You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூணாறு தேனிலவு கொலை வழக்கு: சென்னை தம்பதிக்கு என்ன நடந்தது? நாடகமாடிய மனைவி ஆட்டோ டிரைவரால் சிக்கியது எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மத்தியப் பிரதேசத்தில் தேனிலவுக்காக சென்ற கணவன் கொல்லப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டில் மனைவி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவிலும் இதுபோல ஒரு கொலை நடந்தது. மூணாறு பகுதிக்கு சென்னை தம்பதி தேனிலவு சென்ற போது கணவர் கொல்லப்பட்டார். தமிழ்நாட்டையும் கேரளாவையும் அதிரவைத்த அந்தக் கொலையின் பின்னணி என்ன?
மூணாறில் என்ன நடந்தது?
2006ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 18ஆம் தேதி.
கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை சில நாட்களுக்கு முன்புதான் துவங்கியிருந்தது. மூணாறில் உள்ள குண்டலா அணைப் பகுதி பரபரத்துக் கிடந்தது. சென்னையிலிருந்து தேனிலவுக்காக வந்திருந்த தங்களை தாக்கிய திருடர்கள் 25 ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு, கணவரை கொலைசெய்துவிட்டதாக 24 வயதே ஆன ஸ்ரீவித்யா அழுதுகொண்டேயிருந்தார்.
ஒரு பிரபல சுற்றுலாத் தலத்தில் நடந்த இந்தக் கொலை கேரள மாநிலத்தையே பரபரப்பாக்கியது. காவல்துறை விசாரணையைத் துவங்கியது. மூணாறின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.ஏ. முகமது ஃபைசல் அந்த புலனாய்வுக்குத் தலைமை தாங்கினார். முதலில் ஸ்ரீ வித்யாவிடம் விசாரணை துவங்கியது.
அணையின் ஒரு பகுதியில் தாங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் வந்து தங்களைத் தாக்கி, கணவரைக் கொன்றுவிட்டதாகவும் பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அழுதுகொண்டே சொன்னார் ஸ்ரீவித்யா. அந்த இரண்டு பேரையும் தேட ஆரம்பித்தது கேரள காவல்துறை.
அந்தத் தருணத்தில்தான் அன்பழகன் என்ற ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையை அணுகி ஒரு தகவலைத் தெரிவித்தார். அவர் சொன்ன தகவலை வைத்து காவல்துறை விசாரிக்க ஆரம்பித்ததும், மொத்தக் கதையும் மாறிப்போனது. அதாவது ஸ்ரீ வித்யாதான் ஆட்களை வரச்சொல்லி தன் கணவரைக் கொலை செய்திருப்பதாகத் தெரியவந்தது.
ஒரு கொலையின் துவக்கம்
சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீ வித்யா. சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் துறையில் பணியாற்றிவந்தார். அவரும் அனகாபுத்தூரைச் சேர்ந்த 24 வயதேயான ஆனந்தும் காதலித்துவந்துள்ளனர். அந்தக் காதலுக்கு ஸ்ரீ வித்யாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முடிவில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் துணை மேலாளராக இருந்த 30 வயதான அனந்தராமனுடன் வித்யாவுக்கு திருமணம் செய்துவைத்தனர். 2006-ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி கல்யாணம் நடந்து முடிந்தது.
கல்யாணத்திற்குப் பிறகு தேனிலவிற்காக குருவாயூர், மூணாறு போன்ற பகுதிகளுக்குச் செல்லலாம் என தம்பதியர் முடிவெடுத்தனர். தங்களைக் கேரளாவில் பல இடங்களுக்கு அழைத்துச் செல்ல சாம் வின்சென்ட் என்ற டாக்ஸி ஓட்டுநரை ஏற்பாடு செய்தார் அனந்தராமன். சென்னையிலிருந்து திருச்சூரில் ரயிலில் வந்து இறங்கிய தம்பதியை சாம் வின்சென்ட் தனது காரில் ஏற்றிக்கொண்டார்.
முதலில் குருவாயூருக்குச் சென்றனர். அதற்குப் பிறகு, மூணாறுக்கு அழைத்துச் செல்லும்படி சாம் வின்சென்ட்டிடம் சொல்லப்பட்டது. அதன்படி அவரும் அவர்களை குருவாயூருக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் எல்லாம் அனந்தராமனும் ஸ்ரீ வித்யாவும் சிரித்துப் பேசியபடியே வந்துள்ளனர். பிறகு, அவர்களை குண்டலா அணைக்கட்டுக்கு அருகில் எகோ பாயிண்ட் என்ற இடத்தில் இறக்கிவிட்டார் சாம். பிறகு, சற்றுத் தூரத்தில் தனது காரை நிறுத்திவிட்டுத் தூங்க ஆரம்பித்தார் அவர்.
ஆனால், சிறிது நேரத்திலேயே ஸ்ரீ வித்யாவின் அலறல் அவரை எழுப்பியது. தங்களை யாரோ இருவர் தாக்கிவிட்டு பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டதாகவும் தாக்குதலில் அனந்தராமன் இறந்துவிட்டதாகவும் அழுதுகொண்டே சொன்னார் ஸ்ரீவித்யா. உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார் சாம் வின்சென்ட். முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து விசாரணையைத் துவக்கியது காவல்துறை.
ஆட்டோ ஓட்டுநரால் துப்பு துலங்கியது எப்படி?
முதலில் இந்தக் கொலை குறித்து ஸ்ரீவித்யா சொன்ன தகவலை காவல்துறை நம்பியது. அந்தத் தருணத்தில்தான் அன்பழகன் என்ற ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையை அணுகி ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது, கொலை நடந்த தினத்தன்று இரண்டு பேர் தனது ஆட்டோவில் ஏறியதாகவும் அவர்களை அணைக்கு அருகில் இறக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். அப்படி அவர்களை அணைப் பகுதிக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களில் ஒருவர், தன்னுடைய செல்போனில் சிக்னல் இல்லாததால் அன்பழகனிடம் அவருடைய செல்போனை கேட்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்து அந்த செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அந்தக் குறுஞ்செய்தியை காவல்துறையினரிடம் காட்டினார் அன்பழகன். அதில் சம்பவம் நடந்த இடம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த இருவரையும் உடனடியாகத் தேடத் தொடங்கியது காவல்துறை. தகவல் பரவியதும் மூணாறிலிருந்து வேகமாக வெளியேறுவதற்கான வழிகளைத் தேட ஆரம்பித்தனர் ஆனந்தும் அன்புராஜும். அப்படி அவர்கள் விசாரிக்கும் போது சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இருவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். காவல்துறையினரின் விசாரணையில், ஸ்ரீ வித்யாவும் ஆனந்தும் ஏற்கனவே காதலித்து வந்ததும் வித்யாவின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடந்ததும் காவல்துறைக்குத் தெரிய வந்தது.
ஆனந்தைத் தான் காதலித்தது உண்மைதான் என்றாலும் 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆனந்துடன் தொடர்பில் இல்லை என மறுத்தார் ஸ்ரீ வித்யா. ஆனந்திடம் இருந்து கிடைத்த ஒரு துண்டுச் சீட்டு ஸ்ரீ வித்யாவுக்கு எதிராக இருந்தது. அதில், கேரளாவில் தாங்கள் செல்லும் இடங்கள் குறித்த தகவல்களை தன் கைப்பட எழுதிக் கொடுத்திருந்தார் ஸ்ரீ வித்யா. கொலை நடப்பதற்கு முன்பாக, ஆனந்திற்கு தன் போனில் இருந்து பல முறை அழைத்திருந்தார் ஸ்ரீ வித்யா.
எல்லாம் பொருந்திப் போக ஆனந்த், அன்புராஜ், ஸ்ரீவித்யா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தது கேரள காவல்துறை. தேவிகுளம் கிளைச் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.
- தேனிலவில் கணவர் கொலை, 1,000 கி.மீ. அப்பால் கிடைத்த மனைவி - கொலை செய்தது யார்? தொடரும் மர்மம்
- ஒடிசா 'திருமண வெடிகுண்டு' வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - பார்சல் மூலம் மணமகனை கொன்றது எப்படி?
- "பிறழாத சாட்சிகள்" பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது எப்படி?
- கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை: குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்
வழக்கில் ஆனந்த் முதலாவது குற்றவாளியாகவும் அன்புராஜ் இரண்டாவது குற்றவாளியாகவும் ஸ்ரீ வித்யா மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். வழக்கின் விசாரணை தொடுபுழா நீதிமன்றத்தில் துவங்கிய போது, தங்களுக்கு எதுவுமே தெரியாது என மூவரும் மறுத்தனர். ஆனால், ஸ்ரீ வித்யா - ஆனந்த் ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் அவர்களுக்கு எதிரான வலுவான சாட்சியமாக அமைந்தன. இந்த வழக்கில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. ஸ்ரீ வித்யாவுக்கும் ஆனந்திற்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன. அன்புராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆனந்தும் ஸ்ரீ வித்யாவும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த கேரள உயர்நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். நீண்ட காலமாக விசாரணையில் இருந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது.
(உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு