ஐபிஎல்: பந்தில் எச்சில் தடவ தடை நீக்கப்பட்டதை பவுலர்கள் வரவேற்பது ஏன்?

ஐபில் 2025, கிரிக்கெட், பிசிசிஐ, ஐசிசி, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பந்துவீச்சாளர் முகமது சிராஜ் (ஐபிஎல் 17வது சீசன் போட்டியின் போது)
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பந்தை பளபளப்பாக்க பந்து வீச்சாளர்கள் உமிழ் நீரைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அவ்வாறு செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் காலத்தில் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரபல கிரிக்கெட் வலைத்தளமான கிரிக்இன்ஃபோ கூற்றுப்படி, வியாழக்கிழமை (மார்ச் 20) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனான சந்திப்பின் போது, ​​பெரும்பாலான ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் இந்த முடிவை ஆதரித்தனர்.

மே 2020இல், கோவிட் காலத்தில், மருத்துவ ஆலோசனையின் பேரில் பந்தை பளபளப்பாக்க உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், வீரர்கள் பந்தை பளபளப்பாக்க வியர்வையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இந்தத் தடையை செப்டம்பர் 2022இல் நிரந்தரமாக்கியது.

உமிழ்நீரை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்குவது ஏன்?

வீரர்கள் பந்தின் ஒரு பக்கத்தை பளபளப்பாக்க உமிழ்நீர் மற்றும் வியர்வையைப் பயன்படுத்துகிறார்கள். பந்து நன்றாக 'ஸ்விங்' (Swing) ஆக வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள்.

கோவிட் காலத்தில், தொற்று பரவாமல் இருக்க உமிழ்நீர் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது.

பந்தை உமிழ்நீர் மூலம் பளபளப்பாக்குவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, பந்தை ஸ்விங் செய்ய உதவுகிறது. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் பந்துவீச்சு முறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

இதன் மூலம், பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் கூட செய்ய முடியும். அதன் மூலம் பந்து எதிர்பார்த்த திசைக்கு, எதிர் திசையில் நகரும். ஆடுகளம் மிகவும் வறண்டதாக இருக்கும் சூழ்நிலைகளில் இது மிகவும் முக்கியமானது. பழைய பந்தில் உமிழ்நீர் பயன்படுத்துவது ரிவர்ஸ் ஸ்விங் செய்ய உதவுகிறது.

ஐபில் 2025, கிரிக்கெட், பிசிசிஐ, ஐசிசி, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உமிழ்நீர் தடவிய பந்தை நடுவர் மைக்கேல் கோஃப் சுத்தம் செய்கிறார், இந்தப் படம் 2020ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டியிலிருந்து எடுக்கப்பட்டது.

ஒருநாள் கிரிக்கெட் அல்லது டி-20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த முறை பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து நீண்ட நேரம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காரணத்திற்காக, பந்து வீச்சாளர்கள் பந்தின் ஒரு பக்கத்தை பளபளப்பாக்குவதன் மூலம் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார்கள்.

டி20 லீக்கில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை நீக்க பிசிசிஐ முடிவு செய்த பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை ஐசிசி நீக்குமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தற்போது, ​​ஐசிசி-யின் தலைமைப் பொறுப்பு ஜெய் ஷாவிடம் உள்ளது, அவர் நீண்ட காலமாக பிசிசிஐ-யின் செயலாளராக இருந்தவர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன?

ஐபில் 2025, கிரிக்கெட், பிசிசிஐ, ஐசிசி, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது ஷமியும் இந்தத் தடையை நீக்கக் கோரியிருந்தார்.

இந்த மாற்றம் இன்று (சனிக்கிழமை, மார்ச் 22) முதல் அமலுக்கு வரும். 18வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை எதிர்கொள்கிறது.

சுமார் இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்தத் தொடர், இந்தியாவின் 13 நகரங்களில் 74 போட்டிகளாக நடைபெறும்.

ஐபிஎல்-இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை நீக்கும் முடிவை வரவேற்றுள்ளார்.

"எங்களைப் போன்ற பந்து வீச்சாளர்களுக்கு இது மிகவும் நல்ல செய்தி. ​​உமிழ்நீரைப் பயன்படுத்துவது ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது" என்று சிராஜ் பிடிஐ செய்தி முகமையிடம் கூறினார்.

"பந்தை சட்டையில் தேய்ப்பது ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு உதவாது. ஆனால் உமிழ்நீரைப் பயன்படுத்துவது பந்தின் ஒரு பக்கத்தின் பளபளப்பைப் பராமரிக்க உதவும், அது மிகவும் முக்கியமானது" என்று அவர் கூறினார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சில நாட்களுக்கு முன்பு ஐசிசி-யிடம் பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை நீக்குமாறு முறையிட்டார்.

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு, "கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்விங்கை மீண்டும் கொண்டு வந்து ஆட்டத்தை சுவாரஸ்யமாக்க, உமிழ்நீர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம்" என்று ஷமி கூறியிருந்தார்.

ஷமியின் முறையீட்டை முன்னாள் பந்து வீச்சாளர்கள் ஃபிலாண்டர் மற்றும் டிம் சௌத்தி ஆகியோர் ஆதரித்தனர்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், தடை குறித்து தனக்கும் குழப்பம் இருந்ததாகக் கூறினார்.

அவர் தனது யூடியூப் சேனலில், "ஐசிசி சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது, அதில் பந்தில் உமிழ்நீர் பயன்படுத்துவது ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு உதவாது என்றும், அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறியிருந்தது. அவர்கள் இந்த ஆராய்ச்சியை எப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஒரு பிரச்னையாக இல்லாவிட்டால் பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

கிரிக்கெட் நிபுணர்களின் கருத்து என்ன?

ஐபில் 2025, கிரிக்கெட், பிசிசிஐ, ஐசிசி, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுகாதாரம் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நம்புகிறார்.

பந்தில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை நீக்குவது கிரிக்கெட் மட்டைக்கும் பந்துக்கும் இடையிலான சமமான போட்டிக்கு வழிவகுக்கும் என்று விளையாட்டு பத்திரிகையாளர் சாரதா உக்ரா கூறுகிறார்.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் இருப்பதால், டி20 லீக்குகளில் பந்து வீச்சாளர்களுக்கு எதிரான சூழல் அமைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.

2013ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில், இதுவே ஐபிஎல்லில் அதிகபட்ச ஸ்கோராகும். ஆனால் கடந்த ஆண்டு, அதாவது 2024ஆம் ஆண்டில், அணிகள் இதை விட நான்கு முறை அதிகமாக ஸ்கோர் செய்தன.

இதுவரை 17 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன, இந்தக் காலகட்டத்தில் அணிகள் 10 முறை 250 என்ற ஸ்கோரைக் கடந்துள்ளன.

இருப்பினும், உமிழ்நீர் பயன்பாடு மீதான தடையை நீக்குவது பந்துவீச்சில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று சாரதா உக்ரா கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், "எச்சிலைப் பயன்படுத்துவதால் மட்டும் பந்து ஸ்விங் ஆகாது. இதற்கு, சூழ்நிலையும் சிறந்ததாக இருக்க வேண்டும், திறமையான பந்து வீச்சாளரும் முக்கியம்" என்றார்.

இந்த மாற்றம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில செய்தித்தாளிடம் பேசிய வெங்கடேஷ் பிரசாத், "சுத்தத்தைப் பேணுவதற்காகவே உமிழ்நீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஒரு புதிய வைரஸ் எப்போது காற்றில் பரவும் என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே தடையை நீக்குவது குறித்து எந்த முடிவையும் எடுக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு