You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொட்டுக்காளி ஊடக விமர்சனம்: 'நடிப்பில் சர்வதேச தரத்தை அடைந்த சூரி'
நடிகர் சூரி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கொட்டுக்காளி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்பு இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது நிலையில், கொட்டுக்காளி திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தது முதலே அதுதொடர்பான எதிர்பார்ப்பு இருந்தது. கூடவே, நடிகர் சூரி நாயகனாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கொட்டுக்காளி படத்தின் கதை என்ன?
கொட்டுக்காளி படத்தைப் பொறுத்தவரை, ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறும் குடும்பத்தினர் மாலையில் இன்னோர் இடத்தில் போய் இறங்குவதுதான் கிட்டத்தட்ட படத்தின் மொத்தக் கதை.
மதுரையில் இருக்கும் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகிறார்கள். அவர் எந்த நேரமும் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார்.
நன்றாகப் பேசிச் சிரித்தவள் வாயே திறக்காமல் போகும் நிலைக்கு யாராவது மருந்து வைத்திருப்பார்களோ என்ற முடிவுக்கு சூரி மற்றும் மீனாவின் குடும்பங்கள் வருகின்றன.
இதனால் மீனாவின் வருங்கால கணவரான பாண்டியும்(சூரி), அவரது குடும்பத்தினரும் மீனாவை ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன.
அவை என்ன? உண்மையில் மீனாவாக நடித்த நாயகி அன்னா பென்னுக்கு என்னதான் பிரச்னை? இதற்கான விடைதான் ‘கொட்டுக்காளி’.
படம் எப்படி இருக்கிறது?
மொத்தக் கதையையும் ஒரு துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய வகையில் இருக்கும் மிகச் சாதாரணமான கதைக்களம் என்று குறிப்பிட்டிருக்கும் இந்து தமிழ் திசை, “இருப்பினும் தனது முந்தைய படமான கூழாங்கல் போலவே, ஆழமான அடர்த்தியான படத்தை இயக்குநர் வினோத் ராஜ் கொடுத்துள்ளதாக” பாராட்டியுள்ளது.
சுமார் 100 நிமிடங்கள் நீளமான படத்தில், “அதிகமாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், அதில் இயக்குநர் எவ்வளவு விஷயங்களைச் சொல்லாமல் சொல்வதாக” இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ், உள்ளூர் கதையை உலக சினிமாவாக மாற்றியிருப்பதாக தினமணி பாராட்டியுள்ளது.
“மிகக் குறைந்த பட்ஜெட்டில், மிகக் காத்திரமான கதை. ஒரே கதையில் பல விஷயங்களை, எதார்த்தங்களை நுணுக்கமாகத் தொட்டுச் சென்றிருக்கிறார்.”
மேலும், “சிறந்த படத்தை உருவாக்க நல்ல திரை எழுத்து இருந்தாலே போதும் என்பதற்கு இந்தப் படம் சான்று,” என்று தினமணி நாளிதழ் தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.
சூரி நடிப்பு எப்படி?
நடிகர் சூரி சினிமாவில் தனக்கான இடத்தைக் கண்டடைந்து விட்டதாகவே தோன்றுவதாக தினமணி கூறியுள்ளது.
மேலும், “முழுக்க முழுக்க கதை மற்றும் நடிப்பை அவர் நம்ப ஆரம்பித்துவிட்டார். கொட்டுக்காளி போன்ற கதைக் களங்களுக்குத்தான் அவர் காத்திருக்கிறார்,” என்றும் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
பாண்டியாக சூரி மற்றுமோர் அற்புதமான நடிப்பை வழங்கியதாக இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
அவர் “தனக்குள் இருக்கும் நடிகருக்கு ‘கொட்டுக்காளி, விடுதலை’ போன்ற உறுதியான படங்கள் தேவை என்பதை மெதுவாக நிரூபித்து வருவதாகவும்” இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
மீனாவாக அன்னா பென் நடிப்பு எப்படி?
மீனாவாக வரும் அன்னா பென்னுக்கு மொத்த படத்திலும் ஒரேயொரு வசனம் மட்டுமே உள்ளது.
ஆனால், அந்த ஒரு வசனமும் “பலமாகப் பேசுவதாகவும்”, மூடநம்பிக்கை, கலாசாரம் என்ற போர்வையில் மீனா அனுபவிக்கும் “சித்ரவதைகளை எடுத்துக்காட்டுவதாகவும்” இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
அவர் அந்த வசனத்தைக் கூறும்போது, பல கேள்விகள் நம்மைத் துளைப்பதாக தினமணி கூறியுள்ளது. அந்த அளவுக்கு “அதற்கு முந்தைய காட்சிகளில் முகபாவணையிலேயே அன்னா பென் ஒரு பெண்ணாகப் பிறந்தால் சந்திக்க வேண்டிய துயரங்களைப் புரிய வைத்து விடுவதாகவும்” தினமணி பாராட்டியுள்ளது.
இந்து தமிழ் தனது விமர்சனத்தில், “வசனமே இல்லாமல் வெறித்துப் பார்த்தபடி மிரட்டலான நடிப்பை வழங்கி அன்னா பென் ஸ்கோர் செய்திருப்பதாக” தெரிவித்துள்ளது.
அதோடு, துணை நடிகர்களின் நடிப்பும் அந்த உலகத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதாக இந்தியா டுடே கூறியுள்ளது.
துணை நடிகர்கள் குறித்த இந்து தமிழின் விமர்சனத்தில், சூரியின் சொந்தக்காரர்களாக வரும் இருவர், சூரியின் தங்கை மகனாக வரும் சிறுவன், சூரியின் தங்கைகள் அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளது.
‘திறமை மீது நம்பிக்கை’
“படத்தில் இசை கிடையாது. எனினும் கதாபாத்திரங்களைச் சுற்றி நடப்பவற்றில் இருந்து வரும் சத்தங்களே அந்தக் குறை தெரியாதவாறு காப்பாற்றுவதாக” இந்து தமிழ் விமர்சனம் எழுதியுள்ளது.
அதோடு, “பின்னணி இசை இருந்திருந்தால்கூட நம்மால் முழுமையாகப் படத்துடன் ஒன்றியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. சமரசமே இல்லாமல், பின்னணி இசையைக்கூடச் சேர்க்காமல் தனது திறமை மீது நம்பிக்கை வைத்த இயக்குநரை” இந்து தமிழ் பாராட்டியுள்ளது.
தனது தைரியமான முடிவுகளால் எல்லைகளை உடைத்துச் செல்லும் இயக்குநராக பி.எஸ்.வினோத் ராஜ் இருப்பதாக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது. அதோடு, “இசையே இல்லாமல், சுற்றுப்புற ஓசைகளிலேயே அதன் குறை தெரியாமல் நகரும் கதைக்களத்திற்காகவும்” அவரைப் பாராட்டியும் உள்ளது இந்தியா டுடே விமர்சனம்.
ஆனால், சில காட்சிகளை நீடித்திருக்கலாம் என்று தினமணி விமர்சித்துள்ளது. குறிப்பாக “சூரியின் காட்சிகளை இன்னும் வலுவான வசனங்களைக் கொண்டு நிரப்பியிருக்கலாம். பாண்டியின் பார்வையில் படம் திடீரென நிறைவடைவதால், என்ன நடந்தது என்று ரசிகர்கள் குழப்பமடையலாம்” என்றும் விமர்சித்துள்ளது.
படத்தின் மிகப்பெரிய பலம்
தினமணி விமர்சனம், படத்தின் மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவைக் குறிப்பிட்டுள்ளது.
“பின்னணி இசையே தேவையில்லை என்னும் முடிவுக்கு இயக்குநர் சென்றது ஆச்சர்யமாக இருக்கிறது. இயற்கையான சத்தங்களையே படத்தில் பயன்படுத்தியுள்ளார். வட்டார மொழியையும் கதாபாத்திரங்களின் உடல் மொழியையும் கவனமாகப் படம் முழுவதும் கொண்டு சென்றிருப்பது சிறப்பு,” என்றும் தினமணி தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.
படத்தில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியது சக்தியின் ஒளிப்பதிவு என்று இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் எழுதியுள்ளது. “கிராமத்தில் கரடுமுரடான சாலைகளில் சென்று கொண்டிருக்கும் அந்த ஆட்டோவில் நாமும் பயணிப்பதைப் பொன்ற ஓர் உணர்வு ஏற்படுவதாகவும்” பாராட்டியுள்ளது.
அதேநேரம், “அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்ட நீளமான ஷாட்கள் பல இடங்களில் சலிப்பை ஏற்படுவதாகவும்” இந்து தமிழ் விமர்சித்துள்ளது.
அதேவேளையில், படத்தின் முடிவு “திரையரங்குக்கு வரும் பொதுவான பார்வையாளர்களால் ரசிக்கப்படுமா எனத் தெரியவில்லை” என்றும் விமர்சித்துள்ளது.
இறுதியாக, “நுணுக்கமான காட்சி அமைப்புகள், கிராம வாழ்வியலை இயல்பாகக் காட்டிய விதம் என ஒரு சர்வதேச கலைப் படைப்பாக சமரசமின்றி கொட்டுக்காளி உருவாகியுள்ளதாக” ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்டிவிட்டர் மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)