30 வருடத்தில் 50 வேலைகள் சொற்ப ஊதியம் : ஒரு இந்தியப் பெண் தொழிலாளியின் கதை

30 வருடத்தில் 50 வேலைகள் சொற்ப ஊதியம் : ஒரு இந்திய பெண் தொழிலாளியின் துயர் கதை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தேர்தல் காலத்தில் கட்சிக் கொடியை தைக்கும் பெண் தொழிலாளர்
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவின் தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் ஏழை புலம்பெயர்ந்த பெண் சையதா எக்ஸ், வாழ்வாதாரத்திற்காக கடந்த 30 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட வேலைகள் செய்துள்ளார்.

ஜீன்ஸ் ஆடையை ட்ரிம் செய்வது, நொறுக்குத்தீனி தயார் செய்வது, பாதாம் கொட்டை உடைப்பது, மற்றும் தேநீர் வடிகட்டிகள், கதவு கைப்பிடிகள், புகைப்பட பிரேம்கள் மற்றும் பொம்மை துப்பாக்கிகள் ஆகியவற்றை தயாரிப்பது, பள்ளி பைகள் தைப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார். அவர் கடினமாக உழைத்த போதிலும் சொற்ப ஊதியத்தையே பெற்றார். உதாரணமாக, 1,000 பொம்மை துப்பாக்கிகளை ஒன்று சேர்த்துப் பொருத்து பணிக்கு 25 ரூபாய் மட்டுமே அவருக்கு கிடைக்கும்.

பத்திரிக்கையாளர் நேஹா தீட்சித் எழுதிய `தி மெனி லைவ்ஸ் ஆஃப் சையதா எக்ஸ்’ (The Many Lives of Syeda X) என்ற புத்தகத்தின் கதாநாயகி, சையதா 1990 களின் நடுப்பகுதியில் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட மற்றும் 900 க்கும் மேற்பட்ட நேர்காணல்களை உள்ளடக்கிய இந்த புத்தகம், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஒரு இந்தியப் பெண்ணின் நிலையற்ற இருப்பை விவரிக்கிறது.

நேஹா தீட்சித் எழுதிய இந்த புத்தகம், வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண் தொழிலாளர்களின் கடினமான வாழ்க்கையின் மீது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த பெண்கள் புறக்கணிக்கப்பட்ட பிரிவினராக உள்ளனர்.

வீட்டு அடிப்படையிலான தொழிலாளர்கள், 2007 ஆம் ஆண்டில் தான், ஒரு தனிப்பிரிவு தொழிலாளர் வகையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டனர். ''தனது சொந்த வீடு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வளாகத்தில் இருந்து முதலாளிக்கு பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்யும் ஒரு வீட்டு அடிப்படையிலான தொழிலாளி” என்று இந்திய அரசு அவர்களை வரையறுத்தது.

இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 80% க்கும் அதிகமானோர் முறைசாரா துறைகளில் வேலை செய்கிறார்கள், விவசாயத்திற்கு அடுத்தபடியாக வீடு அடிப்படையிலான வேலைதான் மிகப்பெரிய துறையாக உள்ளது.

ஆனாலும், எந்தச் சட்டமும், கொள்கைகளும் இந்தப் பிரிவில் பணிப்புரியும் பெண்களுக்கு ஆதரவாக இல்லை.

முறைசாரா துறைகளின் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பான வீகோ (Wiego), 2017-18 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 4.1 கோடி வீட்டுத் தொழிலாளர்களில் சுமார் 1.7 கோடி பெண்களை உள்ளடக்கியதாக மதிப்பிட்டுள்ளது. இந்த பெண்கள் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களில் சுமார் 9% ஆக உள்ளனர். இந்தியாவின் கிராமப்புறங்களை விட நகரத்தில் அவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

"வீடு சார்ந்த தொழிலாளர்களின் ஈர்ப்பு மையமாக நகர்ப்புறங்கள் மாறுவது போல் தோன்றுகிறது" என்று இது குறித்த ஆய்வில் விரிவாகப் பணியாற்றிய வரலாற்றாசிரியர் இந்திராணி மஜும்தார் கூறுகிறார்.

சமூகப் பாதுகாப்பு அல்லது எந்தப் பாதுகாப்பும் இல்லாத இந்தப் பெண்கள், வறுமை, நிச்சயமற்ற தன்மை மற்றும் வழிதவறிய வாழ்க்கைத் துணைகளுடன் தொடர்ந்து போராடி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு

30 வருடத்தில் 50 வேலைகள் சொற்ப ஊதியம் : ஒரு இந்திய பெண் தொழிலாளியின் துயர் கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பட்டம் செய்யும் பெண் பணியாளர்

பெரும்பாலும் அவர்களின் குடும்பத்தின் உணவாதரவுக்கு சம்பாதிக்கும் முதன்மை குடும்ப உறுப்பினராக இருக்கும் இந்த பெண்கள், வறுமையிலிருந்தும் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் போதுமான அளவு சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக அதிகமாக பொழியும் பருவமழையின் போது தங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, அவர்களின் உடைமைகள் வீணாவதன் மூலம் கூடுதல் சுமைகளை இந்த பெண்கள் தாங்குகிறார்கள், வேலைகளை இழக்கிறார்கள் மற்றும் நிதி இழப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

இந்தியாவில், உற்பத்தித் தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களில் 75% பேர் வீடு அடிப்படையிலான வேலை செய்கின்றனர் என்கிறார் பொருளாதார நிபுணர் சோனா மித்ரா.

"இந்தப் பெண்கள் சுய தொழில் செய்பவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் பெரும்பாலும் அதிகம் கண்டு கொள்ளப்படுவதில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தீட்சித் விவரித்த துயர் கதை, சையதா மற்றும் பிற வீட்டு பெண் தொழிலாளர்களை உதவியற்ற தன்மை மற்றும் சுரண்டலின் முன்மாதிரிகளாக சித்தரிக்கிறது.

அவர்களின் வேலைக்கான மிகவும் குறைவாக ஊதியத்தை யார் நிர்ணயிப்பது என்பது யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு அவசியமான அறிவுறுத்தல்கள், பயிற்சிகள் அல்லது கருவிகளை யாரும் வழங்குவதில்லை. இந்தப் பெண்கள் வேலையை எப்படிச் செய்வது என்பதை அறிய ஒருவரையொருவர் மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.

``வேலை தேடுவதும் அவர்களுக்குள் சுழற்சி முறையில் பின்பற்றும் வாய்ப்புகள் அடிப்படையிலானது” என்று தீட்சித் விவரிக்கிறார்.

உலகுக்கு டிரெண்ட், இந்த பெண்களுக்கு அது தொழில் வாய்ப்பு

30 வருடத்தில் 50 வேலைகள் சொற்ப ஊதியம் : ஒரு இந்திய பெண் தொழிலாளியின் துயர் கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1990கள் வரை, ஆயத்த ஆடைத் துறை பல பணிகளை வீட்டுப் தொழிலாளர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்ய கொடுத்தது.

1997 ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண் ஆனபோது, இந்த ​​பெண் தொழிலாளர்கள் கையால் தைக்கப்பட்ட வெள்ளை விண்வெளி உடைகள், பிளாஸ்டிக் பொம்மைகளுக்ககு அணிவிக்கப்பட்டது

1999 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது, ​​அவர்கள் நூற்றுக்கணக்கான மலிவான கால் பந்துகளை தைத்தனர்.

2001 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு "குரங்கு மனிதன்" மக்களைத் தாக்குவது பற்றிய வைரலான வதந்தி பரவியபோது, டிராஃபிக் சிக்னலில் விற்கப்படும் முகமூடிகளில் குரங்கு முகங்களை வைத்து உருவாக்கினர்.

தேர்தலின் போது அரசியல் கட்சிகளுக்கு கொடிகள், சாவி மோதிரங்கள், தொப்பிகள் போன்றவற்றை செய்து கொடுத்தனர். பள்ளிகள் மீண்டும் தொடங்கும் போது, ​​அவர்கள் கிரேயன்களை பேக் செய்தனர், பள்ளி பைகளை தைத்தனர் மற்றும் புத்தகங்களை பைண்ட் செய்தனர்.

பல பெண்கள் ஒரு மாதத்திற்கு 20 நாட்களுக்கு மேல் வேலைக் கிடைப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

தீட்சித் தனது புத்தகத்தில், ''அதிகக் கேள்விகள் கேட்காதவர்கள், ஊதியத்தை பேரம் பேசாதவர்கள், சொந்தக் கருவிகளை வைத்திருப்பவர்கள்,குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிப்பவர்கள், தேவைப்படும் நேரங்களில் முன்பணம் அல்லது உதவிகளை ஒருபோதும் கேட்காதவர்கள் மற்றும் தாமதமான சம்பளத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே உடனடியாக வேலையைப் பெற முடியும்” என்று எழுதியுள்ளார்.

வீட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற தன்மை

30 வருடத்தில் 50 வேலைகள் சொற்ப ஊதியம் : ஒரு இந்திய பெண் தொழிலாளியின் துயர் கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரயாக்ராஜில் உள்ள கடைக்காரர்களுக்கு விற்பதற்காக ஒரு பெண் தனது வீட்டில் காகிதப் பைகளை தயாரிக்கிறார்

வேலையின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்களால் பெண் வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்துள்ளது என்று மஜும்தார் கூறுகிறார்.

1990கள் வரை, ஆயத்த ஆடைத் துறை பல பணிகளை வீட்டுப் தொழிலாளர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்ய கொடுத்தது.

1990களுக்கு பிறகு அதில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது.

தொழிற்சாலைகளுக்கு உள்ளேயே வேலைகளை மேற்கொள்ள நிறுவனங்கள் தொடங்கியது. இயந்திரங்கள் மனித உழைப்புக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டது. குறிப்பாக எம்பிராய்டரிக்கு சாதனங்கள் அறிமுகமானது. ''இதனால் வீடு அடிப்படையிலான தொழில்துறை நிலையற்றதாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

118 நாடுகளில் நடத்தப்பட்ட குடும்ப ஆய்வுகளின் அடிப்படையில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2019 இல் உலகளவில் சுமார் 260 மில்லியன் வீட்டு அடிப்படையிலான தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது, இது மொத்த வேலைவாய்ப்பில் 7.9% ஆகும்.

பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், உள்ளூர் அரசாங்கங்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து சிறப்பாக வேலை செய்யும் போது, ​​வேலை நிலைமைகளை கண்காணிக்கவும், வீட்டு அடிப்படையிலான அல்லது துணை ஒப்பந்த வேலைகளில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முடியும் என்பதை நிரூபிக்கிறது.

இந்தியாவில் இத்தகைய உதாரணங்கள் மிகக் குறைவு. முறைசாரா பொருளாதாரத்தில் ஏழை, சுயதொழில் செய்யும் பெண்களை ஒன்றிணைக்கும் உறுப்பினர் அடிப்படையிலான அமைப்பான சுய வேலைவாய்ப்பு பெண்கள் சங்கம் (சேவா) 52 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

வீட்டு அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு ஆதரவாக சுய உதவி குழுக்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்கள் உள்ளன. "ஆனால் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இந்தத் திட்டங்கள் அவர்களுக்கு உதவவில்லை" என்கிறார் மஜூம்தார்.

ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்கள்

தமிழ்நாட்டில் சமூக விஞ்ஞானி கே கல்பனாவின் ஒரு ஆய்வு, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு நிறுவனங்கள் புறக்கணித்த போதிலும், சென்னையில் அப்பளம் தயாரிப்பதற்கு வீடு மற்றும் சுற்றுப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட பெண் தொழிலாளர்கள் எவ்வாறு தங்கள் உரிமைகளை வெற்றிகரமாக பாதுகாத்தனர் என்பதை விளக்குகிறது.

சையதா மற்றும் அவரது நண்பர்களுக்கு அத்தகைய அதிர்ஷ்டம் அமையவில்லை.

"சையதாவுக்கு எப்போதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஓய்வெடுத்தாலோ, தன் குழந்தைகளைப் பராமரிப்பதற்கோ நேரம் ஒதுக்கினால், அவரது வேலையை மற்றொரு முகம் தெரியாத புலம்பெயர்ந்தவரிடம் இழக்க நேரிடும், அடுத்து ஒரு வேலைவாய்ப்புக்காக போராட வேண்டும்" என்று தீட்சித் எழுதியுள்ளார்.

ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலை, ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீடு, என மாறி மாறி அவரது வாழ்வில் இடம் பெயர்வும் கஷ்டங்களும் மட்டுமே நிலையாக வீற்றிருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)