இரான், இராக், ஆப்கனில் ராணுவ தலையீடு மூலம் அமெரிக்கா சாதித்தது என்ன?
கடந்த மே மாதம் முந்தைய அமெரிக்க அதிபர்களின் வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடும் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தபோது, பலரின் கவனத்தை ஈர்த்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
"நாட்டை கட்டியமைத்தவர்களாக கூறப்பட்டவர்கள், அவர்கள் கட்டியமைத்ததைவிட அதிக நாடுகளை அழித்தனர்" என சர்ச்சைக்குரிய இராக் படையெடுப்பை குறிப்பால் உணர்த்தி டிரம்ப் பேசினார்.
ஆனால், ஒரு மாதத்திலேயே இரானில் இருக்கும் மூன்று அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டது.
"இரானின் அணு செறிவூட்டல் திறனை அழித்து, உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவு நாட்டின் அணு ஆயுத அபாயத்தை தடுப்பதுதான் எங்களது நோக்கமாக இருந்தது," என தாக்குதலுக்கு பின்னர் டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண வெளிநாடுகளில், அமெரிக்கா தலையிட்டபோது அனைத்தும் திட்டமிட்டபடி நடந்ததில்லை என வரலாறு கூறுகிறது.
சரி, அப்படி அமெரிக்கா தலையிட்ட விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
இரானில் ஆட்சிக் கவிழ்ப்பு
1953ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆதரவுடன் இரான் ராணுவம் நடத்திய கிளர்ச்சியில் இரானில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
இரானின் பரந்த கச்சா வளங்கள் தேசியமயமாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் மொசாடெக் பதவிக்கு வந்திருந்தார். இந்த வாக்குறுதியும் கம்யூனிஸ அபாயமும் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை கவலைக்குள்ளாக்கின.
ஆரம்பத்தில், ஷா முகமது ரேசா பஹ்லவியை மீண்டும் அரியணையில் அமர்த்துவதற்கு ஆதரவான மக்கள் எழுச்சியாக சித்தரிக்கப்பட்ட கிளர்ச்சி, பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவுப்பிரிவுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
கிளர்ச்சி நடந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னர், கிளர்ச்சியில் தனது பங்கை ஒப்புக்கொள்ளும் ஆவணங்களை முதல்முறையாக அமெரிக்காவின் சிஐஏ 2013-ல் வெளியிட்டது.
அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான தற்போதைய மோதலின் ஆணிவேர் இந்த ரகசிய தலையீட்டில்தான் இருப்பதாக கூறுகிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியருமான கெர்ஜஸ்.
"சட்டப்படி ஜனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஒருவரை பதவியிலிருந்து தூக்கி வீசிவிட்டு ஒரு கொடூரமான சர்வாதிகாரியான இரானின் ஷாவை நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சியாளராக நிறுவியதற்கு அமெரிக்காவை இரானியர்கள் எப்போதும் மன்னிக்கவில்லை" என்றும் அவர் கூறுகிறார்.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியவாதிகளுக்கு ஆதரவு
1979 ஆம் ஆண்டில், சோவியத் ரஷ்யாவின் ராணுவம் ஒரு வருடம் முன்பு ஆட்சிக்கு வந்த கம்யூனிச அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.
ஆனால், முஜாஹிதீன் எனப்பட்ட இஸ்லாமிய குழுவிடமிருந்து சோவியத் படைகள் எதிர்ப்பை எதிர்கொண்டனர்.
கம்யூனிச அரசுக்கு எதிரான இஸ்லாமிய ஜிஹாதி தீவிரவாதிகளைக் கொண்ட இந்தக் குழு, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, மற்றும் செளதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தது.
பனிப்போர் காலத்தில், சோவியத்தின் நோக்கங்களை தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு அதிக ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தது.
வியட்நாம் போரில் அமெரிக்க ராணுவம் சந்தித்த உயிரிழப்புகள் மற்றும் வள இழப்புகளுக்கு ஒப்பாக ஆப்கானிஸ்தானில் ஒரு புதைகுழியில் சோவியத் யூனியனை சிக்கவைக்க அமெரிக்கா முயன்றது.
இறுதியாக, 1989ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சோவியத் துருப்புகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின.
ஆனால், அந்த நாடு விரைவிலேயே பல்வேறு பிரிவுகளுக்கிடையேயான உள்நாட்டு போரில் சிக்கி சோவியத் யூனியனின் ஆதரவு இல்லாத அரசு விரைவிலேயே வீழ்ந்தது. இந்த கொந்தளிப்பான நேரத்தில், ஒரு புதிய தீவிரவாதக் குழு உருவானது. அதுதான் தாலிபன்.
இதைப் போலவே சோவியத்-ஆப்கான் போர் முடிவடைந்த பின்னர், ஆப்கானிஸ்தான் போராளிகள் குழு ஒன்று இஸ்லாமிய போராட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கு வெளியேயும் கொண்டு செல்ல அல்-கொய்தாவை உருவாக்கினர்.
தாலிபன்கள் அந்த அமைப்புக்கும் அதன் தலைவர் ஒசாமா பின்லேடனுக்கும் தங்கள் நாட்டில் அடைக்கலம் கொடுத்தனர், அங்கிருந்துதான் அவர் செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்கா மீதான தாக்குதலைத் திட்டமிட்டார்.
அக்டோபர் 2001 இல், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தலைமை தாங்கியது. செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு தாலிபான்களை ஆப்கானிஸ்தானிலிருந்து விரட்டவும், ஜனநாயகத்தை ஆதரிக்கவும், அல்-கொய்தாவால் ஏற்படும் அச்சுறுத்தலை அகற்றவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை அமெரிக்கா விரைவாகக் கைப்பற்றியது.
2003 முதல் நேட்டோ துருப்புக்களும் ஆப்கானிஸ்தானில் இருந்தன.
புதிய ஆப்கானிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தாலிபன் தாக்குதல்கள் தொடர்ந்தன. தாலிபன்கள் தொடர்ந்து பலம் பெற்று தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்களைத் தொடங்கினர்.
இறுதியாக, ஏப்ரல் 2021 இல், அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்கு சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இந்த முடிவு ஆப்கானிஸ்தான் விரைவாக தாலிபன்களின் கைகளில் விழுவதற்கு வழிவகுத்தது.
இராக் மீது படையெடுப்பு
1990 ஆகஸ்ட் மாதத்தில் இராக் ராணுவம், அப்போதைய அதிபர் சதாம் ஹுசைனின் உத்தரவுப்படி குவைத் எல்லையை கடந்து, படையெடுப்பை எதிர்த்த நூறுக்கணக்கான மக்களை கொன்றதுடன் குவைத் ஆட்சியாளர்களை செளதி அரேபியாவுக்கு விரட்டியது.
அமெரிக்காவின் தலைமையில் பிரிட்டன் மற்றும் செளதி அரேபியாவின் ஆதரவுடன் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஒரு மிகப்பெரிய கூட்டணி உருவாகி, குவைத்திலிருந்து இராக் படைகளை வெளியேற்ற 1991 ஜனவரி 17ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது.
இதன் பின்னர், இராக் தனது பேரழிவு ஆயுதங்களையெல்லாம் அழிக்க வலியுறுத்தி, ஐநா பாதுகாப்பு கவுன்சில் 687ஆவது தீர்மானத்தை நிறைவேற்றியது.
2001-ல் நியூயார்க் உலக வர்த்தக மையம் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் இராக் மீது படையெடுக்க திட்டமிடத் தொடங்கினார்.
உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக "நடமாடும் ஆய்வகங்களை" இராக் வைத்திருப்பதாக அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலாளர் 2003ல் ஐநாவிடம் தெரிவித்தார். ஆனால், ஆதாரங்கள் அவ்வளவு திடமானவையாக இருப்பதாக தெரியவில்லை என அவரே 2004-ல் ஒப்புக்கொண்டார்.
பிபிசியின் சர்வதேச ஆசிரியர் ஜெரெமி போவெனின் கூற்றுப்படி, 2003ஆம் ஆண்டு படையெடுப்பு இராக்குக்கும் அதன் மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தி நாட்டை பல்லாண்டுகளாக குழப்பத்தில் ஆழ்த்தியது.
"ஒசாமா பின்லேடன் மற்றும் ஜிஹாதி தீவிரவாதிகளின் சித்தாந்தத்தை அழிப்பதற்கு பதிலாக, 2003இல் தொடங்கிய குழப்பமும் மிருகத்தனமும் ஜிஹாதி வன்முறையை மேலும் அதிகரித்தது" என்று இந்த தாக்குதலின் 20வது ஆண்டு நினைவு நாளில் அவர் எழுதிய பகுப்பாய்வில் குறிப்பிட்டார்.
இந்த படையெடுப்பின் மற்றொரு விளைவு அல்-கொய்தா மறு உரு பெற்று தன்னைத் தானே 'இஸ்லாமிய அரசு' என அழைத்துக்கொள்ளும் குழுவாக மாறியது.
2003 படையெடுப்பின் விளைவாக எத்தனை இராக்கியர்கள் மரணமடைந்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை.
படையெடுப்புக்கு பிறகு உயிரிழந்த பொதுமக்களின் இறப்புகளை பதிவு செய்வதற்காக தொடங்கப்பட்ட இராக் பாடி கவுன்ட் கணக்கின்படி 2,09,982 இராக் பொதுமக்கள் 2003 முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் கொல்லப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



