர் பிழைத்தவர்கள் கவலையில் உள்ளனர்.

இந்த கிராமம் ராய்காடின் கலபூர் தாலுகாவில் உள்ள இர்ஷல்காட் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் பெய்த கனமழையால் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிறகு இன்று காலையில்(ஜூலை 21) முதல் மீட்புப் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இர்ஷல்வாடி குடியிருப்புப் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதால், அங்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் மழை பெய்து வருவதால், இர்ஷல்வாடி அருகே மக்கள் கூட்டமாகக் கூடவேண்டாம் எனவும் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ளதால், அத்தியாவசியமாகவோ மிக முக்கியமாகவோ ஏதேனும் வேலைகள் இருந்தால் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வருமாறும் மற்ற நேரங்களில் வெளியே வருவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இர்ஷல்வாடிக்கு நிவாரணப் பணிகளுக்காகச் சென்றிருந்த குழுவைச் சேர்ந்த ஊழியரான ஷிவ்ராம் யஷ்வந்த் துமானே என்பவரும் இந்தப் பேரிடரில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சட்டப்பேரவையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்தச் சம்பவம் குறித்த அனைத்து தகவல்களையும் விரிவாகக் கூறினார்.

சட்டப்பேரவையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறிய தகவல்கள்

  • இர்ஷல்வாடி உயரமான மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அங்கு செல்ல சாலை வசதி இல்லை. மணவ்லி கிராமத்திலிருந்து நடந்து செல்லவேண்டும்.
  • அங்கு 48 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த கிராமத்தின் மக்கள்தொகை 228.
  • கடந்த மூன்று நாட்களில் 499மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
  • இந்தச் சம்பவம் இரவு 10:30-11:30 மணியளவில் நடந்தது. 11:30 மணியளவில் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்தது.
  • கிராமம் அதிக உயரத்தில் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ளதாலும் சாய்வு அதிகமாக உள்ளதாலும் பிரதான சாலையுடன் அதற்குத் தொடர்பு இல்லை.
  • நிலத்தில் விரிசல் ஏற்படும் அபாயமுள்ள பகுதிகள் பட்டியலில் இர்ஷல்வாடி கிராமம் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் இதற்கு முன் இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை.

நேரில் பார்வையிட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காலை ஏழு மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

“மகாராஷ்டிராவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அவசரக்கால அமைப்புகள் விழிப்புடன் உள்ளன. தேவையான இடங்களில் மக்களை வெளியேற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உயிரிழப்புகளைத் தவிர்க்க முழு முனைப்புடன் செயல்படுகிறார்கள். வெள்ள அபாயம் உள்ள இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

மேலும் பேசிய முதலமைச்சர், “இர்ஷல்வாடி கிராமத்தில் சுமார் 40-45 வீடுகள் உள்ளன. அவற்றில் 15 முதல் 17 வீடுகள் இடிபாடுகளுக்கு அடியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையுடன் சேர்த்து உள்ளூர் மக்களின் உதவியுடனும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இர்ஷல்வாடி கிராமம் உயரமான இடத்தில் உள்ளதால், வாகனங்களோ, இயந்திரங்களோ செல்ல முடியாத நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஆட்கள் மூலமாக மட்டுமே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனும் கலந்துரையாடியதாகவும் இந்தச் சம்பவம் குறித்த தகவல்களை அவர் கேட்டுத் தெரிந்துகொண்டு, ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுமாறு கூறியதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

தான் விமானப் படையையும் தொடர்புகொண்டதாகக் கூறிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆனால் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

ஆகவே மீட்புக் குழுவினர் தங்களால் இயன்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போதைக்கு மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதே எங்கள் முன்னுரிமை என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: