நீலமலை தொல்லியல்: பழங்குடிகளுக்கு அதிக செலவு வைக்கும் 'கல்லெடுப்புச் சடங்கு' பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், YAAKKAI
''குறும்பர், இருளர் பழங்குடியினர் மலை உச்சிகளில் கட்டியுள்ள கூடுகளில் தேனெடுப்பதற்கு தாவரக் கொடிகளைக் கட்டி ஏணி அமைப்பார்கள். அதில் தலைகீழாக தொங்கியவாறு தேனெடுப்பார்கள். உயரமான பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்களை இந்த தாவர ஏணியில் ஏறியும் இறங்கியுமே ஆவணப்படுத்தினோம்!''
''கீழ்தொந்திவரையிலிருந்து வேடவரையை நோக்கிய மலைப்பயணத்தில் சுமார் 2 கி.மீ. தூரம் வந்திருப்போம். எங்களுக்குச் சற்று முன்பாக ஒரு சிறுத்தை மரக்கிளையிலிருந்து பள்ளத்தாக்கினை நோக்கிக் குதித்து ஓடியது!''
நீலமலைத் தொல்லியல் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ள சுதாகர் நல்லியப்பன், குமரவேல் இராமசாமி இருவரும் பகிரும் களஅனுபவங்களும், நூலில் அவர்கள் விவரித்துள்ள நிகழ்வுகளும், சமவெளிகளில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகளுக்கு மாறாக, மலைப்பகுதிகளில் காட்டுக்குள் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதில் உள்ள சவால்களையும் ஆபத்துக்களையும் படம்பிடித்துக்காட்டுகின்றன.
மலைகளில் உள்ள பாறை ஓவியங்களின் முக்கியத்துவம், தொல்குடிகளின் வாழ்வியல் முறை, சமவெளிகளில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகளுக்கும், மலைகளில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம், அங்கும் இங்குமாக அகழாய்வில் கிடைக்கின்ற பொருட்களில் இருக்கும் வேறுபாடுகள், காலக்கணக்கீடு என்பது போன்ற பல கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது 'நீலமலைத் தொல்லியல்' நூல்.
மலைகளின் தொல்லியல் குறித்த விரிவான பதிவு

பட மூலாதாரம், YAAKKAI
நீலகிரி மாவட்டத்தின் தொல்லியல் சான்றுகள் குறித்து விரிவான ஆய்வுகளைத் தாங்கிய பெரும்நூலாக வந்துள்ளது 'நீலமலைத் தொல்லியல்'.
146 நிழற்படங்கள், 90 விளக்கப்படங்கள், 17 அட்டவணைகள், 13 நில வரைபடங்களை உள்ளடக்கி 448 பக்கங்களுடன் இதை வெளியிட்டுள்ளது யாக்கை அறக்கட்டளை. இந்நூலின் ஆசிரியர்கள் சுதாகர் நல்லியப்பன், குமரவேல் இராமசாமி ஆகியோர், 2018-ஆம் ஆண்டிலிருந்து பாறை ஓவியங்கள், பெருங்கற்சின்னங்கள் மற்றும் பழங்குடித் தொடர்புறவுகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இந்நூலுக்காக யாக்கை குழுவினர் 8 ஆண்டுகளாக மேற்கொண்ட பயணங்களையும், பாறை ஓவியங்களில் காணப்பட்ட தொல்குடிகளின் வாழ்வியல் முறையையும், அதே பழங்குடிகளின் இன்றைய இருப்பையும் வாழ்வியலையும் இணைத்துக் கூறியிருக்கும் விதம், நூலைப் படிப்பவர்களுக்கு வனத்திற்குள்ளும், காலவெளியினூடாக பல நூற்றாண்டுகள் பின்னோக்கியும் பயணிப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது.
பவானியாறு, மாயாற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள பாறை ஓவியங்கள், பெருங்கற்சின்னங்களை ஆவணப்படுத்துவதும், அருகாமைப் பழங்குடி மக்கள் இதனோடு கொண்டிருக்கும் தொடர்புறவுகளை அறிவதுமே இந்நூலின் மையநோக்கம் என்றே இதன் ஆசிரியர்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நூல், நீலமலையின் இயற்கை அமைப்பையும் சேர்த்து பாறை ஓவியங்களின் பின்புலத்தை விளக்குகிறது.
நீல நிறத்தில் பூக்கும் குறிஞ்சிப்பூக்கள் நிறைந்த நிலம் இது. சமவெளியிலிருந்து பார்க்கும்போது மலை முழுவதும் நீலமாகத் தெரிவதால் நீலமலை என்று பெயர் பெற்றதாக அதன் பெயர்க் காரணத்திலிருந்து, அதன் இயற்கை அமைப்பை விரிவாக விளக்குகிறது இந்நூல்.
தொல் பண்பாடு, நீலமலை அறிமுகம், நீலமலைப் பாறை ஓவியக் கலைப்படைப்புகள், திறனாய்வுப் பார்வை– தொடர்புறவுகள், நீலமலை பெருங்கற்படைச் சின்னங்கள், பழங்குடித் தொடர்புறவுகள்–சடங்குகள் என 6 இயல்களாக இந்த நூல் பிரிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், YAAKKAI
இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகமாக அங்கீகரிக்கப்பட்ட நீலகிரியை பழங்குடிகளின் மாவட்டம் என்றும் சொல்லும் அளவுக்கு பழங்குடிகளும் இங்குதான் அதிகமாகவுள்ளனர். தொதவர் (தோடர்), குறுமர் (குறும்பர்), இருளர், கோத்தர், பணியர், காட்டு நாயக்கர் ஆகிய 6 பழங்குடிகள் இங்கு வாழ்கின்றனர்.
இவர்களில் தோடர்கள்தான், உலக மானுடவியலாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த பழங்குடியினர் என்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தோடர்கள் குறித்து வில்லியம் மார்ஷல் (1873), தர்ஸ்டன் (1901), டபிள்யு.ஃபிரான்சிஸ் (1908), டேவிட் ஜி.மாண்டல்பாம் (1968), அந்தோணி வாக்கர் (1986) என பலரும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர், இந்த தோடர்கள் யார் என்பதற்கு பல கதைகள் உள்ளன என்கிறார்.
இதுகுறித்து நீலமலைத் தொல்லியல் நூலின் வாழ்த்துரையில் விளக்கியுள்ள ஆர்.பாலகிருஷ்ணன், ''பைபிளில் வரக்கூடிய இறுதி பழங்குடிகள் இவர்கள்தான் என்றும் கதைகள் உள்ளன. பாலத்தீனத்திலிருந்து வந்தவர்கள். ஜெருசேலம், ஜப்பானிலிருந்து வந்தவர்கள் என பல கருத்துகள் உள்ளன.'' என்கிறார்.
நீலகிரி மலையில் பெருங்கற்படைச் சின்னங்கள் குறித்த விரிவான தரவுகள் காணப்படுகின்றன என்று கூறும் ஆர்.பாலகிருஷ்ணன், இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற பகுதிகளில் காணப்படும் பல்வேறு கற்பதுக்கைத் தரவுகளுடன் நீலமலைத் தரவுகளையும் ஒப்பிட்டு நோக்குவதற்கான புதிய திறப்புகளையும் நீலமலை தொல்லியல் நூல் வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
பாறை ஓவியங்கள்- வண்ணச்சாந்துகளும் வரலாறும்

பட மூலாதாரம், YAAKKAI
பாறை ஓவியங்களை உலகளாவிய பொது ஆவணம் என்று கூறும் தொல்லியல் ஆய்வாளர்கள், அண்டார்டிகா தவிர ஏனைய நிலங்களில் இவை பரவலாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்திய பாறை ஓவியங்களின் தந்தை வகாங்கர், இந்தியாவில் 4 ஆயிரம் பாறை ஓவியங்கள் இருக்கலாம் என்று கணித்ததைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர் குமரவேல், தமிழகத்தில் 550 பாறை ஓவியங்கள், கற்செதுக்கைகள் இருக்கலாம் என்கிறார்.
இவற்றில் நீலகிரியிலுள்ள பாறை ஓவியங்கள், நீலமலையில் தொன்று தொட்டு வாழும் தொல்குடிகளின் கருத்துப் பரிமாற்றத்திற்கான தடயங்கள்தான் என்கிறார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை முன்னாள் தலைவர் சுப்புராயுலு. இதை உறுதிப்படுத்தும் விதமாக, நீலமலைத் தொல்லியல், நீலகிரியின் இயற்கை அமைப்புடன் இணைத்து நீலமலைப் பழங்குடிகளின் இருப்பையும், வாழ்வியலையும் விளக்குகிறது.
இதுபற்றிப் பேசிய தமிழக அரசின் தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநரும், மூத்த தொல்லியல் ஆய்வாளருமான பூங்குன்றன், ''மானுடவியல் அறிவில்லாமல் தொல்லியலைப் பார்க்கக்கூடாது. அமெரிக்காவில் இரண்டும் சேர்த்தே ஒரு துறையாக இயங்குகிறது. பழங்குடிகளுக்கும், பாறை ஓவியங்களுக்குமான தொடர்பு அதிகம் என்பதை இந்த நூல் உறுதியாகச் சொல்கிறது.'' என்றார்.
தொல்லியலை தொழிலாகப் பலரும் செய்து வரும் நிலையில், யாக்கை குழுவினர் தங்கள் சொந்தச்செலவில் காடு, மேடுகள், மலையுச்சிகள் என அலைந்து, இவற்றைத் தேடியிருப்பதாக பூங்குன்றன் குறிப்பிட்டார். நீலமலைகளின் மீதான யாக்கைக் குழுவினரின் பயண அனுபவ விவரிப்புகள் மலைபடுகடாம் என்ற ஆற்றுப்படை இலக்கியம் போல வாசகர்களை தொல்லியல் தேடலுக்கு ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்டது என்று கூறியுள்ளார் தேனி வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் முனைவர் பாவெல் பாரதி.
நீலமலையில் பாறை ஓவியங்கள் எங்கே இருக்கின்றன, எப்படி இருக்கின்றன, எத்தனை படிமங்களாக அவை உள்ளன என்பதைத்தான் இந்த நூலில் தாங்கள் பதிவு செய்துள்ளதாக பிபிசியிடம் தெரிவித்த நூலாசிரியர்கள்,
தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே, பாறையின் மேற்பரப்பில் ஓவியம் வரைவது (Paintings), கடினமான கற்களைக் கொண்டு பாறையின் மேற்பரப்பைக் கீறி உருவங்களை வரைவது (Petroglyps), மணற்பாறைகளைத் தேய்ப்பதன் வழியே உருவங்களைக் கொண்டு வருவது (Rubbing) என 3 வகையான பாறை ஓவியங்கள் நீலமலையில் காணப்படுவதாக விளக்கியுள்ளனர்.

பட மூலாதாரம், YAAKKAI
பாறை ஓவியங்களை வரைவதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்ணச்சாந்துகளைப் பற்றி, நேரடியாக இவர்கள் களஆய்வு செய்திருப்பதுடன், இதுதொடர்பாக பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ள சில தகவல்களையும் இணைத்து சில சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி, இயற்கையில் கிடைக்கும் தாவரச்சாறுகள், விலங்குகளின் ரத்தம், கொழுப்பு, கரிமம், பாறைத்தனிமங்கள் இவற்றின் கலவைகளைக் கொண்டே பாறை ஓவியங்களுக்கான வண்ணச்சாந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
'கருஞ்சிவப்பு நிறப்பாறையிலிருந்து (Haematite) எடுக்கப்பட்ட பாறைத் துகள்களைப் பொடியாக்கி நீரில் கலப்பதன் வழியே நிறமிகள் பெறப்பட்டன. இந்த சாந்துகள் பாறையில் படிவதற்கு ஏற்ற பிணைப்புப் பொருட்களாக (Binding Materials) முட்டையின் வெள்ளைக்கரு, தாவரச்சாறு, கோந்துகள், விலங்குகளின் ரத்தம், எலும்பு மஜ்ஜை ஆகியவை பயன்பட்டன' என்று கூறும் நூலாசிரியர்கள், இது தொடக்கநிலை ஆய்வுக் கருத்து என்றும் தெரிவித்துள்ளனர்.
இயற்கையான பொருட்களைக் கொண்டு இந்த பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதால்தான், பல நூற்றாண்டுகளைக் கடந்து, பல்வேறு இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் இவை அழியாமல் இருக்கிறது என்பது இவர்கள் கூறும் அழுத்தமான பதிவாகவுள்ளது.
சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த மறைந்த ஓவியர் கிருஷ்ணனும், இதேபோன்றே இயற்கைப் பொருட்களிலிருந்தே வண்ணங்களைத் தயாரிப்பார் என்று அந்த நுட்பத்தையும் கிருஷ்ணனின் மனைவி சுசீலா பிபிசியிடம் விவரித்திருந்தார்.
சமவெளிகளை விட, மலைப்பகுதிகளில் அதிகளவில் காணக்கிடைக்கும் இத்தகைய பாறை ஓவியங்கள் குறித்து இன்னும் விரிவான தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்கிறார் தமிழக அரசின் தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் பூங்குன்றன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''காட்டுக்குள் சென்று தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்வதில் பல சிரமங்கள் உள்ளதால்தான் இவை குறித்த ஆய்வுகள் அதிகம் நடக்கவில்லை. வனச்சட்டம் கடுமையாக இருந்தாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பாறை ஓவியங்கள் சில பாழாவதும் தடுக்கப்படவில்லை. மிகப்பெரிய கரிக்கையூர் பாறை ஓவியங்களின் மேலே அரசியல் கட்சி சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. '' என்றார்.
யாக்கை குழுவினர் நீலமலையில் மேற்கொண்ட 8 ஆண்டு கால ஆய்வுப் பயணங்களில் 74 பழங்குடிகளின் கருத்துகளை பெற்று அவற்றிலிருந்து பாறை ஓவியங்கள், பெருங்கற்சின்னங்கள் ஆகியவற்றுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்புகளைக் கண்டறிந்துள்ளனர். கரிக்கையூர் பொறிவரை, பாய்க்கல்வரை, கரடிவரை, கொப்பையூர்வரை, ஏர்பெட், வேடவரை, கீழ்தொந்திவரை, எழுத்துப்பாறை, தொளிக்கிப்பாறை, தொதுவன்பாறை மற்றும் வணங்காபள்ளம் என நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 11 குகைகளில், மனிதன், எருமை, மாடு, குதிரை, குரங்கு, யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், ஊர்வன, மரங்கள், குறியீடுகள் என 1501 உருவ ஓவியங்களைக் கண்டறிந்து நீலமலை தொல்லியல் நூலில் பட்டியலிட்டுள்ளனர்.
பழங்குடியினரின் சடங்கு முறைகளும் நம்பிக்கைகளும்

பட மூலாதாரம், YAAKKAI
பழங்குடியினரின் பல்வேறு சடங்குகளைப் பற்றி ஆச்சரியமூட்டும் பல தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
ஒரு இனக்குழுவின் தலைவர் போன்ற பொறுப்பில் உள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவருக்காக நடத்தப்படும் கல்லெடுப்புச் சடங்குதான் பழங்குடியினருக்கான அதிகபட்ச செலவினம் உள்ள சடங்கு என்பதையும் பிபிசியிடம் நூலாசிரியர்கள் விளக்கினர்.
''ஒரு பழங்குடியின கிராமத்தின் சமூக வழிகாட்டியாக இருந்த ஒருவர் இறந்துவிட்டால், ஊரைப் பாதுகாத்த அவரை ஒரு தெய்வமாகப் போற்றி அவர் நினைவாகச் செய்வதுதான் கல்லெடுப்புச் சடங்கு. இறந்த உடலை உடனே புதைப்பதை பச்சைச் சடங்கு என்கின்றனர். அதன்பின் 6 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகள் வரை, பொருள் மற்றும் பணம் சேகரித்து, பின்பு அவரின் நினைவாக 3-லிருந்து 5 நாட்கள் இந்த கல்லெடுப்புச் சடங்கை நடத்துகின்றனர். மற்ற பழங்குடியினரையும் இதற்காக அழைக்கின்றனர்.'' என்றார் சுதாகர் நல்லியப்பன்.
''ஒரு சில மலையுச்சிகளில் உள்ள பாறை ஓவியங்கள் உள்ள குகைகளை பழங்குடியினர் புனிதத்தலமாகக் கருதுகின்றனர். நெருக்கடியான காலகட்டங்களில் அங்கே சென்று வழிபடுகின்றனர். அங்கே போகும்போது அவர்கள் காலணி அணிவதில்லை. சுனைகளில் கை, கால் படாமல் தாவரத் தண்டினைப் பயன்படுத்தி தண்ணீர் குடிப்பார்கள். அவர்களுடன் சென்றபோது அப்படியே நாங்களும் செய்தோம்.'' என்று களஅனுபவத்தை பிபிசியிடம் விவரித்தார் குமரவேல்.
நீலமலைப் பழங்குடிகள் பேசும் மொழிகள் பெரும்பாலும், திராவிட மொழிகளின் கிளை மொழிகளாகத்தான் தெரிகிறது என்று கூறும் சுதாகர் நல்லியப்பன், இவர்களின் மொழிகள் குறித்து மொழியியல் ஆய்வுகளும் விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்கிறார். பழங்குடி மக்கள் தங்களுடைய சடங்குகளில் பயன்படுத்தும் புகிரி போன்ற இசைக்கருவிகளைப் பற்றியும் இவர்கள் ஆய்வு செய்து பல தகவல்களையும் பதிவிட்டுள்ளனர்.
இதுபோல பாறைக்குகைக்குள் அகழாய்வு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்று கூறும் நூலாசிரியர்கள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் பாறை ஓவியங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் இந்திய அளவில் வியக்கத்தக்க தொல்லியல் சான்றுகள் நிச்சயமாகக் கிடைக்கும் என்கின்றனர்.
நீலமலைத் தொல்லியல் நூலை, கடந்த நவம்பரில் உதகையில் வெளியிட்டுப் பேசிய தமிழக அரசின் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா, சுற்றுச்சூழல், காலநிலை, காடு, காட்டுயிர்கள் எனப் பல விஷயங்களுக்காக வருவோர் மத்தியில் நீலகிரி நிலவியல் என்பது தொல்லியல் துறையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
''ஒரு அரசு செய்ய வேண்டியதை யாக்கை குழு செய்திருக்கிறது. 1603 ஆம் ஆண்டிலிருந்து நீலகிரியில் பல கட்ட ஆய்வுகள் நடந்து பல்வேறு தரவுகள் வந்துள்ளன. ஆனால் யாக்கை ஆய்வு மிகத்துல்லியமானது. பாறை ஓவியங்களின் காலக்கணிப்பு, இனக்குழுக்களின் வேட்டை, கருவிகள், உணவு, வாழ்வியல் முறைகள், செஞ்சாந்து பயன்படுத்திய காலம், வெண்சாந்து காலம் என முப்பரிமாண முறையில் ஆய்வு செய்துள்ளனர்'' என்று நீலமலை தொல்லியல் நூலாசிரியர்களை பாராட்டினார் தங்கம் தென்னரசு.
தமிழகத்தில் சமவெளிகளில் நடந்துள்ள அகழாய்வுகளில் ஆயிரக்கணக்கான தொல் பொருட்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் காலம் கணிக்கப்பட்டுள்ளதாக கூறும் சுதாகர் நல்லியப்பன், அந்தப் பொருட்கள் அனைத்தும் நகர நாகரிகத்தை வெளிப்படுத்தின என்கிறார். அதற்கு மாறாக, நீலமலையில் பெருங்கல்லறைகளில் இருந்த உள்ளீட்டுப் பொருட்கள் பழங்குடிகளின் அழகியல் தன்மையையும் வழிபாட்டு நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாகவுள்ளன என்கிறார் அவர்.
பிபிசியிடம் இதை விளக்கிய குமரவேல், ''கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வில் கண்டறியப்பட்ட சான்றுகளுக்கும், அங்கு தற்போதுள்ள மக்களுக்கும் பெரிதாக வழிபாட்டு நம்பிக்கை தொடர்புகள் இல்லை. ஆனால் நீலகிரியில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்கள், தொல்பொருட்கள் உள்ளிட்ட சான்றுகளுக்கும், அருகாமைப் பழங்குடிகளுக்கும் அதேதொடர்புகள் உள்ளன. சில முறைகள் மட்டும் மாறியுள்ளன'' என்றார்.
''மண்ணுக்குள் இருக்கும் சான்றுகள் அப்படியே புதைந்தவை. ஆனால் இங்குள்ள பாறை ஓவியங்கள், அருகாமையிலுள்ள பழங்குடிகளுடன் தொடர்பில் உள்ளவை. அவற்றை இன்று வரை அவர்கள் புதுப்பிக்கின்றனர். அதேபோன்று பெருங்கல்லறைகளில் உள்ள கற்களிலும் பல மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. அதனால் இந்த பாறை ஓவியங்களை மேலோட்டமாக ஆய்வு செய்தால் கடைசியாக வரையப்பட்ட காலமும், அடுத்தடுத்த அடுக்குகளை ஆராய்ந்தால் முந்தைய காலங்களும் தெரியவரும்'' என்றார்.

பாறை ஓவியங்களின் காலக்கணக்கீடு
ஆனால் இந்த தொல்லியல் சான்றுகள் குறித்த காலக்கணக்கீடு பற்றி உறுதியான தகவல் எதையும் இந்த நூல் குறிப்பிடவில்லை. பொதுவாக தொல்லியலில் உறுதியான காலக்கணக்கீடு (Absolute Dating) ஒப்பீட்டுக் காலக்கணக்கீடு (Relative Dating) என்று இரு வகைகளில் காலம் கணிக்கப்படுகிறது. ஐரோப்பாவிலுள்ள பாறை ஓவியங்கள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் என்று காலம் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் மூத்த தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயுலு.
சமீபத்தில் இந்தோனீசியாவின் சுளவேசி தீவில் கண்டறியப்பட்ட பாறை ஓவியம், 67,800 ஆண்டுகள் பழமையானது என்று ஆஸ்திரேலியாவில் காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் குமரவேல் இராமசாமி, நீலமலையிலுள்ள பாறை ஓவியங்கள் தொடர்பான காலக்கணிப்பு குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.
இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய சுதாகர் நல்லியப்பன், ''சமவெளியில் ஆழமாகத் தோண்டத்தோண்ட பின்னோக்கிய காலத்தின் சான்றுகள் கிடைப்பதுபோல, இங்குள்ள பாறை ஓவியங்களின் அடுக்குகளை நவீன தொழில்நுட்பரீதியாக ஆய்வு செய்தால், இரும்புக்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் என பின்னோக்கிய காலத்தைக் கணக்கிடலாம்'' என்கிறார்.
பாறை ஓவியங்களின் காலத்தைக் கணிப்பதில் சிக்கல் உள்ளதாக பிபிசியிடம் தெரிவித்த தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ர.பூங்குன்றன், 'வகாங்கர் தமிழகத்திலுள்ள பாறை ஓவியங்களின் காலம் பொ.ஆ.மு.500 என்று கணிக்கிறார்' என்றார். ஆனால் வகாங்கர் இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை என்பதால் இந்த ஓவியங்களின் காலக்கணிப்பை இன்னும் துல்லியமாகப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
கரிக்கையூர் எருமை ஓவியம், வேட்டைக்காட்சி, பூசல், இனக்குழு நடனம், கலவி, வளமைச்சடங்குகள், பொருள் சேகரிப்பு, கால்நடை மந்தைகள், வழிபாடு, விழா என நீலமலையின் பாறை ஓவியங்கள் அனைத்தும் எளிதில் அறியும் படிமங்களாகவுள்ளன என்று கூறும் பூங்குன்றன், நீலகிரி அகழாய்வில் கிடைத்த வெண்கலத்தட்டு, நீலமலை மக்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெளியுலகத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பதையும், நீலமலைக்கும் சிந்துவெளி மக்களுக்கும் உள்ள தொடர்பையும் காண்பிக்கிறது என்றார்.
மனிதர்கள், இயற்கைச் சீற்றம், விலங்குகள், பாசி, காட்டுத்தீ, மழை, நிலச்சரிவு, பாறை வலுவிழத்தல் என பாறை ஓவியங்கள் எந்தெந்த வழிகளில் பாதிப்புக்குள்ளாகின்றன என்பதையும் இவர்கள் பட்டியலிட்டுள்ளனர். இதில் நீரினால் ஏற்பட்ட பாதிப்புகளே முதன்மையாகவுள்ளன. வனத்துறை மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன்தான் இந்த ஆய்வை மேற்கொள்ள முடிந்தது என்று கூறும் நூலாசிரியர்கள், ஆய்வு மாணவர்களுக்கு இந்த தரவுகள், ஓவியங்களைக் கொடுக்கவும் தயாராகவுள்ளனர்.
எருமையூர் மைசூராக மாறிய தகவல், வற்றாத சுனை, எக்ஸ்ரே வகை ஓவியங்கள், இன்றும் பழங்குடிகள் பயன்படுத்தும் இசைக்கருவிகள் என தொல்லியல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி, வரலாறு, சூழலியல், ஓவியம், இசை, கலை ஆர்வலர்கள் என பல தரப்பினரையும் ஈர்க்க வைக்கின்ற அரிதான பல தகவல்களை நீலமலை தொல்லியல் தொகுத்து வழங்கியுள்ளது.
''இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்தைப் படிக்கும் போதும் நீலமலைக்குச் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் நம்முன் அதிகரிக்கிறது. முன்பு எத்தனை முறை சென்றிருந்தாலும் இந்த புத்தகத்தைப் படித்த பின்பு நீலமலைக்குச் செல்லும்போது நமக்குக் கிடைக்கும் அனுபவம் நிச்சயம் புதுவிதமாக இருக்கும்.''
இப்படி தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருக்கிறார் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












