You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெஸ்ஸி சிறு வயதில் தினசரி தனக்குத்தானே ஊசி போட்டுக் கொண்டது ஏன்? சவால்களை வென்று சாதித்த வரலாறு
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
கால்பந்து வரலாற்றின் சாதனைப் பக்கங்களைப் புரட்டினால் அதில் லயோனெல் மெஸ்ஸியின் பெயர் எங்கும் காண கிடைக்கும். அர்ஜெண்டினாவில் கடைக்கோடியில் பிறந்து ஐரோப்பிய கிளப் கால்பந்தில் நிகரற்ற வீரராக திகழ்ந்து, உலகக்கோப்பையையும் வென்ற நிகழ்கால ஜாம்பவானாகவும் விளங்குகிறார் மெஸ்ஸி.
கால்பந்து உலகில் அவர் அடையாத உயரங்கள் இல்லை, நிகழ்த்தாத சாதனைகள் இல்லை. எந்த புள்ளிவிவரப் பட்டியலை எடுத்தாலும் அதில் அவரது பெயர் இருக்கும்.
இந்த சாதனைகளுக்கெல்லாம் அப்பால் அவர் சந்தித்த தனிப்பட்ட சவால்களும் உள்ளன. கால்பந்து உலகில் நாயனாக அறியப்படும் மெஸ்ஸி அவரின் உயரத்துக்காக நிராகரிப்புகளையும், கேலிகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்கிறார்.
அர்ஜெண்டினாவில் ரோசாரியோ நகரில் பிறந்த மெஸ்ஸி முதலில் நீவெல் ஓல்ட் பாய்ஸ் என்கிற கிளப்பிற்காக விளையாடி வந்துள்ளார். மிக இளம் வயதிலே அவரின் கால்பந்து திறமையால் வெளிச்சம் பெற்றார் மெஸ்ஸி.
வாழ்க்கையின் திருப்பு முனை
மெஸ்ஸி வாட்டசாட்டமான உடலமைப்பு கொண்ட வீரர் கிடையாது, ஆனால் களத்தில் அவரின் கால்பந்தாட்ட திறமைக்கு முன் வெகு சிலரே போட்டியிட முடியும். 38 வயதான, 5.7 அடி உயரம் கொண்ட மெஸ்ஸி அர்ஜெண்டினா ஜாம்பவானான மரடோனாவின் நிழலாகவும் சம காலத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சரிநிகர் போட்டியாளராகவும் கருதப்படுகிறார்.
தனது 10வது வயதில் தொடர்ந்து நீவெல் கிளப்புக்காக அவர் விளையாடிக் கொண்டிருந்தார். தனது வாழ்வை மாற்றி வைக்கும் தருணம் விரைவிலே வரும் என அந்த 10 வயது சிறுவனாக அவர் அறிந்திருக்க மாட்டார். சிறு வயதில் அவரின் கிளப்பைச் சேர்ந்த பலருமே மெஸ்ஸியை அவரின் உயரத்தை வைத்து கேலி செய்துள்ளனர்.
"என் உயரத்தை வைத்து பலரும் என்னை சந்தேகப்பட்டனர். ஆனால், நான் தொடர்ந்து எனது திறன்களை வளர்த்து விளையாடிக் கொண்டே இருந்தேன்," என தன் மீதான தொடக்க கால விமர்சனங்கள் பற்றி குறிப்பிடுகிறார் மெஸ்ஸி.
முதலில் இதனை அவதூறாக எடுத்துக்கொண்ட அவரது பெற்றோரும் பயிற்சியாளர்களும் மெஸ்ஸி தனது வயதை ஒத்த மாணவர்களுடன் ஒப்பிடுகையில் உயரம் குறைவாக இருந்ததை உணர்ந்தனர். மெஸ்ஸிக்கு 11 வயது இருந்த போது மெஸ்ஸிக்கு உள்ள குறைபாட்டை ஆராய முடிவு செய்தனர்.
வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மெஸ்ஸி
பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு மெஸ்ஸிக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு (GHD) இருப்பதை டியாகோ ஸ்வார்ஸ்ஸ்டீன் என்கிற மருத்துவர் உறுதிபடுத்தியதாக 2002-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, சராசரியான விகிதத்தில் உயரமாக வளர்வதற்கான ஹார்மோனை அவரின் உடல் உற்பத்தி செய்யவில்லை. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் மெஸ்ஸி. அவருக்கு தினசரி ஹார்மோன் ஊசிகளை செலுத்த வேண்டியிருந்தது. இந்த சிகிச்சைக்கு மாதம்தோறும் 1,000 டாலர் வரை செலவு செய்ய வேண்டியிருந்தது.
நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த மெஸ்ஸியின் பெற்றோரால் இதனை சமாளிக்க முடியவில்லை. நீவெல் கிளப் மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களாலும் தொடர்ந்து சிகிச்சைக்கு உதவ முடியவில்லை.
இவ்வாறாகவே மாதங்கள் உருண்டோடிய சூழலில் தான் பார்சிலோனா அணிக்காக விளையாடும் வாய்ப்பு மெஸ்ஸியின் வீட்டுக் கதவைத் தட்டியது. தனது 13 வயதில் பார்சிலோ கிளப்புக்கான தேர்வில் கலந்து கொண்டார். அவரின் திறமைகளைக் கண்டு வியந்த பார்சிலோனா நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு வழங்கியதோடு சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்ள முன்வந்தது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கிறது.
ஸ்பெயினுக்கு இடம்பெயர்ந்த தருணம்
பார்சிலோனா ஒப்பந்தத்துக்குப் பிறகு 13 வயதான மெஸ்ஸி அர்ஜெண்டினாவில் இருந்து ஸ்பெயினுக்குச் சென்றார். பார்சிலோனாவின் பயிற்சி அகாடமியான லா மேசியாவில் இணைந்தார். "நீவெல் அணிக்கு விளையாட வேண்டும் என்பது தான் என் கனவாக இருந்தது. நான் ஐரோப்பாவுக்குச் செல்வேன் என என்னுடைய சிறு வயதில் நினைத்ததில்லை" எனக் கூறுகிறார் மெஸ்ஸி. மெஸ்ஸியின் குடும்பம் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது. ஆனால், அவர்களால் அங்கு தொடர முடியவில்லை.
மெஸ்ஸி பற்றிய பிபிசி ஆவணப்படத்தில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
"என்ன செய்வது என்று முடிவெடுக்க மெஸ்ஸியின் குடும்பம் கூடியது. லியோ நீ என்ன நினைக்கிறாய் என அவரின் அம்மா கேட்க, "எனக்கு ஜெயிக்க வேண்டும், நான் பார்சிலோனாவில் இருக்க விரும்புகிறேன். எனக்கு தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக ஆக வேண்டும்" எனப் பதில் அளித்துள்ளார். 13 வயது மெஸ்ஸிக்கு அவரது பதிலின் வீரியம் அப்போது புரிந்திருக்கவில்லை" என அவரின் சரிதையை எழுதிய பத்திரிகையாளர் கைலெம் பாலகே பிபிசி ஆவணப்படத்தில் விவரித்துள்ளார்.
மெஸ்ஸியின் தாய் மற்ற பிள்ளைகளுடன் அர்ஜெண்டினாவுக்கே திரும்பச் செல்ல அவர் தந்தை மட்டும் பார்சிலோனாவிலே தங்கினார். இளம் வயதில் குடும்பத்தையும் அம்மாவையும் பிரிந்திருந்தது கடினமாக இருந்ததாகப் பல்வேறு தருணங்களில் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
கடினமான அனுபவம் - மெஸ்ஸி
மெஸ்ஸியின் 15 வயது வரை சிகிச்சை தொடர்ந்தது. இந்த சிகிச்சைக்காக தினமும் அவரது காலில் ஹார்மோன் ஊசிகளை செலுத்த வேண்டியிருந்தது. அவரே தினமும் ஒவ்வொரு காலிலும் மாற்றிமாற்றி ஊசியை செலுத்த வேண்டும். இந்த அனுபவத்தை மிகவும் கடினமானது எனக் குறிப்பிடுகிறார், "ஒவ்வொரு இரவும் நான் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நான் நிறுத்தவில்லை, ஏனென்றால் நான் வளர்வதற்கு இது ஒன்று தான் வழி என எனக்குத் தெரிந்திருந்தது" என கைலெம் பாலகே எழுதிய புத்தகத்தில் மெஸ்ஸி தெரிவித்துள்ளதாக 2019ம் ஆண்டு வெளியான நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கிறது.
தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவரின் வளர்ச்சி சீரானது. மெஸ்ஸியின் உயரம் 5.7 அடி ஆனது. ஆனால், கால்பந்து உலகில் அவர் எட்டிய உயரம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. 2004-ல் 17 வயதில் பார்சிலோனா சீனியர் அணிக்காக அறிமுகமானார் மெஸ்ஸி. 2005-ல் 18 வயதிலே பார்சிலோனா அணிக்காக லா லிகா கோப்பையை வென்றார் மெஸ்ஸி. அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான். அவரது குடும்பம் ஸ்பெயினில் அவருடன் இணைந்தது.
பார்சிலோனாவுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இந்தியாவில் சச்சின், தோனி தொடங்கி பல விளையாட்டு வீரர்களும் வெளிப்படையாகவே மெஸ்ஸியை புகழ்ந்துள்ளனர்.
கிரிக்கெட்டில் 1983-ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியின் உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு இந்தியாவின் அடுத்த பெரும் நட்சத்திரமாக உருவெடுத்த சச்சின் அதே மைல்கல்லை எட்ட விரும்பி முடிவில் அதை சாதித்தும் காட்டிவிட்டார்.
அதேபோன்ற தொடர்ச்சியை அர்ஜெண்டினா கால்பந்து வரலாற்றிலும் காண முடியும். மரடோனா தலைமையில் அர்ஜெண்டினா 1986-ல் உலக கோப்பையை வென்றது. அதற்கு சில மாதங்கள் கழித்து பிறந்தார் மெஸ்ஸி.
ஐந்து உலக கோப்பைத் தொடர்களில் விளையாடிய சச்சினுக்கு தனது ஆறாவது மற்றும் கடைசி தொடரில் தான் கோப்பையை கையில் ஏந்தும் வாய்ப்பு கிடைத்தது. 2003-ல் இறுதிப் போட்டியில் தோல்வி, 2007-ல் லீக் தொடரிலே வெளியேற்றம் எனப் பல பின்னடைவுகளைச் சந்தித்திருந்தார் சச்சின்.
2022 கால்பந்து உலக கோப்பைக்கு முன்பாக பல முறை நாக் அவுட் சுற்றுகளிலே வெளியேறி இருந்தது அர்ஜெண்டினா அணி. 2014-ல் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோற்றது. 2018-ல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. கோபா அமெரிக்கா தொடரிலும் நான்கு இறுதிப் போட்டிகளில் விளையாடிய மெஸ்ஸியால் 2021-ல் தான் அந்தக் கோப்பையை வெல்ல முடிந்தது.
2011-ல் தனது இறுதி தொடரில் 50 ஓவர் உலக கோப்பை வென்றார் சச்சின். 2022-ல் கால்பந்து உலக கோப்பை வென்றார் மெஸ்ஸி. 36 ஆண்டுகள் கழித்து அர்ஜெண்டினாவுக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இருவரின் ஜெர்ஸி எண்ணும் 10 என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனவை நனவாக்கிய நாயகன்
தென் அமெரிக்க கண்டத்தின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலைத் தயாரித்தால் அதில் மெஸ்ஸியின் பெயர் முன் வரிசையில் இருக்கும். 1960களில் பிரேசில் வீரர் பீலே மூன்று கால்பந்து உலக கோப்பைகளை வென்று கால்பந்து உலகில் தலைசிறந்த வீரர் என்று பெயரெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கால்பந்து உலகில் நாயகனாக உருவெடுத்த மரடோனா 1986-ல் உலக கோப்பையை வென்றார். அர்ஜெண்டினா இன்னொரு உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மரடோனாவின் ஆசையாக இருந்தது.
அதே சமயம் மரடோனாவுடனான ஒப்பீடு மெஸ்ஸியை எப்போதும் துரத்திக் கொண்டே இருந்தது. "பல வருடங்களாக மரடோனா போல விளையாட வேண்டும் என்கிற அழுத்தம் மெஸ்ஸி மீது இருந்தது. அதனை அவர் சௌகர்யமாக உணரவில்லை. அவர் தனது வழியைப் பின்பற்றினார். 2022-ல் அது கைகூடியது" என விளையாட்டு செய்தியாளர் மோரா ஒய் அராஜோ 2023-ம் ஆண்டு பிபிசி இணையதளத்தில் வெளியான கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
மரடோனா 2008 முதல் 2010 வரை அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டார். அப்போதும் அர்ஜெண்டினாவால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. 2010 உலக கோப்பையில் கால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் 4 - 0 என்கிற கணக்கில் தோல்வியுற்று வெளியேறியது அர்ஜெண்டினா. மரடோனா 2020-ல் மறைந்தார். கால்பந்து உலகில் அவரின் நிழலாக வர்ணிக்கப்படும் மெஸ்ஸி 2022-ல் அவரின் கனவையும் நிறைவேற்றினார்.
2022 உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் மெஸ்ஸி. ஆனால் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து விளையாடப் போவதாகக் கூறினார் மெஸ்ஸி. இன்றளவும் கால்பந்து உலகை ஆட்டிப் படைக்கிறது மெஸ்ஸி என்கிற மந்திரச் சொல், அது இனியும் அவ்வாறே இருக்கப் போகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு