You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏன்?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க போட்டியிட உள்ளதாக, கடந்த 11 ஆம் தேதியன்று சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் தேர்தல் முடிவில் அ.தி.மு.க-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் எனவும் அமித் ஷா கூறியிருந்தார்.
இதனை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின், 'அந்த அணிக்கு தொடர் தோல்வியைக் கொடுத்தவர்கள், தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் அமித் ஷா உருவாக்கியிருக்கிறார்' எனக் கூறியிருந்தார்.
'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் மாநில உரிமைகள், மொழி உரிமைகள், நீட் விலக்கு, தொகுதி மறுசீரமைப்பு போன்றவை இடம்பெறுமா?' எனவும் அவர் கேட்டிருந்தார்.
இதற்குப் பதில் அளித்துள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா அறிவித்த குறைந்தபட்ச செயல் திட்டம் என்னவாக இருக்கும் என இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைத்த ஸ்டாலின், தனது வரலாற்றுப் பிழைகளைத் தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க ஒருபோதும் தமிழ்நாட்டையும் மாநில உரிமைகளையும் விட்டுக் கொடுக்காது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி விவகாரத்தை முன்வைத்து தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக, அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஜென்ராமிடம் பிபிசி தமிழ் சில கேள்விகளை முன்வைத்தது.
கேள்வி: சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே தமிழ்நாட்டில் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய அவசியம் பா.ஜ.க-வுக்கு ஏன் வந்தது?
சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும்' எனக் கூறியிருந்தார். ஆனால், கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டிருப்பதாக பார்க்கிறேன்.
கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க-வுக்கு வேறு தேர்வுகள் (Option) இருந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் எடப்பாடியை தங்கள் பக்கம் பா.ஜ.க கொண்டு வந்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழிகள் இல்லை. அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமியைச் சுற்றியுள்ளவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் சோதனையை நடத்தின.
அதனால், 'அதிகாரத்தைச் சார்ந்து இருப்பதே நல்லது' என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். அதனால் இந்தக் கூட்டணி சாத்தியமாகியுள்ளது. இதில் இன்னொரு கோணமும் உள்ளது.
2023 ஆம் ஆண்டு பா.ஜ.க கூட்டணியை விட்டு அ.தி.மு.க வெளியில் வந்தததே நாடகமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். கூட்டணியில் இல்லாத காலகட்டத்திலும் பா.ஜ.க அரசுக்கு எதிரான தீவிர கண்டனத்தை அவர் முன்வைத்ததில்லை. பா.ஜ.க-வுடன் அவர் எப்போதும் நெருக்கத்தைக் கடைபிடித்து வந்திருக்கிறார்.
கேள்வி: சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு மசோதாவை அ.தி.மு.க ஆதரித்தது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை அ.தி.மு.க எதிர்த்தது. 'பா.ஜ.க கூட்டணியில் இருந்தாலும் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டதில்லை' என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகிறார்களே?
அ.தி.மு.க-வே ஆதரிக்க மறுக்கும் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றுவதாக இதைப் பார்க்கலாம். தேர்தல்களில் வெற்றி பெற்று வருவதால் அவர்களால் இதைச் செய்ய முடிகிறது. அதற்குத் துணை நிற்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை எடப்பாடி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் பா.ஜ.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. ஆனாலும் பா.ஜ.க-வை சார்ந்தவர்கள் அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்குடனும் அதிகாரத்துடன் இருந்தார்கள்.
இதன் காரணமாக, 2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் தோல்வியைக் கொடுத்தார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியை தோற்கடிக்க முடியாது என்ற உணர்வு வந்ததால் மீண்டும் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளனர்.
கேள்வி: தி.மு.க ஆட்சியை தோற்கடிக்க முடியாது எனக் கூறுகிறீர்கள். மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மறுபுறம் அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சரே மகளிரை அவதூறாக விமர்சிக்கிறார். இதுபோன்ற பேச்சுகள் தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?
அனைத்து நிர்வாகங்களிலும் தனிமனிதர்களின் தவறுகள் இருக்கவே செய்யும். அனைத்து இடங்களிலும் நூறு சதவீத தூய்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது. தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, இல்லையா என்று தான் பார்க்க வேண்டும்.
அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் வெளியான சர்ச்சையின் காரணமாக, துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடியை நீக்கியுள்ளனர்.
ஆட்சி தொடர்பான விஷயங்களில் அவப்பெயர், களங்கம் போன்றவை மொத்தமாக தமிழ்நாட்டை பாதிக்கும் அளவுக்கு இருக்காது. நடவடிக்கை எடுப்பதால் முதலமைச்சர் இதை அனுமதிக்கவில்லை என்று தான் மக்கள் நினைப்பார்கள்.
கேள்வி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், மகளிர் பாதுகாப்பின்மை போன்றவை பேசுபொருளாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். இதை பிரசாரமாக கொண்டு செல்லும்போது தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?
குற்றச் செயல்களின் பின்னணியில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று தான் பார்க்க வேண்டும். தனி நபர்களின் குற்றங்களை தனி நபர் குற்றங்களாக பார்ப்பார்கள். பா.ஜ.க-வுக்கு பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடிய நிகழ்வுகள் என்று எதுவும் இல்லை.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு நிகழ்வுகளைவிட தமிழ்நாட்டில் பெரிதாக பாதிப்புகள் இல்லை. விளிம்புநிலை மக்கள் சார்ந்த திட்டங்களை அரசு கொண்டு போய் சேர்த்துள்ளது. எனவே, அரசுக்கு ஆதரவான மனநிலை உள்ளது.
அரசுக்கு ஆதரவான மனநிலை உள்ளதாகக் கூறுகிறீர்கள். கடந்த 4 ஆண்டுகளில் டாஸ்மாக், மணல், ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றில் தி.மு.க அரசு ஊழல் செய்துள்ளதாக அமித் ஷா பட்டியலிட்டார். இந்த ஊழல் குற்றச்சாட்டுகள், மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாதா?
அரசுக்கு எதிராக மாற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போதே ஊழல் குற்றச்சாட்டுக்கு சிறைக்குச் சென்ற முதலமைச்சரைக் கொண்ட கட்சியாக அ.தி.மு.க உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க நன்கொடை பெற்றது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விசாரணை அமைப்புகளை மத்திய அரசு எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்பதையும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் மக்கள் சீர்தூக்கிப் பார்ப்பார்கள். பா.ஜ.க, அ.தி.மு.க முன்வைக்கும் பிரசாரம் சரியானதா என்பதையும் அவர்கள் தீர்மானிப்பார்கள்.
கேள்வி: 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவில், கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறுகிறார். இந்த முழக்கம், தேர்தல் நெருக்கத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
கூட்டணிக்குள் வரக் கூடிய கட்சிகளுக்கு அது கூடுதல் ஊக்கத்தைக் கொடுக்கலாம். மற்றபடி அதற்கு எந்தவித ஆதரவும் இருக்காது. அது நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியங்கள் இல்லை.
அதை நம்பி தி.மு.க கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறுவதற்கும் வாய்ப்பில்லை. இதனை நிராகரித்துவிட்டு மேலும் சில கட்சிகள் தி.மு.க அணியில் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
கேள்வி: 'கூட்டணி ஆட்சி' என்ற முழக்கத்தை த.வெ.க தலைவர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் முன்வைக்கின்றனர். இது சிறிய கட்சிகள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தாதா?
எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. எலும்புத் துண்டைக் காட்டி தங்களைக் கூப்பிடுவதாக சிறிய கட்சிகள் விஜய்யை விமர்சித்தன. 'எடப்பாடி தலைமையில் கூட்டணி, ஆட்சியில் பங்கு' எனக் கூறுவது ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க கையாண்டது போல இங்கேயும் நடக்கும் என நினைக்கிறேன்.
பல மாநிலங்களில் பா.ஜ.க தனது கூட்டணிக் கட்சிகளை இவ்வாறு நடத்தியுள்ளது. பா.ஜ.க உடன் கூட்டணி சேர்ந்த பிறகு பல மாநிலக் கட்சிகள் தங்களின் செல்வாக்கை இழந்தன.
கேள்வி: தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ.க இரண்டாம் இடம் பிடித்தது. சுமார் 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. அ.தி.மு.க-வுக்கு 20 சதவீதத்துக்கும் மேல் வாக்குவங்கி உள்ளது. இந்தக் கணக்குகளை மையமாக வைத்து தானே கூட்டணி முடிவை பா.ஜ.க எடுத்திருக்கும்?
ஆட்சிக்கு வருவோம் என்ற சித்திரத்தை மக்களிடம் உருவாக்குவதற்கு பா.ஜ.க முயற்சி செய்கிறது. அதனால் அதிகாரத்தில் பங்கு என்பதை சேர்த்துக் கூறுகின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
1980 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுபோன்று கூட்டணி ஆட்சி முயற்சியை தி.மு.க. எடுத்தது. அது தோல்வியைக் கொடுத்தது. 2011 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க அதிக இடங்களை பிரித்துக் கொடுத்தது. ஆனால், வெற்றி பெறவில்லை. ஜெயலலிதாவை மக்கள் தேர்வு செய்தனர். அதேபோன்ற தீர்ப்பை இப்போதும் மக்கள் கொடுப்பார்கள்.
கேள்வி: தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலையின் திறன்களை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார். தேசிய அரசியலில் அவரது முக்கியத்துவம் எந்தளவுக்கு இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அவருக்கு என்ன மாதிரியான பணிகள் கொடுப்பப்பட உள்ளன எனப் பார்க்க வேண்டும். அவர் காவல்துறையில் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசியல் களம் தான் அவருக்கு அந்நியமாக இருந்தது. தேசிய அரசியலில் திறமையைக் காட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டு அரசியலில் அவர் முன்வைத்த கோரிக்கைகளை அமித் ஷா நிராகரித்துள்ளார். அதாவது, 'தனியாக போட்டியிட்டு இரண்டாவது இடம், அடுத்த மக்களவைத் தேர்தலில் முதல் இடம்' என அவர் கூறியதை தேசிய தலைமை ஏற்கவில்லை. அதற்கு நேர்மாறாக அ.தி.மு.க உடன் கூட்டணியை இப்போதே இறுதி செய்துவிட்டனர்.
கேள்வி: 'அ.தி.மு.க-வின் உள்விவகாரங்களில் பா.ஜ.க தலையிடாது' என அமித் ஷா கூறிவிட்டார். அப்படியானால், இந்தக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?
தி.மு.க-வை ஆட்சியைவிட்டு அகற்றுவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்போம் என தினகரன் கூறுகிறார். அப்படியானால், அ.ம.மு.க அந்த அணியில் தான் இருக்கும்.
பிகாரில் இதேபோன்ற நிலை வந்தது. ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க-வும் ஒரே கூட்டணியில் இருந்தன. இந்தக் கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியை பா.ஜ.க சேர்த்துக் கொண்டது.
இந்த மூன்றாவது கட்சி பா.ஜ.க-வுக்கு ஆதரவளிக்கும் ஆனால், நிதிஷ்குமாரின் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியது. இங்கு அதுபோன்ற சூழலை பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போன்றோர் உருவாக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு