You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெலங்கானா ஆளுநர் Vs முதல்வர் கேசிஆர்: "விதிமீறல், சட்ட மீறல்" - கொந்தளிக்கும் தமிழிசை செளந்தரராஜன்
தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கே. சந்திரசேகர ராவுக்கும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இடையிலான மோதலின் உச்சமாக தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அம்மாநிலத்தில் நடைபெற்ற குடியரசு தின தேசிய மூவர்ண கொடியேற்று நிகழ்வில் முதல்வர் பங்கேற்கவில்லை.
இந்த விவகாரத்தில் மரபுகளின்படி அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், குடியரசு தின நிகழ்வில் முதல்வர் பங்கேற்பது தொடர்பான தகவல் வியாழக்கிழமை காலை வரை ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை.
இதையடுத்து, ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநர் பதவியுடன் சேர்த்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியையும் சேர்த்து கவனித்து வருகிறார்.
அந்த மாநிலத்தில் குடியரசு தின நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு புதுச்சேரி வந்த அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தெலங்கானா நிகழ்வு தொடர்பாகவே கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளித்த தமிழிசை, "வரம்பு மீறல், சட்ட மீறல், அரசியலமைப்பு சட்ட மீறல் என எல்லா மீறலும் தெலங்கானாவில் செய்துள்ளனர். மத்திய அரசுக்கு இதுகுறித்து எனது தகவலை அனுப்பியுள்ளேன்," என்று கூறினார். "நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகாவது தெலங்கானா அரசு வழக்கமாக நடத்தும் அணிவகுப்பு மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்தியிருக்க வேண்டும். சமீபத்தில் ஐந்து லட்சம் பேரை திரட்டி கூட்டம் நடத்திய முதல்வர், கொரோனா பரவலை காரணம் காட்டி குடியரசு தின நிகழ்வை நடத்தாமல் தவிர்த்திருக்கிறார்” என்று தமிழிசை கூறினார்.
”இந்த நிகழ்வுக்கு வருகை தராத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என நான் யோசிக்கிறேன். இன்னொருவர் வாழ்க்கை பாதித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
முன்னதாக, தெலங்கானா முதல்வர் மற்றும் அனைத்து கேபினட் அமைச்சர்களுக்கு குடியரசு தின வரவேற்பு நிகழ்வைக் குறிக்கும் 'அட் ஹோம்' விழாவிற்கான அழைப்பை ஆளுநர் மாளிகை அனுப்பியிருந்தது. ஆனால் மறுமுனையில் இருந்து எந்த தொடர்போ பதிலோ வரவில்லை என்று அம்மாநில ராஜ்பவன் அதிகாரி தெரிவித்தார்.
இதே வேளை குடியரசு தின விழாவை முதல்வர் கே.சந்திரசேகர ராவ், இன்று பிரகதி பவனில் தனியாக நடத்தி தேசிய மூவர்ண கொடியை ஏற்றினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தாக்கம் இந்தியாவில் தீவிரம் அடைவதற்கு முன்பாக தெலங்கானாவில் பரேட் கிரவுண்ட் எனப்படும் மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த ஆண்டு கொரோனா பரவலின் தாக்கத்தைக் காரணமாகக் கூறி அணிவகுப்பு நிகழ்ச்சி அங்கு நடைபெறவில்லை. இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது, கொரோனாவை காரணமாகக் கூறி அணிவகுப்பு கொண்டாட்டங்கள் நடத்த வேண்டாம் என அரசு தரப்பு கூறியதாக தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றத்திலும் ரிட் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், நிகழ்ச்சி எங்கு நடத்தப்பட வேண்டும் என்ற தேர்வை அரசிடமே விட்டது. அதே சமயம், அணிவகுப்புடன் கூடிய குடியரசு தின நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்தப் பின்னணியில்தான் அரசு முடிவெடுத்தபடி குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்வரோ அவரது அமைச்சர்களோ கட்சி எம்எல்ஏக்களோ கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளனர்.
அரசின் இந்த நடவடிக்கையை தெலங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது.
அரசாங்கத்தின் முடிவு ஜனநாயகமற்றது மற்றும் அரசியலமைப்பின் மாண்புக்கு எதிரானது என்று மாநில பாஜக தலைவர் சஞ்சய் தெரிவித்தார்.
ஆளுநர் கொடியேற்றும் நிகழ்வை முதல்வர் புறக்கணிப்பது, அரசியலமைப்பின் சிற்பியான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிப்பதற்கு சமம் என்று அவர் குறிப்பிட்டார்.
மோதல் புதிதல்ல
2019ஆம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்ற சில மாதங்களிலேயே மாநில முதல்வருக்கும் அவருக்கும் இடையிலான உரசல்கள் வெளிப்பட்டன.
ஆளும் அரசு நிர்வாகம் தொடர்பான புகார்களை தெரிவிக்க பெட்டிகளை தமது மாளிகையில் நிறுவியது, அதிகாரிகளை அழைத்து தனியாக கூட்டங்களை போடுவது போன்ற விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொது நிகழ்வுகளில் தனித்தனியாக தோன்றும்போது இருவரும் பரஸ்பரம் விமர்சனங்களை வெளிப்படையாக வைத்தனர்.
மாநில முதல்வருடன் மோதல் தீவிரம் அடைந்த நிலையில், தமிழிசை ஏதாவது மாவட்டங்களுக்கு செல்லும்போது அவரை சம்பிரதாய முறைப்படி வரவேற்க மாவட்ட ஆட்சியர் கூட வருவதில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் புகார் தெரிவித்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தெலங்கானா சட்டப்பேரவையில் தமிழிசை ஆண்டின் முதலாவது கூட்ட நாளில் உரையாற்றினார். அதன் பிறகு அந்த பேரவையின் கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைக்க சட்டப்பேரவை பரிந்துரைக்க வேண்டும். அப்படியொரு நடைமுறை நடந்தால்தான் அடுத்த ஆண்டு கூட்டத்தொடரின் முதலாவது நாளில் ஆளுநர் உரையாற்ற முடியும்.
தமிழிசைக்கு அந்த வாய்ப்பை தராத வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை நிறைவுசெய்யாமல் அதன் தொடர்ச்சியான கூட்டத்தொடராகவே இதுநாள் வரை பேரவை நடவடிக்கையை ஆளும் கேசிஆர் அரசு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு, ஜூப்லி ஹில்ஸ் பாலியல் பலாத்கார வழக்கைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முறையற்ற திருப்பத்தை எடுத்தது. ஆளும் அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் சரிவர இல்லை என்று தமிழிசை குற்றம்சாட்டினார். அதற்கு கேசிஆரும் அவரை வெளிப்படையாக விமர்சித்த நடவடிக்கை சர்ச்சையானது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்