You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு: வாக்குப் பதிவு சதவீதத்திற்கும் தேர்தல் முடிவுக்கும் தொடர்பு இருக்கிறதா?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சுமார் 72 சதவீதம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாக்குப் பதிவு சதவீதத்திற்கும் தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா?
இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
காலையில் விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்குப் பதிவு நேரம் செல்லச் செல்ல மந்தமடைந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி சுமார் 40 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. குறிப்பாக, சென்னையில் இருந்த மூன்று தொகுதிகளிலும் 32 முதல் 35 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
மத்திய சென்னையில் வாக்குப் பதிவு குறைவு
மாலை 5 மணி நிலவரப்படி, 63 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்கே வாக்குப் பதிவு நடைபெறும் என்ற நிலையில், இந்த முறை தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மாலை 7 மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்களின்படி, மாநிலத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. துவக்கத்தில் இருந்தே வாக்குப் பதிவு சதவீதம் குறைவாக இருந்த சென்னையில் 67 சதவீதத்தைத் தாண்டி வாக்குகள் பதிவாகியிருந்தன.
வட சென்னையில் 69.26 சதவீதமும் தென் சென்னையில் 67.82 சதவீதமும் மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. மதுரையிலும் வாக்குப் பதிவு சதவீதம் சென்னையை ஒட்டியே, சுமார் 68.98 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
முந்தைய தேர்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம்
இந்திய பொதுத் தேர்தல்களில் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து வாக்குப் பதிவு சதவீதத்தை எடுத்துக்கொண்டால், 2004ஆம் ஆண்டில்தான் மிகக் குறைவாக இருந்தது. அதற்குப் பிறகான தேர்தல்களில் எப்போதுமே 72 சதவீதத்திற்கு அதிகமாகவே பதிவாகியிருக்கிறது. பொதுவாக தேசிய அளவிலான வாக்குப் பதிவு சதவீதத்தைவிட, தமிழ்நாட்டில் அதிகமாகவே வாக்குகள் பதிவாகி வருகின்றன.
கடந்த 2004ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,72,52,271. இதில் 2,87,32,954 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். வாக்குப் பதிவு சதவீதம் 60.81 ஆக இருந்தது. அந்த முறை தேசிய அளவிலான வாக்குப் பதிவு சதவீதம் 58.07 சதவீதமாக இருந்தது.
கடந்த 2009ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 4,16,20,460 ஆக இருந்தது. இதில் 3,03,90,960 பேர் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதம் 73.05 ஆக உயர்ந்தது. தேசிய அளவில் வாக்குப் பதிவு சதவீதம் 58.21ஆகவே இருந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 5,51,14,867 ஆக இருந்தது. இதில் 4,00,25,367 பேர் வாக்களித்தனர். மாநிலத்தில் வாக்குப் பதிவு சதவீதம் 73.74 ஆக இருந்தது. இந்த முறை தேசிய அளவிலான வாக்குப் பதிவு சதவீதம் வெகுவாக உயர்ந்து 66.44 சதவீதத்தைத் தொட்டது.
தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் 5,85,03,189 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 4,18,25,669 பேர் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதம் 72.46 ஆக இருந்தது. தேசிய அளவில் வாக்குப் பதிவு சதவீதம் 67.4ஆக இருந்தது.
இந்த முறையைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பல வாக்குச் சாவடிகளில் 6 மணிக்குள் வந்த வாக்காளர்கள், தொடர்ந்து வாக்கு செலுத்தி வருவதால், வாக்குப் பதிவு சதவீதம் இன்னமும் அதிகரிக்கலாம்.
'வெற்றி, தோல்வியுடன் சம்பந்தமில்லை'
பொதுவாகவே, வாக்குப் பதிவு அதிகமாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனப் பொதுவாகப் பேசப்பட்டாலும், வாக்குப் பதிவு சதவீதத்திற்கும் எந்தக் கட்சியின் வெற்றி - தோல்விக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
"பல தேர்தல்களைப் பார்த்துவிட்டோம். வாக்குப் பதிவு சதவீதத்திற்கும் வெற்றி - தோல்விகளுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. முதல் தேர்தலில் இருந்து தொடர்ந்து வாக்குப் பதிவு அதிகரித்துத்தான் வருகிறது. ஆனால், அதற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. 2004, 2014ஆம் ஆண்டின் வாக்குப் பதிவு சதவீதங்கள் இதற்கு உதாரணம்," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
ஆனால், சில தொகுதிகளில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?
"வாக்குப் பதிவு அதிகமாக உள்ள தொகுதிகளில் போட்டி மிகக் கடுமையாக இருப்பதாக அர்த்தம். இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் எப்படியாவது தங்கள் தரப்பு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பெருமளவில் வாக்களிக்கிறார்கள் என்று அர்த்தம். அவ்வளவுதான்" என்கிறார் ஷ்யாம்.
கடந்த 1952ல் நடந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு வெறும் 46 சதவீதமாக இருந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)