சென்னை: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபரை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வியாழக்கிழமையன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை தொடர்ந்து முயன்று வருகிறது. அதில் என்ன பிரச்னை?
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வியாழக்கிழமையன்று காலையில் சுமார் 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் அனுப்பப்பட்டது.
அந்த மின்னஞ்சலில், "உங்கள் பள்ளிக்கூடத்தில் 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை எந்தப் பாவமும் அறியாத நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரை எடுக்கக்கூடியவை. நேரம் குறைந்துகொண்டே வருகிறது.
உடனடியாக எல்லோரையும் கட்டடத்தில் இருந்து வெளியேற்றவும். இல்லாவிட்டால் இந்தத் துயரத்தைத் தவிர்க்க முடியாது. இது ஒன்றும் வேடிக்கையல்ல. உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
எல்லாக் குழந்தைகளின் உயிரும் இனி உங்கள் கையில்தான் இருக்கிறது. காவல்துறையை உடனடியாக அழைத்து, இந்தத் துயரத்தை நிறுத்தவும்," எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
முதலில் ஆறு பள்ளிகளுக்கு இந்தச் செய்தி அனுப்பப்பட்டது. அந்தந்தப் பள்ளிக்கூடங்களில் இருந்த மாணவர்களின் பெற்றோருக்கு செய்தி அனுப்பப்பட்டு, மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பிறகு காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து வந்து சோதனை நடத்தியது. இதற்குப் பிறகு மேலும் 7 பள்ளிகளுக்கும் இதேபோல மின்னஞ்சல் மிரட்டல் வந்தது. அங்கேயும் காவல்துறை சோதனைகளை நடத்தியது.
ஆனால், இந்தச் சோதனைகளில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருந்தபோதும், நகரம் முழுவதும் இந்தச் செய்தி பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுவொரு பொய்யான மிரட்டல் என்றும் யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை அறிவிப்பை வெளியிட்டபோதும், பதற்றம் நீங்கவில்லை. பிற்பகல் இரண்டு மணி வரை இந்தப் பதற்றம் நீடித்தது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தென் சென்னையின் கூடுதல் ஆணையர் பிரேம் சின்ஹா, ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்துதான் எல்லாப் பள்ளிகளுக்கும் மிரட்டல் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அந்த மின்னஞ்சலை யார் அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
வெடிகுண்டு மிரட்டலை அனுப்ப, [email protected] என்ற மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மிகச் சிக்கலான வழக்கு என்பதால், முழுமையான விவரங்களை இப்போது வெளியிட முடியாது எனக் கூறியிருக்கிறார்.
ப்ரோட்டோன் மின்னஞ்சல் சேவையைப் பொறுத்தவரை, முழுமையான என்க்ரிப்ஷனை (End to End encryption) பயன்படுத்தி வருகிறது. இதனால், இந்த மின்னஞ்சலை யார் அனுப்பினார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். ப்ரோட்டோன் மெயிலின் அலுவலகங்கள் மற்றும் சர்வர்கள் ஸ்விட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு தனியுரிமை தொடர்பான சட்டங்கள் கடுமையானவை என்பதால், மின்னஞ்சலைப் பயன்படுத்துவோர் குறித்த தகவலைப் பெற அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே கோரிக்கைகளை அனுப்ப வேண்டியிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
"ஜிமெயில், அவுட்லுக் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பினால், உடனடியாக அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்குக் காரணம், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலேயே தங்கள் அலுவலகங்களை வைத்திருக்கின்றன.
ஆகவே அவை இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. அவற்றிடம் இதுபோன்ற கோரிக்கையை முன்வைத்தால் 36 மணிநேரத்தில் தகவல்களைத் தந்துவிடுவார்கள். ஆனால், ப்ரோட்டோன் மெயில் போன்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல.
ஆகவே, இதுபோன்ற கோரிக்கைகளை அவர்கள் பரிசீலிக்கவே மாட்டார்கள். இதனால் இன்டர்போல் மூலமாகத்தான் தகவலைப் பெற வேண்டியிருக்கிறது. இதற்கு சற்றுத் தாமதமாகிறது. இன்டர்போல் மூலம் செல்லும்போது 15 - 20 நாட்களுக்குள் தகவல் கிடைத்துவிடும்," என்கிறார் சைபர் குற்றப்பிரிவு வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.
சென்னை நகர காவல்துறையின் இன்டர்போலுக்கான நோடல் அதிகாரி மூலம், இந்த மின்னஞ்சல் முகவரியின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டிருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












