You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்ச்சைகள், அழுத்தத்தை தாண்டி இந்தியாவின் வெற்றியில் ஜெமிமா முக்கிய பங்காற்றியது எப்படி?
- எழுதியவர், ஜான்வி மூலே
- பதவி, பிபிசி செய்தியாளர்
"கிரிக்கெட்டா அல்லது ஹாக்கியா?" 11 வயது சிறுமி ஜெமிமா ரோட்ரிக்ஸிடம் அவரது தந்தை இந்தக் கேள்வியைக் கேட்டபோது, இரண்டையும் நேசித்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
இறுதியில் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த ஜெமிமா, பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவை மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
ஜெமிமாவின் சதம் இந்தியாவை ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது. நிச்சயமாக, இந்தப் பயணம் எளிதானதாக இருக்கவில்லை.
மும்பையின் நெரிசலான உள்ளூர் ரயில்களில் முட்டி மோதி பயணித்தது முதல், அணியில் இருந்து நீக்கப்பட்ட மன வேதனையைச் சமாளித்தது வரை ஜெமிமாவின் வெற்றிப் பாதையில் எண்ணற்ற முட்கள் தடைகளாக இருந்தன.
2022-இல் இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாத அதே ஜெமிமா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார்.
இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த கடுமையான மனப் போராட்டத்தை அவர் போட்டிக்குப் பிறகு வெளிப்படுத்தினார்.
"நான் தினமும் அழுதேன், பதற்றமடைந்தேன், போராடினேன், அது மிகப்பெரிய சவாலாக இருந்தது," என்று அவர் மனம் திறந்து பேசினார்.
ஜெமிமாவுக்கு போராட்டம் ஒன்றும் புதிதல்ல. தனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் மற்றும் திறமையால் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளார்.
பார்பி பொம்மையா கிரிக்கெட் மட்டையா?
'ஜெமி' என்று அன்பாக அழைக்கப்படும் ஜெமிமாவுக்கு மூன்று வயது இருக்கும்போது, அவருடைய தாத்தா பிளாஸ்டிக் கிரிக்கெட் மட்டை ஒன்றை பரிசளித்தார்.
"எனக்கு பார்பி பொம்மைகள் பிடிக்காது என்பது என் தாத்தாவுக்குத் தெரியும். எனவே அவர் பொம்மைக்கு பதிலாக கிரிக்கெட் பேட் வாங்கிக் கொடுத்தார். நாங்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடினோம். மட்டையைப் பிடிக்கும்போது உண்மையான மகிழ்ச்சி ஏற்படுவதை உணர்ந்தேன்" என்று நேர்காணலில் அவர் நினைவு கூர்ந்திருந்தார்.
தனது சகோதரர்களான ஏனோக் மற்றும் எலியுடன் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடினார்.
ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிக்ஸ்தான் அவருடைய முதல் பயிற்சியாளராக இருந்தார்.
பின்னர், பாந்த்ராவில் உள்ள MIG அகாடமியில் பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டியிடம் ஜெமிமாவின் சகோதரர் எலி கிரிக்கெட் பயிற்சியில் சேர்ந்தார்.
ஜெமிமாவின் தந்தை இவான் மற்றும் ஜெமிமாவின் தாய் லவிதா, தங்கள் மகள் விளையாடுவதைப் பார்க்குமாறு பிரசாந்த் ஷெட்டியிடம் கேட்டுக்கொண்டார்.
அப்போது ஜெமிமாவுக்கு வெறும் 9 வயதுதான், கிரிக்கெட் விளையாட ஆசை இருந்தாலும், அந்த நேரத்தில் அது மிகவும் அசாதாரணமான காட்சியாகவே இருந்தது.
"2007-08 ஆம் ஆண்டில், மிகக் குறைவான பெண்களே கிரிக்கெட் விளையாடினார்கள். MIG கிளப்பில் எந்தவொரு பெண்ணும் கிரிக்கெட் விளையாடி பார்த்ததில்லை," என்று அந்த நாளை ஷெட்டி நினைவு கூர்ந்தார்.
ஆனாலும், பிரசாந்த் ஷெட்டி ஒப்புக்கொண்டார். அடுத்த நாளில், ஜெமிமா பயிற்சிக்காக மைதானத்துக்கு சென்றார். ஜெமிமாவின் முதல் ஷாட், ஒரு கவர் டிரைவ். இந்தப் பெண்ணிடம் ஏதோ இருப்பதை பிரசாந்த் ஷெட்டி உணர்ந்தார்.
MIG இல் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்ட முதல் பெண் என்பதால், அவர் சிறுவர்களுடன் விளையாட வேண்டியிருந்தது.
பெண்ணை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக்கூடாது என்று சில உறவினர்கள் கூறினாலும், இவானும் லவிதாவும் ஜெமிமா கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக நின்றனர்.
ரோட்ரிக்ஸ் குடும்பம் அப்போது மும்பை நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டப்பில் வசித்து வந்தது. பாந்த்ரா மேற்குப் பகுதியில் உள்ளது. பயிற்சிக்காக பாந்த்ராவுக்கு உள்ளூர் ரயிலில் செல்லும் மூன்று குழந்தைகளுக்கும் உணவு தயார் செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார் ஜெமிமாவின் தாய் லவிதா.
மும்பையின் நெரிசல் மிகுந்த ரயில்களில் கனமான கிரிக்கெட் கிட்-ஐ எடுத்துச் செல்வது எவ்வளவு சிரமமானது என்பதை அனைவராலும் புரிந்துக் கொள்ள முடியும்.
ஆனால் அதுவே மும்பை கிரிக்கெட் வீரர்களிடையே மன உறுதியை உருவாக்கியது. ஜெமிமாவும் விதிவிலக்கல்ல. இறுதியில், குடும்பம் பாந்த்ராவுக்கு அருகில் செல்ல முடிவு செய்தது.
ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து - அல்லது கிரிக்கெட்?
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மட்டுமல்ல ஜெமிமா கால்பந்து மற்றும் கூடைப்பந்தாட்டத்திலும் தனது பள்ளியின் சார்பில் கலந்துக் கொள்வார்.
12 வயதில், மகாராஷ்டிராவுக்காக தேசிய அளவில் ஹாக்கி மற்றும் மண்டல அளவிலான போட்டியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
அவரது விளையாட்டுத் திறமையைக் கண்ட இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஜோவாகிம் கார்வால்ஹோ, "உங்கள் மகள் ஒலிம்பிக்கிலும் கூட இந்தியாவுக்காக விளையாடலாம்" என்று ஜெமிமாவின் தந்தையிடம் கூறியிருந்தார்.
ஹாக்கி விளையாடி ஒலிம்பிக்கிற்கு செல்வதா அல்லது கிரிக்கெட்டில் தொடர்வதா என்ற முடிவு எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், பதினொரு வயது ஜெமிமா கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தார்.
2012-13 சீசனில், தனது 13 வயதில் மும்பையின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார்.
'குழந்தை' வளர்ந்தபோது...
சிறுமியாக இருந்தபோதே ஜெமிமா மும்பை கிரிக்கெட் உலகில் பிரபலமானார். விரைவில், நாடு முழுவதும் ஜெமிமாவை கவனித்தது.
2017-ஆம் ஆண்டு, செளராஷ்டிராவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டியில் ஜெமிம்மா ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு இதுபோன்ற சாதனையைப் படைத்த இரண்டாவது வீராங்கனை இவர்தான். அந்த இன்னிங்ஸ் ஜெமிமாவை பிரபலமாக்கியது.
பின்னர், சேலஞ்சர் டிராபியில் அவர் பெற்ற வெற்றி மற்றும் இந்தியா ஏ அணிக்காக அவர் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் பலனாக, 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு ஜெமிமாவுக்குக் கிடைத்தது.
அதே ஆண்டு, டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான அவர், தனது அறிமுகத்தை அரை சதத்துடன் தொடங்கினார். மற்றவர்களைவிட வயதில் இளையவர் என்பதால் ஆரம்ப நாட்களில் அவரது அணி வீரர்கள் ஜெமிமாவை குழந்தையைப் போலவே நடத்தினார்கள்.
சில சமயங்களில், வயது வித்தியாசம் அவரை தனிமைப்படுத்தியது. சில நேரங்களில் ஜெமிமா தனிமையாக உணர்ந்தார்.
அப்போதுதான் ஸ்மிருதி மந்தனாவுடன் நட்பு கொண்டார். ஆரம்ப நாட்களில், இருவரும் அறை தோழிகளாக இருந்தனர், இப்போது அவர்கள் சகோதரிகளைப் போல இருக்கிறார்கள்.
இன்று, ஜெமிமா ஒரு நட்சத்திர வீராங்கனை மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர், கிட்டார் திறமை மற்றும் துடிப்பான ஆளுமைக்காகவும் அறியப்படுகிறார்.
உலக டி-20 போட்டிகளில் பெற்ற வெற்றி அவரை இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் பிரபலமானவராக்கியது. இன்று, ஜெமிமா இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னணி பிராண்ட் தூதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இருப்பினும், இந்திய அணியில் ஜெமிமாவின் வாழ்க்கை தொடர்ந்து ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருந்தது.
2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜெமிமா இடம் பெறவில்லை. ஆனால் விரைவில், அவர் ஒரு வலுவான மறுபிரவேசத்தை ஏற்படுத்தினார்.
2022 ஆகஸ்ட் மாதத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், 2023-இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியிலும் ஜெமிமா இருந்தார்.
2023-ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். 2023 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார்.
அணியில் மறுபிரவேசம்
இந்த 2025 உலக கோப்பையின் தொடக்கம் அவருக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியிலும், பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
ஆனால் 'மீண்டும் ராணி' போல, அவர் ஒரு பிரமாண்டமான மறுபிரவேசத்தை மேற்கொண்டார். முதலில், நியூசிலாந்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர், 2025 அக்டோபர் 30 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்து, வரலாற்று வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டியில் இடம் பிடித்தார்.
"இந்த இன்னிங்ஸ் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மட்டும் சிறப்பு வாய்ந்தது அல்ல. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று உள்ளது. உண்மையில் துன்பங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் அவர் ஒரு உண்மையான உத்வேகம்" என்று பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டி பாராட்டுகிறார்.
உலகக் கோப்பை சாதனை இன்னிங்ஸ்
தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் விளையாடிய ஜெமிமா, 134 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்தார், 14 பவுண்டரிகள் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது மூன்றாவது சதம் ஆகும்.
அவரது இன்னிங்ஸ், 339 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை அடைய இந்தியாவுக்கு உதவியது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான சேஸிங்கில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
ஜெமிமா பொதுவாக மிடில் ஆர்டரில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார், இந்த போட்டியில் அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார்.
விளையாடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது என்கிறார் அவர்.
திடீர் மாற்றம் இருந்தபோதிலும், அவரும் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் 167 ரன்கள் கூட்டணி அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.
பெரும்பாலான வீரர்கள் சதம் அடிக்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பேட்டை வானை நோக்கி உயர்த்தி கொண்டாடுவார்கள். உலகக் கோப்பையில் சதம் அடிப்பது என்பது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த போதிலும், ஜெமிமா அந்த தருணத்தைக் கொண்டாடவில்லை.
வெற்றிக்காகக் காத்திருந்த அவர், வெற்றி நிச்சயம் என்று தெரிந்தபோதுதான் உணர்ச்சிகளுக்கு அடிபணிந்தார்.
மன அழுத்தத்தை சமாளித்தல்
2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மும்பையின் கார் ஜிம்கானாவில் அவரது தந்தை இவான் ரோட்ரிக்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்று விவாதத்தைத் தூண்டிய பிறகு, அவர் சர்ச்சைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இருந்தபோதிலும் ஜெமிமா தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். உலகக் கோப்பையின் சில போட்டிகளில் ரன்கள் எடுக்காதபோதும், தனது பீல்டிங் மூலம் கவனத்தை ஈர்த்தார்.
"இந்த தொடரின்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அழுதேன். மனதளவில் அழுத்தமாக இருந்தது, பதற்றமாக இருந்தது. என்ன நடந்தாலும் சரி, என் வேலையை தொடர்ந்து செய்வேன், மற்றதை கடவுள் பார்த்துக்கொள்வார் என நினைத்தேன்" என்று ஜெமிமா கூறினார்.
உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும், ஜெமிமா அமைதியாக இருக்க முயன்றார், ஏனென்றால் தன்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவரால் இன்னும் நிறைய செய்ய முடியும் என ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் நிபுணர்களும் நம்புகிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு