You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எனர்ஜி டிரிங்க் பாட்டிலில் வோட்கா - தவறுதலாக விற்பனைக்கு வந்ததாக எச்சரிக்கை
- எழுதியவர், ஜேக் லஃபாம்
- பதவி, பிபிசி
அமெரிக்காவில் ஆற்றல் பான (எனர்ஜி டிரிங்) நிறுவனம் ஒன்று தவறுதலாக வோட்காவை தனது குப்பிகளில் நிரப்பிவிட்டது. செல்சியஸ் எனர்ஜி டிரிங்ஸ் எனப்படும் அந்த பானத்தை அருந்தும் நுகர்வோர், தாங்கள் வாங்கும் பாட்டில்களில் என்ன உள்ளது என்று சரி பார்த்துக் கொள்ள அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை அளித்துள்ளனர்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (USFDA) இந்த பானத்தின் ஆஸ்ட்ரோ வைப் புளு ராஸ் எனும் பெயரிட்டு வரும் குளிர்பானங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்சியஸ் பானத்தின் காலி கேன்களை, விநியோகஸ்தர் ஒருவர் தவறுதலாக ஹை நூன் என்ற வோட்கா செல்ட்சர் நிறுவனத்துக்கு அனுப்பியதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அப்படி அனுப்பப்பட்ட கேன்களில் மது நிரப்பப்பட்டது.
இதே உற்பத்தி வரிசையிலிருந்து வந்த, தனது பொருட்கள் சிலவற்றை ஹௌ நூன் நிறுவனமும் திரும்பப் பெறுகிறது. இது வரை இந்த குழப்பத்தால் யாருக்கும் எந்த உடல் நல கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஃப்ளோரிடா, நியூ யார்க், ஒஹையோ, தெற்கு கரோலினா, விர்ஜினியா, விஸ்கான்சின் ஆகிய பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு ஜூலை 21 மற்றும் 23ம் தேதிகளுக்குள் அனுப்பப்பட்டவை திரும்பப் பெறப்படுகின்றன.
திரும்பப் பெறப்படும் கேன்களில் உள்ள குறியீட்டு எண்கள் பொது மக்கள் நலனுக்காக வெளியிடப்பட்டுள்ளன.
"செல்சியஸ் ஆஸ்ட்ரோ வைப் புளு ராஸ் பானத்தின் திரும்பப் பெறப்படும் குறியீட்டு எண்களை கொண்ட கேன்களை வாடிக்கையாளர்கள் குடிக்க வேண்டாம்" என்று அமெரிக்க உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு