You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முரசொலி செல்வம்: சட்டமன்றக் கூண்டில் ஏற்றி கண்டிக்கப்பட்டபோது என்ன செய்தார்?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகனும் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியின் முன்னாள் ஆசிரியருமான 'முரசொலி' செல்வம், வியாழக்கிழமை (அக். 10) காலமானார். முதலமைச்சர்களின் உறவினராக இருந்தாலும்கூட, எவ்வித பதவியையும் விரும்பாதவர் என்கிறார்கள் அவருடன் பழகியவர்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவரும் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியின் முன்னாள் ஆசிரியருமான 'முரசொலி' செல்வம் காலமானார். அவருக்கு வயது 84.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலி நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்த 'முரசொலி' செல்வம், மிக அமைதியானவராக அறியப்பட்டவர். அவர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகன், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மைத்துனர் என்றபோதும், தி.மு.க.விலோ, அரசிலோ எவ்வித பதவிகளையும் வகிக்காதவர்.
'முரசொலி' செல்வமாக மாறிய பன்னீர்செல்வம்
முரசொலி செல்வத்தின் இயற்பெயர் பன்னீர்செல்வம். 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் காலமானார்.
அதற்கு அடுத்த மாதத்தில் மு. கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரத்தம்மாளின் இளைய மகனாக இவர் பிறந்தார். சர். ஏ.டி. பன்னீர்செல்வத்தின் நினைவாக, அவருக்கு பன்னீர்செல்வம் என்ற பெயரைச் சூட்டியதாகத் தனது கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார் மு. கருணாநிதி. முரசொலியை கவனிக்கத் தொடங்கிய பிறகு இவரது பெயர் 'முரசொலி செல்வமாக' மாறிப் போனது.
இளைஞராக இருந்த காலத்தில் இருந்தே தனது சகோதரர் முரசொலி மாறனுடன் இணைந்து, முரசொலியின் பணிகளை இவரும் கவனித்து வந்தார். 1989இல் முரசொலி மாறன் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, முரசொலியின் ஆசிரியர் பொறுப்பு முரசொலி செல்வத்திற்கு வந்து சேர்ந்தது. முரசொலி இதழில் 'சிலந்தி' என்ற பெயரிலும் 'முரசொலி எஸ். செல்வம்' என்ற பெயரிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்தார்.
"இவரது சகோதரரான முரசொலி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக இருந்தார். கட்சிப் பொறுப்புகளிலும் இருந்தார். ஆனால், செல்வம் இதுபோன்ற எதையும் விரும்பியதில்லை. ஒரு பத்திரிகையாளராகவே தனது பொது வாழ்க்கையை நடத்திச் செல்ல விரும்பினார்" என்கிறார் அவருடன் நெருங்கிப் பழகிய திராவிட இயக்க வரலாற்று ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சங்கொலி திருநாவுக்கரசு.
கடந்த சில ஆண்டுகளாக முரசொலி ஆசிரியர் பொறுப்பில் செல்வம் இல்லாத நிலையிலும், ஓர் ஆசிரியருக்கு உரிய எல்லா பொறுப்புகளோடும் அவர் நடந்துகொள்வார் என்கிறார் திருநாவுக்கரசு.
"எல்லா பக்கங்களையும் வாசிப்பார். நான்றாக இருந்தால் அழைத்துப் பாராட்டுவார். இல்லாவிட்டால், ஏன் இப்படி வந்தது எனக் கேள்வி எழுப்புவார். மரணம் வரை அவர் முரசொலியின் பத்திரிகையாளராகவே இருந்தார்."
கடந்த 8ஆம் தேதிகூட, ஆளுநருக்கு பதிலளிக்கும் வகையில், சனாதனம் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்ததாகக் குறிப்பிடுகிறார் அவர்.
தி.மு.க.வின் பொதுச் செயலாளரான துரைமுருகன், செல்வத்திற்கு மிக நெருக்கமானவர்.
"விளம்பரத்திற்கு அலைவது, வீண் பெருமை பேசுவது, அவசியமற்று உதவிகள் கேட்பது இவையெல்லாம் செல்வத்தின் அகராதியில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் காணப்படாத உயர் குணங்கள். செல்வத்திற்கு எப்போதும் எடுத்தெறிந்து பேசத் தெரியாது. அறவே பிடிக்காதவரிடம்கூட அரை மணிநேரம் சிரித்தே பேசுவார்" என 'முரசொலி சில நினைவலைகள்' நூலின் வாழ்த்துரையில் குறிப்பிடுகிறார் துரைமுருகன்.
சட்டமன்ற கூண்டில் 'முரசொலி' செல்வம்
முரசொலி செல்வத்தின் பொதுவாழ்வில் மிக முக்கியத் தருணமாக, அவர் சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிகழ்வைச் சொல்லலாம்.
கடந்த 1991ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினரான பரிதி இளம்வழுதி சட்டமன்றத்தில் உரை ஒன்றை நிகழ்த்தினார். ஆனால், அவரது உரையின் ஒரு பகுதி, அன்று மதியம் அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகரால் நீக்கப்பட்டது. ஆனால், முரசொலியின் வெளியூர் பதிப்புகளில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெற்றன.
வெளியூர் செல்லும் பதிப்புகள் மதியம் இரண்டு மணிக்கே அச்சாகிவிடுவதால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெற்றிருந்தன. சென்னை பதிப்பில் மட்டும் அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டன.
இதையடுத்து முரசொலியின் ஆசிரியரான முரசொலி செல்வம் மீது உரிமைப் பிரச்னை தொடரப்பட்டது. அந்த விவகாரத்தை விசாரித்த உரிமைக் குழு, விளக்கம் கேட்டு செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் விளக்கமளித்த நிலையிலும் உரிமைக் குழுவின் முன் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அங்கு ஆஜரான முரசொலி செல்வத்திடம், மன்னிப்பு கேட்கும்படி கூறப்பட்டது. ஆனால் செல்வம் மறுத்துவிட்டார்.
இதற்குப் பிறகு 1992ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி செல்வம் கைது செய்யப்பட்டு, சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா முன்பு நிறுத்தப்பட்டார். அடுத்ததாக சட்டமன்றம் கூடும் நாளில், அங்கு ஆஜராகி, அவையின் கண்டனத்தைப் பெற வேண்டுமென அவருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, செப்டம்பர் 21ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அன்றைய தினம் கறுப்புச் சட்டை அணிந்து சட்டமன்றத்திற்குச் சென்ற முரசொலி செல்வம், அங்கிருந்த கூண்டில் ஏற்றப்பட்டார். இதற்கு சி.பி.ஐ., சி.பி.எம். பா.ம.க. எம்ஜிஆர் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதற்குப் பிறகு, அவையின் கண்டனம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு அவையிலிருந்து முரசொலி செல்வம் அனுப்பப்பட்டார்.
"வாடிய முகத்துடன் அந்தக் கூண்டுக்குள் செல்வம் நின்றிருந்தால் என்னகம் வாடிப் போயிருக்கும். அந்தச் செல்வத்தின் பெயரை இந்தச் செல்வத்துக்கு எத்துணைப் பொருத்தமாக அப்போதே வைத்தேன் என்று என்னையே நான் பாராட்டிக்கொண்டேன்" என இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதினார் மு. கருணாநிதி.
மறைந்த முதலமைச்சர் மு. கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரத்தம்மாளின் இளைய மகனாகப் பிறந்தவர் முரசொலி செல்வம்.
நீண்ட நாட்களாக முரசொலி நாளிதழின் ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம், சமீபகாலமாக பெங்களூருவில் வசித்து வந்தார். அக்டோபர் 10ஆம் தேதியன்று காலை அவர் மாரடைப்பினால் காலமானார். அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, கோபாலபுரம் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரியாவார். இந்தத் தம்பதிக்கு எழிலரசி என்ற மகள் இருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)