இஸ்லாமிய ஷரியா சட்டம்: தாலிபன் ஆட்சியில் ஆப்கன் பெண்கள் நிலைமை எப்படி உள்ளது?

பெண்கள் பூங்கா செல்வதற்குத் தடை விதித்த தாலிபன்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், யோகிதா லிமயே
    • பதவி, பிபிசி நியூஸ், காபூல்

மத்திய காபூலில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஃபெர்ரிஸ் சக்கரம், பம்பர் கார்கள், ஒரு சிறிய ரோலர் கோஸ்டர் ஆகியவற்றை அனுபவிக்கும்போது குழந்தைகளின் மகிழ்ச்சிக் கீச்சொலிகள் காற்றை நிரப்புகின்றன.

அவர்களுடைய தந்தைகள் அவர்களுடன் சவாரிகளில் அமர்கின்றனர், அவர்களை ரசிக்கின்றனர் அல்லது அவர்களைப் படமெடுக்கின்றனர். இருண்ட செய்திகளே வந்து கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் மகிழ்ச்சியின் அரிய தருணங்கள் இவை.

ஆனால் இங்குள்ள குழந்தைகளோடு நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் உரிமை இப்போது அவர்களின் தாய்மார்களுக்கு மறுக்கப்படுகிறது. கடும் கட்டுப்பாடுகளுடன் ஆட்சி மேற்கொள்ளும் தாலிபன்களால் காபூலில் இருக்கும் பூங்காக்களுக்குப் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் அங்கு பார்க்கும்போது, டஜன் கணக்கானவர்கள் குழந்தைகள் விளையாடுவதை ரசிக்கின்றனர். ஆனால், அதற்கு எதிரில் இருக்கும் ஓர் உணவகம் உள்ள தொலைவு வரை தான், நாங்கள் உட்பட பெண்கள் அனைவரும் பூங்காவை நெருங்கக்கூடிய தொலைவு.

தலைநகரத்திலுள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களுக்கும் பெண்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இந்த விதிகள் நாடு முழுக்க நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபன்கள் தங்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பதால், ஆப்கன் பெண்களும் சிறுமிகளும் அடுத்து என்ன நடக்கும் என்று அஞ்சுகிறார்கள்.

இந்த நகர்வுகள் நாட்டின் பெரும்பகுதியைப் பாதிக்காது என்று சிலர் கூறுகின்றனர். ஏனெனில் தற்போது பெரும்பான்மையான மக்களுக்கு மாலை நேரம் வெளியில் செல்வதென்பது ஒருவித ஆடம்பரமாக உள்ளது.

இருப்பினும், பல ஆப்கன் சிறுமிகளைப் பொறுத்தவரை, இது தாக்கத்தின் அளவைப் பற்றிய விஷயமில்லை. தாலிபன்களின் நோக்கத்தைப் பற்றிய ஒரு குறியீடாக இது உள்ளது.

“ஒவ்வொரு நாளும், ஆப்கனில் பெண்களாக நாங்கள் புதிய கட்டுப்பாடுகளோடு தான் கண் விழிக்கின்றோம்,” என்று ஒரு மாணவி கூறுகிறார். அவரைப் பாதுகாப்பதற்காக அவருடைய பெயரை வெளியிடவில்லை.

“நான் அதிர்ஷ்டசாலி. தாலிபன்கள் வருவதற்கு முன்பு நான் மேல்நிலைப் பள்ளியை முடித்துவிட்டேன். ஆனால், பல்கலைக்கழகங்கள் பெண்களுக்கு மூடப்படலாம் என்று அஞ்சுகிறேன். அது நடந்தால் என் கனவுகள் முடிந்துவிடும்.”

அவர் சமீபத்தில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்கேற்றார். தாலிபன்கள் சமீபத்தில் விதித்த கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, தான் படிக்க விரும்பும் பாடமான இதழியல் பிரிவு இனி பெண்களுக்குக் கிடைக்காது என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்.

பெண்கள் பூங்கா செல்வதற்குத் தடை விதித்த தாலிபன்

“அது எவ்வளவு கடினமானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. சிலநேரங்களில் சத்தமாகக் கத்த வேண்டும் போலிருக்கும்,” என்று அந்த மாணவி கூறும்போது, அவருடைய குரலில் விரக்தி தெரிந்தது.

ஆப்கனில் பெண்களுக்கான இடங்கள் குறைந்து வருவதால், சிலர் தாலிபன்களின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர்.

சமூக ஆர்வலர் லைலா பாசிம், பெண்களுக்கான நூலகத்தை சிலரோடு இணைந்து நிறுவியுள்ளார். பல்வேறு பாடங்களை, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான நூல்கள் அதில் உள்ளன.

“இதன்மூலம், ஆப்கன் பெண்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் தாலிபன்களுக்கு காட்ட விரும்புகிறோம். அதோடு குறிப்பாக கல்வியறிவை இழந்த பெண்களுக்கு நடுவில் புத்தகம் படிக்கும் கலாசாரத்தை விரிவுபடுத்துவது எங்கள் இரண்டாவது குறிக்கோள்,” என்று அவர் கூறுகிறார்.

அவர் தனது நாட்டை ஆட்சி செய்யும் ஆண்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவதில் உறுதியாக உள்ளார். கடந்த ஆண்டு முதல் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

பெண்கள் பூங்கா செல்வதற்குத் தடை விதித்த தாலிபன்

பட மூலாதாரம், AFP

“நாங்கள் மரணத்திற்கு அஞ்சவில்லை. தாலிபன்கள் எங்கள் குடும்பங்களை அச்சுறுத்துவார்கள் என்று அஞ்சவில்லை. இந்தச் சமூகத்திலிருந்து தவிர்க்கப்படுவதைக் கண்டே நாங்கள் அஞ்சுகிறோம்.

நாம் இழந்த அனைத்து சுதந்திரங்களையும் நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மற்ற நாடுகளின் மக்கள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்கிறார்கள். இங்கு நாங்கள் இன்னும் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுகிறோம்,” என்கிறார் பாசிம்.

சில வாரங்களுக்கு முன்பு, பெண்ணுரிமை ஆர்வலர் ஜரிஃபா யாகூபியுடன் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஐ.நாவிடம் இருந்தும் பிறரிடமிருந்தும் அவர்களை விடுவிக்கப் பலமுறை அழைப்புகள் விடுக்கப்பட்ட போதிலும், தாலிபன்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் கால்பந்து மைதானம் ஒன்றில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.

ஒவ்வொரு நகர்வின்போதும் தாலிபன்களின் தற்போதைய ஆட்சி 1990களில் இருந்த அவர்களுடைய ஆட்சியை ஒத்திருக்கிறது.

“தாலிபன்களின் தற்போதைய கொள்கைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலவே உள்ளன. 21ஆம் நூற்றாண்டில் ஏற்றுக்கொள்ள முடியாததை நாங்கள் அவர்களுக்குச் சொல்ல முயல்கிறோம்,” என்கிறார் லைலா பாசிம்.

பெண்கள் பூங்கா செல்வதற்குத் தடை விதித்த தாலிபன்
படக்குறிப்பு, லைலா பாசிம்

நூலகத்திலிருந்து சிறிது தொலைவில் தாலிபன் அறநெறி போலீஸ் அலுவலகமும் நல்லொழுக்க அமைச்சகமும் உள்ளது. அது ஆப்கன் பெண்கள் அனுமதிக்கப்படாத மற்றோர் இடம்.

“பெண்கள் தங்கள் புகார்களை வைப்பதற்கு வாயிலில் ஒரு பெட்டியை நாங்கள் வைத்துள்ளோம். எங்கள் இயக்குநர் பெண்களை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வாயிலுக்குச் செல்கிறார்,” என்று செய்தித் தொடர்பாளர் முகமது அகிஃப் முஹாஜர் கூறுகிறார்.

தாங்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் இஸ்லாமிய ஷரியா சட்டம் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, பூங்காக்களில் பெண்களைத் தடை செய்யும் முடிவை அவர் ஆதரிக்கிறார்.

“15 மாதங்களாக நாங்கள் எங்கள் சகோதரிகளுக்கு பூங்காகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பை வழங்கினோம். பெண்கள் ஹிஜாப் அணிவதைப் பின்பற்றச் சொன்னோம். ஆனால் சிலர் அதைச் செய்யவில்லை. பூங்காக்களுக்குச் செல்ல ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நாட்கள் இருந்தன. ஆனால், அது கடைபிடிக்கப்படவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை ஏன் ஒடுக்குகிறார்கள் எனக் கேட்டபோது, “ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்க உத்தரவுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் எவரும் கைது செய்யப்படுகிறார்கள். சில நாடுகளில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பெண்கள் பூங்கா செல்வதற்குத் தடை விதித்த தாலிபன்

நாங்கள் அப்படி செய்யவில்லை, ஆனால் தேசிய நலனுக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால் அவர்கள் அமைதியாக்கப்படுவார்கள்,” எனக் கூறுகிறார் முகமது அகிஃப் முஹாஜர்.

அவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும், பெண்கள் மீதான, அவர்களின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீதான தாலிபன்களின் நிலைப்பாடு கடினமானவை எனக் காட்டுகின்றன. கடந்த ஆண்டு அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து அவர்கள் சித்தரிக்க முயன்ற மிதமான பிம்பத்திற்கு இது முரணாக உள்ளது.

“ஒரு நாள் பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது எனக் கூறப்படலாம்,” என்று இளம் மாணவி கூறினார்.

சர்வதேச சமூகத்தின் மீதான ஏமாற்றம் ஆப்கானிஸ்தான் பெண்களிடையேவும் வெளிப்படுகிறது.

“உலகம் எங்களைப் புறக்கணித்துவிட்டது. உலகெங்கிலும் உள்ள சக்தி வாய்ந்த மக்கள் இரான் பெண்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஆதரவளிக்கவில்லை.

எங்களுக்கு நடப்பவை முதல் பக்க செய்தியாவதில்லை. நாங்கள் உடைந்துவிட்டதைப் போல, மறக்கப்பட்டுவிட்டதைப் போல உணர்கிறோம்,” என்கிறார் லைலா பாசிம்.

காணொளிக் குறிப்பு, யூடியூப் நேரலையில் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: