7.2 ஓவரில் 113 ரன்: சாம்சன், ஹெட்மேயரின் பிரமிக்கத்தக்க ஆட்டம் வெற்றியைச் சாத்தியமாக்கியது எப்படி?

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL

ஐ.பி.எல். தொடரில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் ஒரு நம்ப முடியாத ஆட்டத்தால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ரிங்கு சிங் என்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சாம்சன், ஹெட்மேயர் ஆகியோர் அந்த அணிக்கு வில்லனாக உருவெடுத்தனர். அவர்கள் இருவரும் தங்களது அதிரடி வாண வேடிக்கைகளால், இனி அவ்வளவுதான் என்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து வைத்தனர்.

நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்ற முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. ஆட்டத்தின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் இறுதிக்கட்டத்தில் சாம்சன், ஹெட்மேயரை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அந்த அணி கோட்டைவிட்டது.

நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி எங்கே கோட்டைவிட்டது? அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கணக்குகள் தப்பாகிப் போனது எப்படி? தோல்வி நிச்சயம் என்ற நிலையில் இருந்த ராஜஸ்தான் ராயல்சை கேப்டன் சாம்சனும், வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த அதிரடி வீரர் ஹெட்மேயரும் சேர்ந்து தூக்கி நிறுத்தியது எப்படி?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் மந்தமான தொடக்கம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில்தான் பவர் பிளேவில் மிகக் குறைந்த அளவாக 42 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த நேரத்தில், விருத்திமான் சாஹா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஆகியோரின் விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்துவிட்டிருந்தது.

டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே விருத்திமான் சாஹா தூக்கி அடிக்க, பந்து எட்ஜாகி பிட்ச்சுக்கு நேரே மேலே பறந்தது. அந்த பந்தைப் பிடிக்க விக்கெட் கீப்பர் சாம்சன், ஸ்கொயர் லெக்கில் இருந்த ஹெட்மேயர், பாயிண்ட் திசையில் நின்றிருந்த துருவ் ஜூரெல் ஆகியோர் ஒரே நேரத்தில் விரைய, அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் பந்து சாம்சனின் கையில் விழுந்து மிஸ்சானது. ஆனால், அருகே நின்றிருந்த டிரெண்ட் போல்ட் சுதாரித்துக் கொண்டு துரிதமாக செயல்பட்டு பந்தை கேட்ச் செய்து சாஹாவை வெளியேற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL

ஹர்திக் அவுட்டானதும் கில் - மில்லர் ஜோடி காட்டிய அசாத்திய நிதானம்

பவர் பிளே ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் ரேட் டல்லடிக்க, சாய் சுதர்சன் ஆட்டமிழந்ததும் உள்ளே வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா வேகமாக ரன்களை குவிக்க எத்தனித்தார். ஆடம் ஜம்பா வீசிய ஏழாவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை அவர் பறக்க விட்டார். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சரும், 2 பவுண்டரிகளும் வந்தன. மூன்றே ஓவர்களில் 40 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணி குவித்தது.

ஹர்திக் களத்தில் நின்றிருந்த வரையிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்களை எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 11-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்த பிறகு சுப்மன் கில் - டேவிட் மில்லர் ஜோடி அசாத்திய பொறுமை காத்தது. மில்லர் களத்தில் செட்டிலாக சற்று நேரம் எடுத்துக் கொண்டார் என்றால், மறுமுனையில் நல்ல பார்மில் இருப்பதுடுன் தொடக்க வீரராக களமிறங்கி நன்றாக செட்டிலாகியும் விட்ட சுப்மன் கில்லும் பொறுமை காத்தது அந்த அணியின் ரன்ரேட்டை கடுமையாக பாதித்தது.

12 முதல் 16 வரையிலான 5 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி 31 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், அந்த அணியால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்க முடியாமல் போய்விட்டது. தமிழ்நாடு வீரர் விஜய் சங்கருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அபினவ் மனோகரும், டேவிட் மில்லரும் சேர்ந்து இறுதிக்கட்டத்தில் சற்று அதிரடி காட்டியதால்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL

ஷமி - ஹர்திக் அனல் பறக்கும் பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் திணறல்

சவாலான இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கம் மிக மோசமாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர், தனது ஐ.பி.எல். வரலாற்றில் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நேற்றைய ஆட்டத்தில் டக்அவுட் ஆனார். முகமது ஷமி பந்தை விக்கெட் கீப்பருக்குப் பின்னே அவர் ஸ்கூப் ஷாட் ஆட முயல, பந்து ஆப் ஸ்டம்பை பெயர்த்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்க ஓவர்களை வீசிய முகமது ஷமி, கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. தொடர்ந்து அந்த அணி சிறப்பாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்களை வேகமாக ரன்களை சேகரிக்க முடியாமல் திணறியது. 12 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL

ரஷித் கான் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் - ஆட்டத்தின் போக்கையே மாற்றிய சாம்சன்

12 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்திருந்த ரன்களைப் பார்க்கும் போது, "இனி அவ்வளவுதான், அந்த அணிக்கு தோல்வி நிச்சயம்" என்றே ரசிகர்கள் கருதினர். ஏனெனில் அந்த அணி வெற்றி பெற 8 ஓவர்களில் 112 ரன்கள் தேவைப்பட்டன. ஏற்கனவே 4 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

ஆனால், முன்னணி சுழற்பந்துவீச்சாளரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியவருமான ரஷித் கான் வீசிய அடுத்த ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் விஸ்வரூபம் எடுத்தார். அந்த ஓவரில் சாம்சன் ஹாட்ரிக் சிக்சர்களை விளாச, 20 ரன்கள் கிடைத்தன.

எட்ட வேண்டிய இலக்கு மிகப்பெரிதாக இருந்ததால் சஞ்சு சாம்சன் அதன் பிறகு நிதானம் காட்டவே இல்லை. கிடைத்த பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டிற்கு விரட்டியபடி இருந்தார். சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு தலைமை தாங்கும் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களை அவர் எடுத்தார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் நூர் அஹமத் வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய சஞ்சு சாம்சன் கடைசிப் பந்தை தூக்கி அடிக்க, அது லாங் ஆஃப் திசையில் நின்றிருந்த டேவிட் மில்லரிடம் கேட்சாகிப் போனது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இக்கட்டான நேரத்தில் கைகொடுத்து தூக்கி நிறுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 60 ரன்களை விளாசினார். இமாலய இலக்காக தெரிந்த வெற்றி இலக்கை எட்டக் கூடிய இலக்காக அவர் மாற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL

வெற்றிகரமான ஃபினிஷர் என்று மீண்டும் நிரூபித்த ஹெட்மேயர்

சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற அடுத்த 5 ஓவர்களில் 64 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த ஷிம்ரோன் ஹெட்மேயர் விஸ்வரூபம் எடுத்தார். சஞ்சு சாம்சன் விட்டுச் சென்ற பணியை தானே ஏற்றுக் கொண்ட அவர், பவுண்டரி, சிக்சர்fளாக விளாசி வாண வேடிக்கையைத் தொடங்கினார்.

25 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஹெட்மேயர் மொத்தம் 26 பந்துகளில் 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 56 ரன்களைக் குவித்து கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். முக்கியமான இறுதிக் கட்டத்தில் துருவ் ஜூரெல் 10 பந்துகளில் எடுத்த 18 ரன்னும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றே பந்துகளில் எடுத்த 10 ரன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு உதவின.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL

தவறாகி போன ஹர்திக் பாண்டியாவின் கணக்குகள்

நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 12 முதல் 16 ஓவர் வரை காட்டிய அசாத்திய நிதானம் அந்த அணியை வெகுவாகப் பாதித்து விட்டது. அந்த அணியின் ரன் ரேட்டை வெகுவாக கட்டுப்படுத்தியதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுக்கு முக்கிய பங்கு உண்டு. அஸ்வின், சாஹல், ஆடம் ஜம்பா என்று 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த திட்டம் நல்ல பலனைத் தந்தது.

ஆனால், மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணியோ சுழற்பந்துவீச்சில் ரஷித் கானை மட்டுமே நம்பியிருந்தது. 13-வது ஓவரில் ரஷித் கான் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி, அவரது நம்பிக்கையை சஞ்சு சாம்சன் சீர்குலைத்தார். பிரதான சுழற்பந்துவீச்சாளரின் ஓவர் அடி வாங்கியதால், வேறு வழியின்றி ஹர்திக் பாண்டியா, இம்பாக்ட் பிளேயராக 18 வயதே நிரம்பிய சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவை உள்ளே கொண்டு வந்தார். சாம்சன் விக்கெட்டை அவர் எடுத்துக் கொடுத்தாலும், போதிய அனுபவம் இல்லாத அவரால் இக்கட்டான நேரத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை சரிவர கையாள முடியவில்லை.

முதல் 8 ஓவருக்குள்ளாகவே தனது 4 ஓவர் கோட்டாவை கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசி முடித்து விட்டார். பிரதான வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கும் ஒரு ஓவர் மட்டுமே எஞ்சியிருந்தது. இதனால், 12 ஓவர்களுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சாம்சனும், ஹெட்மேயரும் விஸ்வரூபம் எடுத்த போது அதனை சமாளிக்க குஜராத் டைட்டன்ஸ் வசம் போதிய அஸ்திரங்கள் இல்லாமல் போய்விட்டது. ரஷித் கானை மலை போல் நம்பியிருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, அவரது ஓவரை சாம்சன் அடித்து நொறுக்கிய பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்ததை காண முடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அசாத்திய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL

வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 19-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை அவர் சாய்த்தாலும் ரன்களை அதிக அளவில் விட்டுக் கொடுத்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. வேறுவழியின்றி கடைசி ஓவரை அனுபவமே இல்லாத நூர் முகமதுவிடம் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒப்படைக்க, அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே சிக்சர் அடித்து ஹெட்மேயர் ஆட்டத்தை முடித்து வைத்துவிட்டார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி, அதன் சொந்த மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மீண்டும் ஒரு முறை வெற்றிபெறும் நிலையில் இருந்து தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: