You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்குத் தடை - சென்னையில் பேராசிரியர் உள்பட 7 பேர் கைது ஏன்?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (Hizb-ut-Tahrir) அமைப்பைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் வியாழன் (அக்டோபர் 10) அன்று அறிவித்தது.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் உள்பட 7 பேரை என்.ஐ.ஏ (தேசியப் புலனாய்வு முகமை) கைது செய்துள்ளது.
என்ன நடந்தது? கைது செய்யப்பட்ட பேராசிரியர் தரப்பு கூறுவது என்ன?
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிவு
ஜெருசலேமில் 1953-ஆம் ஆண்டு 'ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர்' அமைப்பு நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்குப் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஜெர்மனி, எகிப்து உள்பட பல நாடுகள் தடை விதித்துள்ளன.
சென்னையைச் சேர்ந்த முனைவர் ஹமீது உசேன் என்பவர் இந்த அமைப்பின் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்ததாக தேசிய புலனாய்வு முகமை கூறுகிறது.
'டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்' என்ற யூட்யூப் சேனலில் அவர் தனது உரைகளை வெளியிட்டு வந்துள்ளார். 26 வயதான ஹமீது உசேன், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கவுரவ விரிவுரையாளராகவும் வேலை பார்த்து வந்தார்.
இவரது பேச்சுகள், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகக் கூறி கடந்த மே மாதம் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையில், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலையில் ஹமீது உசேன் 'மீட்' (மாடர்ன் எசன்ஸியல் எஜுகேஷன் ட்ரஸ்ட்) என்ற அமைப்பை உருவாக்கி அவர் ஞாயிறுதோறும் ரகசிய கூட்டங்களை நடத்தி வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர் மற்றும் சகோதரர்கள் அப்துல் ரஹ்மான், பைசல் ரஹ்மான் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், ஃபைசல் ரஹ்மான் தவிர 3 பேரை தமிழ்நாடு போலீஸ் கைது செய்தது.
தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை - கைது
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த தேசியப் புலனாய்வு முகமை, கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை ஒன்றையும் பதிவு செய்தது.
அதில், 'முனைவர் ஹமீது உசேன் என்பவர் 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற இஸ்லாமிய அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவர் தனது ஆட்கள் மூலம் மாநிலம் முழுவதும் ரகசியக் கூட்டங்களை நடத்தி வந்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைப் பிளவுபடுத்தி, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஹமீது உசேன் செயல்பட்டார் என்று என்.ஐ.ஏ குற்றம் சுமத்தியுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை வசம் சிக்காமல் இருந்த ஃபைசல் ரஹ்மானை கடந்த 9-ஆம் தேதி என்ஐஏ கைது செய்தது.
இந்த வழக்கில் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், அவரது சகோதரர் அப்துல் ரகுமான், ஃபைசல் ரகுமான் உள்பட ஏழு பேரை என்.ஐ.ஏ கைது செய்தது. பூந்தமல்லி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, இவர்கள் 7 பேரும் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசிடம் பெறப்பட்ட எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் (எண்.173/2024) முனைவர் ஹமீது உசேன் கைது செய்யப்பட்டதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்கு தடை ஏன்?
இந்த வழக்கின் விவரங்களை அடிப்படையாக வைத்து, 'ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர்' அமைப்பை இந்தியாவில் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை தூண்டும் வகையில் இந்த அமைப்பு செயல்பட்டதாக வியாழன் அன்று (அக்டோபர் 10) மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உலகில் ஜனநாயக ரீதியாகத் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை தூக்கியெறிந்து அங்கு இஸ்லாமிய அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த அமைப்பு தடை செய்யப்படுவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஹமீது உசேன் வழக்கறிஞர் சொல்வது என்ன?
என்.ஐ.ஏ குற்றச்சாட்டுகளை ஹமீது உசேன் தரப்பு மறுத்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய ஹமீது உசேன் தரப்பு வழக்கறிஞர் நைனா முகமது, "ஹமீது உசேனின் நோக்கம் வன்முறையை ஊக்குவிப்பதோ, மதங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவதோ அல்ல." என்றார்.
தொடர்ந்து பேசிய நைனா முகமது, "ஹமீது உசேனின் அப்பா மன்சூர் ஒரு திராவிட இயக்கச் சிந்தனையாளர். அவர் ஒரு பதிப்பகத்தை நடத்தி வருகிறார். இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காக இவர்கள் செயல்பட்டதாகக் கூறுவது தவறான வாதம்," என்றார்.
அதேநேரம், ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புடன் ஹமீது உசேனுக்குத் தொடர்பு இருப்பதாக என்ஐஏ குற்றம்சாட்டியிருப்பது குறித்து கேட்ட போது, "தனக்கு அதைப் பற்றி தெரியாது," என்றார் நைனா முகமது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)