சுப்மன் கில்லின் இரட்டை சதம் ஏன் இவ்வளவு சிறப்பானது?

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மான் கில் டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை (269) சதத்தைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். 2வது டெஸ்டில் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், ஆட்டத்தின் போக்கு மாறவும் கில் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார்.

பிரிட்டன் மண்ணில் மிகப்பெரிய டெஸ்ட் தொடரை இளம் இந்திய அணி சந்திக்கிறது. கேப்டன் பொறுப்பில் 25 வயதான சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவாரா என்ற சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் கில் பதில் அளித்துவிட்டார்.

கேப்டனின் பாதுகாப்பான கரங்களுக்குள் இந்திய அணியின் கடிவாளம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கில் தனது இரட்டை சதத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.

அது மட்டுமல்ல முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்திய வீரர்கள் பலரின் சாதனையையும் முறியடித்து வரலாற்று சாதனைகளை கில் படைத்துள்ளார். குறிப்பாக சேனா நாடுகள் என்றழைக்கப்படும் தென் ஆப்ரிக்கா(S), இங்கிலாந்து (E), நியூசிலாந்து (N), ஆஸ்திரேலியா (A) ஆகிய நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் கேப்டனாக கில் உருவெடுத்துள்ளார்.

இமாலய அளவில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

3வது நாளான இன்று இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை விரைவாக இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினால், ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்கு மாறவும் வாய்ப்புள்ளது. ஹேரி ப்ரூக் (30), ஜோ ரூட் (18) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

துணை நாயகர்கள்

இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 2வது நாளில் மீதமிருந்த 5 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சேர்த்தது. சுப்மன் கில் இரட்டை சதம் அடிக்க துணையாக இருந்த ஜடேஜா (89), வாஷிங்டன் சுந்தர் (42) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

6-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜா, கில் கூட்டணி 203 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 7வது விக்கெட்டுக்கு சுந்தர், கில் கூட்டணி 144 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு செல்ல உதவினர். அணியின் ஸ்கோர் 574 ரன்கள் இருந்தபோது கில் ஆட்டமிழந்தார், அவர் வெளியேறிய அடுத்த சிறிது நேரத்தில் 13 ரன்களுக்குள் மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது.

2வது நாளிலும் தனது ஆட்டத்தைத் தொடர்ந்த சுப்மன் கில் 263 பந்துகளில் 150 ரன்களையும், 311 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தையும் நிறைவு செய்தார். 348 பந்துகளில் 250 ரன்களை கில் எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கில்லின் சாதனைகள்

சுப்மன் கில் இந்த டெஸ்டில் 269 ரன்கள் சேர்த்ததன் மூலம், டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை பதிவு செய்து கோலியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். கோலி கேப்டனாக இருந்தபோது, 2019ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 254 ரன்கள் சேர்த்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் ஆசிய நாடுகளுக்கு வெளியே இந்திய கேப்டன் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் கில் அடித்த 269 ரன்களாகும். இதற்கு முன் சச்சின் சிட்னி மைதானத்தில் அடித்த 241 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது.

வெளிநாடுகளில் இந்திய பேட்டர்கள் அடித்த ஸ்கோர்களில் 3வது அதிகபட்சமாக கில் அடித்த 269 ரன்கள் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் முல்தானில் சேவாக் 309 ரன்களும், ராவல்பிண்டியில் திராவிட் 270 ரன்களும் சேர்த்திருந்தனர், மூன்றாவதாக கில் 269 ரன்கள் இடம் பிடித்துள்ளது.

பிரிட்டன் மண்ணில் இதற்கு முன் டெஸ்ட் போட்டியில் இரு இந்தியர்கள் மட்டுமே இரட்டை சதம் அடித்திருந்தனர். 2002ல் ராகுல் திராவிட்டும், 1979ல் சுனில் கவாஸ்கரும் அடித்திருந்தனர். ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப்பின் சுப்மன் கில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டர்கள் அடித்த ஸ்கோர்களில் 7-வது அதிகபட்ச ஸ்கோரை சுப்மான் கில் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு பயணம் செய்து இதற்கு முன் இரு பேட்டர்கள் மட்டுமே இரட்டை சதம் அடித்திருந்தனர். அதில் 2003-ல் கிரேம் ஸ்மித் 277 ரன்களும், 1971-ல் அப்பாஸ் 271 ரன்களும் அடித்திருந்தனர். அந்த வகையில் 22 ஆண்டுகளுக்குப் பின் வெளிநாட்டு அணியைச் சேர்ந்த ஒரு பேட்டர் என்ற வகையில் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

உலகளவில் 7 பேட்டர்கள் கேப்டன் பொறுப்பேற்று முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ளனர். விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், விராட் கோலி, ஜேக்கி மெக்ளூ, அலிஸ்டார் குக், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் வரிசையில் கில் இடம் பெற்றார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதத்தை இதுவரை 5 பேட்டர்கள் செய்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, கிறிஸ் கெயில், இப்போது சுப்மன் கில்.

சிம்மசொப்னம்

கடந்த இரு நாட்களாக பேட்டிங்கில் அசைக்க முடியாத வல்லமை மிகுந்தவராக கில் களத்தில் இருந்தார். கில்லை ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் ஸ்டோக்ஸ் பலவிதமான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒரு சிறிய தவறைக் கூட கில் செய்யவில்லை.

கில்லின் ஆட்டத்தில் 93.28 சதவீதம் கட்டுப்பாட்டுடன் இருந்தது. கிரிக்இன்போ தகவலின்படி டெஸ்ட் போட்டியில் 2006க்குப் பின் இரு பேட்டர்கள் மட்டுமே அதிக கட்டுப்பாட்டுடன் இதுவரை பேட் செய்துள்ளனர்.

2006ல் இயான் பெல் இலங்கைக்கு எதிராக 96.45 சதவீத கட்டுப்பாட்டுடன் பேட் செய்து 119 ரன்களும், ஜேம் ஸ்மித் 94.60% சதவீதம் கட்டுப்பாடுடன் பேட் செய்து இலங்கைக்கு எதிராக 111 ரன்களும் சேர்த்தனர். அதற்கு பின் கில் இப்போது கட்டுப்பாட்டுடன் பேட் செய்துள்ளார்.

இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி முதல்நாளில் ஆட்டமிழந்து சென்ற பின் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தருடன் கூட்டணி சேர்ந்த கில் 376 ரன்களை அணிக்காக சேர்த்துக் கொடுத்துள்ளார்.

ஜடேஜாவுக்கு திட்டம்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருந்தது. ஜடேஜா (41), கில் (114) கூட்டணி 99 ரன்களுடன் ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆட்டம் தொடங்கி முதல் ரன்னை ஜடேஜா எடுத்தவுடன் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியது.

நிதானமாக ஆடிய சுப்மன் கில் 263 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். ஜடேஜாவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளை விளாசி சதத்தை நோக்கி நகர்ந்தார்.

ஜடேஜாவுக்கு பவுன்ஸரில் சிக்கல் இருப்பதை உணர்ந்த கேப்டன் ஸ்டோக்ஸ், அதற்குரிய உத்தியை செயல்படுத்தினார். வோக்ஸை பந்துவீசச் செய்து, ஜடோஜாவின் பாடிலைனில் பவுன்ஸர் வீசச் செய்தார். திடீரென வந்த பவுன்ஸரை சமாளிக்க முடியாத ஜடேஜா விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் இறங்கிய சுந்தர் கில்லுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி் ஸ்கோர் உயர்வுக்கு உதவினார். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. சுப்மன் கில்லும் 348 பந்துகளில் 250 ரன்களை எட்டினார்.

வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தை நெருங்கியபோது, ரூட் பந்துவீச்சில் போல்டாகி 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கில்லுக்கு மரியாதை தந்த ரசிகர்கள்

கில்லும் 269 ரன்கள் சேர்த்தநிலையில் டங் பந்துவீச்சில் போப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில் ஆட்டமிழந்து வெளியேறியபோது அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவரை பாராட்டினர்.

கில் ஆட்டமிழந்தபின் கடைசி வரிசை வீரர்கள் சிராஜ்(8), ஆகாஷ்(6) ஆகியோர் விரைவாக வெளியேற இந்திய அணி 151 ஓவர்களில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஷோயிப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், டங், வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதிர்ச்சித் தொடக்கம்

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை மாலை தேநீர் இடைவேளைக்குப்பின் தொடங்கிய நிலையில் ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆகாஷ் தீப் வீசிய 3வது ஓவரிலேயே பென் டக்கெட் ரன் ஏதும் சேர்க்காமல் ஸ்லிப்பில் இருந்த கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆலி போப் முதல் பந்திலேயே பேட்டில் எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் இருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்கில் வெளியேறினார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

கிராளி, ரூட் நிதானமாக ஆடி வந்தனர். சிராஜ் ஓவரில் தடுமாறிய கிராளி 19 ரன்னில் முதல் ஸ்லிப்பில் இருந்த கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறியது. 4வது விக்கெட்டுக்கு ஹேரி ப்ரூக், ரூட் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டு விளையாடி வருகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு