சைபர் மோசடி: ஆளை கடத்தாமலேயே கடத்தியதாக நம்ப வைத்து பல லட்ச ரூபாயை இவர்கள் பறிப்பது எப்படி?

மெய்நிகர் கடத்தல் மோசடிகள்
    • எழுதியவர், இசாரியா பிரைதோங்யேம்
    • பதவி, பிபிசி

அமெரிக்காவில் உள்ள சீன மக்கள், குறிப்பாக மாணவர்கள் “மெய்நிகர் கடத்தல் மோசடிகள்” குறித்து விழிப்புடன் இருக்குமாறு வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சுவாங் கய் எனும் 17 வயதான மாணவர் காணாமல் போனதாக புகார் எழுந்த நிலையில், கடந்த டிச. 31 அன்று யூட்டா மாகாணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்துதான் சீன தூதரகம் இந்த அறிக்கையை வெளியிட்டது.

தங்கள் மகன் கடத்தப்பட்டது போன்ற புகைப்படமும் அவரை மீட்க பெருந்தொகை தர வேண்டும் என்றும் தங்களுக்கு செய்திகள் வந்ததாக பள்ளி நிர்வாகத்திடம் சுவாங் கய்-யின் பெற்றோர் தெரிவித்தனர்.

இத்தகைய இணையவழி கடத்தல் மோசடிகளுக்கு ஆளானோர், தாங்கள் கடத்தப்பட்டு விட்டதாக தோன்றும் வகையிலான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என, கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடத்தல்காரர்கள் நேரில் வராமல் அவர்களை ஃபேஸ்டைம், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் கண்காணிக்கின்றனர்.

இதற்கு இணங்கவில்லை என்றால், இந்த மோசடியில் சிக்கியவரோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ துன்புறுத்தப்படலாம் என இரு தரப்பிடமும் கூறப்படுகிறது.

உள்ளூர் போலீசாரின் கூற்றுப்படி சுவாங் கய்-யின் பெற்றோர் சீனாவில் உள்ள வங்கிக் கணக்குகளில் 80,000 டாலர்கள் செலுத்துமாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மட்டுமின்றி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இதேபோல சீன மாணவர்களை குறி வைத்து இந்திய மதிப்பில் பல லட்ச ரூபாயை அந்த மோசடி கும்பல்கள் பறித்துள்ளன.

மெய்நிகர் கடத்தல் மோசடி என்பது என்ன?

மெய்நிகர் கடத்தல் சம்பவங்கள்
படக்குறிப்பு, சுவாங் கய் மெய்நிகர் கடத்தல் மோசடியால் பாதிக்கப்பட்டார்.

அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ கூற்றுப்படி, சட்ட அமலாக்க முகமைகள் இத்தகைய மெய்நிகர் கடத்தல் மோசடிகள் குறித்து குறைந்தது 20 ஆண்டுகளாக அறிந்துள்ளனர்.

சைபர், டிஜிட்டல் அல்லது மெய்நிகர் கடத்தல் மோசடிகள் பல வடிவங்களில் நடக்கும். எந்த வடிவத்தில் இருந்தாலும் இதுவொரு மிரட்டிப் பணம் பறிக்கும் யுத்தியாகும். இதில், தங்களின் அன்புக்குரியவர்களை விடுவிக்க பெரும் பணத்தைத் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்களை தாக்கிவிடுவோம் அல்லது கொலை செய்துவிடுவோம் என கடத்தல்காரர்கள் மிரட்டுகின்றனர்.

’வழக்கமான’ கடத்தல் சம்பவங்களை போல் அல்லாமல், இந்த மெய்நிகர் கடத்தல்காரர்கள் யாரையும் உண்மையாக கடத்துவதில்லை என, எஃப்.பி.ஐ விவரிக்கிறது. மாறாக, தங்களின் திட்டம் தோல்வியடைவதற்கு முன்பாக, அத்தொகையை விரைவாக செலுத்துமாறு வற்புறுத்துதல் மற்றும் மிரட்டல்கள் மூலம் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

சீன மாணவர்கள் எங்கெல்லாம் குறி வைக்கப்படுகிறார்கள்?

காவல்துறை கூற்றுப்படி, பணக்கார மேற்கு நாடுகளில் படிக்கும் சீன மாணவர்கள் இத்தகைய சைபர் கடத்தல்காரர்களால் குறிவைக்கப்படுகின்றனர்.

பிரிட்டனில் உள்ள சௌத் யோக்‌ஷா மாகாண காவல்துறையின் மோசடிகள் தடுப்பு குழு, ஷெஃபீல்ட் நகருக்கு செல்லும் சர்வதேச மாணவர்கள் இத்தகைய மோசடிக்காரர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு செப்டம்பர் 2023-ல் எச்சரித்திருந்தது.

பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சீன மாணவர்கள் இத்தகைய மோசடிகளுக்கு குறி வைக்கப்படுவதாக அக்குழு தெரிவித்திருந்தது.

இதில், சீன தூதரகம், குடிவரவு துறை, சுங்கத்துறை, சீன காவல்துறை அல்லது ராயல் மெயில் எனப்படும் பிரிட்டன் தபால் துறையிலிருந்து பேசுவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போலி அழைப்புகள் வருகின்றன.

பின்னர் அவர்கள் சர்வதேச குற்றம் ஒன்றை விசாரிப்பதாக கூறி, சீனாவில் உள்ள வங்கிக் கணக்குக்கு பெரும் தொகையை பரிமாற்றம் செய்யுமாறு கூறுகின்றனர்.

இதில் குறி வைப்படுபவர்களை அவர்கள் அச்சுறுத்துவார்கள் என்றும் சௌத் யோக்‌ஷா காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அவர்கள் மிரட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மெய்நிகர் கடத்தல் மோசடிகள்
படக்குறிப்பு, பிரிட்டனில் உள்ள சீன மாணவர்கள் இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இத்தகைய ‘மெய்நிகர் கடத்தல் மோசடிகள்” மிகவும் அதிநவீனமாகி வருவதாக, நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை அக்டோபர் 2023-ல் எச்சரித்திருந்தது.

நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையின் உளவு கண்காணிப்பாளர் ஜோசப் தொய்ஹி, சீனாவில் தான் இத்தகைய மோசடிகள் ஆரம்பமானதாக கூறுகிறார்.

இந்த மோசடியில் சிக்குபவர்கள், சீன அதிகாரி போன்று நடித்து இன்னொருவரை ஏமாற்றவும் வற்புறுத்தப்படுகிறார்கள்.

”நாங்கள் இதுவரை பார்த்திராத வகையில், பாதிக்கப்பட்டவர்கள் மாநிலங்களுக்குள்ளேயும் வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் வகையில் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சிலர் தாய்லாந்து, கம்போடியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெவ்வேறு மாநிலங்களுக்கு இதற்காக பயணித்துள்ளனர்,” என உளவு கண்காணிப்பாளர் ஜோசப் தொய்ஹி ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்?

ஆஸ்திரேலியாவின் பொது ஒலிபரப்புச் சேவையான ஏபிசி, நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையை மேற்கோளிட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 முதல் 23 வயது கொண்ட மூன்று இளைஞர்களிடம் சீன அதிகாரிகள் என்று கூறி இத்தகைய மோசடிகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இச்சம்பவங்களில் அவர்கள் 3,38,880 டாலர்கள் செலுத்துமாறும் இல்லையென்றால் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் என மிரட்டப்பட்டுள்ளனர்.

ஒரு சம்பவத்தில், சிட்னியில் 20 வயது இளைஞர் கைவிலங்கிடப்பட்டு, அடிலெய்ட் மற்றும் விக்டோரியாவில் இதுபோன்று மோசடியில் சிக்கியவர்களுக்கு ஷாங்காய் காவல்துறை சார்பாக "அதிகாரபூர்வ ஆவணங்களை" வழங்குவதற்காக உள்நாட்டு விமானத்தில் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டார்.

அவருடைய குடும்பத்தாரிடம் 1,35,750 டாலர்களை செலுத்துமாறு மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அதனை மறுத்து நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையை அணுகினர்.

நடக்காத கடத்தலுக்குப் பணம் பறிப்பு

2020-ஆம் ஆண்டில் குறைந்தது 8 பேர் இத்தகைய ‘மெய்நிகர் கடத்தல்’ மோசடிகளுக்கு ஆளானதாக உறுதியானதைத் தொடர்ந்து, மொபைல் அழைப்புகள் மூலம் சீன மாணவர்கள் குறிவைக்கப்படுவதாக நியூ சௌத் காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சம்பவங்களில், நடக்காத கடத்தல் சம்பவங்களுகாக பலரும் மீட்புத்தொகையாக 13,55,538 டாலர்கள் செலுத்தியுள்ளனர்.

ஏப்ரல் 2020-ல், சிட்னி புறநகரில் மொபைல் அழைப்பின் மூலம் சீன காவல் அதிகாரி போன்று பேசி, சீன மாணவி ஒருவர் கடத்தப்பட்டதாக நம்ப வைக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினர் 2,03,300 டாலர்கள் செலுத்தியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு, அந்த மாணவி ஒருநாள் கழித்து பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்றார்.

மெய்நிகர் கடத்தல் மோசடிகள்
படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டில் இந்த மோசடியில் சிக்கியவர்கள், தாங்கள் கடத்தப்பட்டது போன்று எடுத்த புகைப்படம் ஆஸ்திரேலிய காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.

இதேபோன்ற மோசடிகளில் ஜப்பானில் உள்ள சீன மாணவர்கள் மிரட்டப்படுவதாக ஜப்பான் டைம்ஸ் ஆகஸ்ட் 2023-ல் செய்தி வெளியிட்டது.

அப்படி ஒரு சம்பவத்தில் சீன மாணவி ஒருவரின் பெற்றோர், தங்கள் மகள் தாக்கப்பட்டது போன்ற புகைப்படம் தங்களுக்கு வந்ததைத் தொடர்ந்து, சீன வங்கிக்கணக்குக்கு 42,300 டாலர்களை அனுப்பியுள்ளனர்.

பின்னர், சீன பாதுகாப்பு அதிகாரி என ஒருவரிடமிருந்து அம்மாணவிக்கு மிரட்டல் தொனியில் அழைப்பு வந்துள்ளது.

அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து தப்பிக்க போலியாக தான் கடத்தப்பட்டதாக அரங்கேற்றி, அதன்மூலம் அவர் பெற்றோர் மூலமாக பணம் பெற வேண்டும் எனவும் அம்மாணவி மிரட்டப்பட்டுள்ளார்.

தங்களுக்கு வரும் அழைப்புகளை சீன சர்வதேச மாணவர்கள் சோதிக்க வேண்டும் எனவும் உள்நாட்டு தூதரக மட்டத்தில் உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் தாங்கள் இதுபோன்று குறிவைக்கப்பட்டால் காவல் துறையிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)