கூட்டணி ஆட்சி என்ற கூற்றை மறுக்கும் அதிமுக - பாஜக உடனான உடன்படிக்கை என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

2026ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி.

'ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைப்போம்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி கே. பழனிசாமியின் கருத்து விவாதங்களை எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமையுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, அதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் அவர்.

கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அந்த செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க. கூட்டணியை உறுதிசெய்து பேசிய அமித் ஷாவிடம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையுமா எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதிலளித்த அவர், "ஆம், நாங்கள் ஒன்றாக இணைந்து ஆட்சியமைப்போம்" என்று குறிப்பிட்டார். அதனை மொழிபெயர்த்தவரும், "நாங்கள் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம். கூட்டணி ஆட்சிதான் நடைபெறப் போகிறது" என்று அமித் ஷாவின் பதிலை மொழிபெயர்த்தார்.

இதற்குப் பிறகு, தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராவார்களா எனக் கேட்டபோது, "வெற்றிபெற்றவுடன் அதற்கான பதிலைச் சொல்கிறோம்" என்று குறிப்பிட்டார் அமித் ஷா. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவான பரபரப்பையும் தாண்டி, அமித் ஷாவின் கருத்து கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க. வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை மறுத்திருக்கிறார் எடப்பாடி கே. பழனிசாமி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று, செந்தில் பாலாஜி, கே.என். நேரு, பொன்முடி ஆகிய மூன்று அமைச்சர்கள் மீது தாங்கள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த சட்டமன்றத் தலைவர் அப்பாவு, "நீங்கள் கொடுத்த தீர்மானம் பரிசீலனையில் உள்ளது. இன்று மற்ற அலுவல்கள் இருப்பதால், அதை விவாதத்துக்கு எடுக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

அவரது பதிலை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர், பிறகு எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களையும் சந்தித்தனர்.

"அமித் ஷா அப்படிச் சொல்லவேயில்லை": எடப்பாடி கே. பழனிசாமி

அப்போது அவரிடம், கூட்டணி ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அமித் ஷா கூட்டணி அரசு எனச் சொன்னதாகச் சொல்லப்படுவதை அவர் உடனடியாக மறுத்தார். "கூட்டணி அரசு எனச் சொல்லவேயில்லை. நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு ஏதேதோ வித்தையெல்லாம் காட்டுகிறீர்கள். தயவுசெய்து இந்த வித்தையெல்லாம் விட்டுவிடுங்கள். அதாவது 'அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி' ஆட்சி அமைக்கும். ஏதாவது விறுவிறுப்பான செய்தி உங்களுக்கு வேண்டும். அதை என்னிடமிருந்து பிடுங்கப் பார்க்கிறீர்கள்" என்று பதிலளித்தார்.

மீண்டும், கூட்டணி ஆட்சி குறித்து அமித் ஷா குறிப்பிட்டாரே எனக் கேட்டபோது, "அவர் அப்படிச் சொல்லவேயில்லை. 'தில்லிக்கு பிரதமர் மோதி, தமிழ்நாட்டுக்கு' என்று கூறி எனது பெயரைச் சொன்னார். இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதுதான். இதிலிருந்து ஏதேதோ விஞ்ஞான மூளையெல்லாம் பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள்" என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.

ஆரம்பத்தில் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு, அமித் ஷா தனது எக்ஸ் வலைதளக் கணக்கிலிருந்து ஒரு பதிவை வெளியிட்டார். அதிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன். இதற்குப் பிறகு கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும்கூட, அமித் ஷா செய்தியாளர்களிடம் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று குறிப்பிட்டதாக அவர் கூறுகிறார்.

"கூட்டணி அரசு என அமித் ஷா கூறவில்லையென எடப்பாடி கே. பழனிசாமி பொய் சொல்கிறார். அப்படி அவர் சொல்லவேயில்லை என்று இப்போது எடப்பாடி மறுக்கிறார். கூட்டணி ஆட்சி என்றவுடன் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால், இப்போது பின்வாங்கிவிட்டு பத்திரிகையாளர்களைக் குற்றம் சொல்கிறார்" என்கிறார் அய்யநாதன்.

ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.கவுக்கு இந்தக் கூட்டணியில் விருப்பமில்லை எனக் குறிப்பிடும் அய்யநாதன், அழுத்தங்களால்தான் இந்தக் கூட்டணி உருவானது என்கிறார்.

பல நாட்களுக்குப் பிறகு அ.தி.மு.க. மறுப்பது ஏன்?

அமித் ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடந்து பல நாட்களுக்குப் பிறகு, இந்தக் கேள்வி இந்தத் தருணத்தில் எழுப்பப்படுவது ஏன் என கேள்வியெழுப்புகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

"கூட்டணி குறித்து அமித் ஷா அளித்த பதிலே தெளிவில்லாமல்தான் இருந்தது. ஆனால், அமித் ஷாவின் பேச்சை மொழிபெயர்த்தவர் கூட்டணி ஆட்சி என்றே சொல்லிவிட்டார். இதற்கு அடுத்த நாள் வந்த சில தமிழ் நாளிதழ்களில் 'கூட்டணி ஆட்சி' என்றுதான் தலைப்புச் செய்திகள் வெளியாகின. அந்தத் தருணத்தில்கூட எடப்பாடி கே. பழனிசாமி மறுத்திருக்கலாம். இதற்குப் பிறகு, நான்கு நாட்கள் கழித்து கூட்டணி அரசு இல்லை என எடப்பாடி மறுக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும்" என்கிறார் குபேந்திரன்.

சில நாட்களுக்கு முன்பாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தியும் துக்ளக் இதழின் ஆசிரியருமான எஸ். குருமூர்த்தியிடம், கூட்டணி ஆட்சியை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளுமா எனக் கேள்வியெழுப்பப்பட்டபோது, "கூட்டணி என்பது நாடு முழுக்க வந்திருக்கக்கூடிய விஷயம். பா.ஜ.கவும் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. காங்கிரசும் அமைத்திருக்கிறது" என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேட்டிக்குப் பிறகுதான், பா.ஜ.க. இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்கிறது என்பது அ.தி.மு.கவுக்குப் புரிந்திருக்க வேண்டும் என்கிறார் குபேந்திரன்.

புதன்கிழமையன்று பகலிலிருந்து இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வியெழுப்பியபோதும் அவர் மழுப்பலாகவே பதிலளித்தார்.

"கூட்டணி குறித்து பேசியது அகில இந்திய தலைமைதான். இது குறித்து அகில இந்திய தலைமைதான் பேசுவார்கள். அமித் ஷாவும் எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்" என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

எடப்பாடியின் கருத்து குறித்து, மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் கேட்டபோது, "எந்த நேரமும் ஊடகங்கள் பரபரப்பைத் தேடாதீர்கள். காத்திருந்து பாருங்கள்" என்றார்.

ஆனால், கூட்டணி ஆட்சி என்பதை எடப்பாடி கே. பழனிசாமி முழுமையாக மறுத்துவிட்டாரே எனக் கேட்டபோது, "முதலில் கூட்டணி கிடையாது என்றுகூடத்தான் சொன்னார். இப்போது அவர் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததும் தி.மு.க. அவரைக் கடுமையாக விமர்சிக்கிறது. சரணடைந்துவிட்டார் என ஊடகங்களை வைத்து பேச வைக்கிறது. ஆகவே அவர், 'டிஃபன்சிவாக' பேச வேண்டியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்கிறார் சேகர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு