“தாயை இழந்தேன், வாய்ப்பை இழந்தேன், எங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவது?” - ராஜீவ் காந்தியோடு பலியான காங்கிரஸ் பிரமுகர் மகன் கேள்வி

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளளை அடுத்து, 30ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளதை அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
மறுபக்கம், அந்த சம்பவத்தில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் கடுமையான விமர்சனத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த சமயத்தில், ஸ்ரீபெரும்புதூரில் தனு என்ற பெண் நடத்திய தற்கொலைப் படை மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில், மனித வெடிகுண்டு தனு, ராஜீவ் காந்தி அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என 16 பேர் இறந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் மோசமான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்திற்கு காரணம் விடுதலைப் புலிகள் என குற்றம்சாட்டப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர், 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்தனர். கடந்த மே மாதம், பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளித்தது. தற்போது மீதமுள்ள ஆறு பேரும் விடுதலை பெற்றுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலையுண்ட சமயத்தில் அந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு மகளிர் அணியைச் சேர்ந்த சந்தானி பேகமும் உயிரிழந்தார். அவரது மகன் அப்பாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் அந்தச் சம்பவத்தால் அனாதையாக வளர்ந்ததாகக் கூறுகின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அப்பாஸ், ''நாங்கள் மூவரும் சிறுவர்கள். என் அண்ணன்களுக்கு 12, 14 வயது, எனக்கு 10 வயது. எங்களின் தந்தை 1988இல் ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால், எங்கள் தாயார் மட்டும்தான் எங்களை வளர்த்தார். அன்று அந்த கூட்டத்தில் அவர் இறந்துபோவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரும் எங்களை புறம்தள்ளினர். எங்களுக்கு உதவ யாரும் இல்லை. அரசாங்கம் அப்போது, ரூ.40,000 இழப்பீடு கொடுத்ததாகச் சொல்கிறார்கள். யார் அதைப் பெற்றார்கள் என்றுகூட எங்களுக்கு தெரியாது. இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் அனாதையாக வளர்ந்தோம்,'' என்கிறார் அப்பாஸ்.

தற்போது சென்னை பாடி பகுதியில் கடிகார கடை ஒன்றை நடத்திவரும் அப்பாஸ், சிறுவயதில் பெற்றோரை இழந்து, படிப்பை இழந்து, முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறுகிறார். ''ஏழு பேரையும் விடுவித்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். எங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவார்கள். எங்களுக்காக யார் பேசுவார்கள்? அவர்கள் வீட்டுக்குச் செல்வார்கள், அவர்கள் குடும்பத்துடன் இருப்பார்கள், எங்களுக்கு நாங்கள் இழந்தவர்கள் மீண்டு வரப்போவதில்லை,''என்கிறார் அப்பாஸ்.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தபோது காவல் ஆய்வாளராக இருந்தவர் அனுசுயா எர்னஸ்ட். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற அவர், ராஜீவ் காந்தி கொலையான நேரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர். அவர் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''இப்போதும் என் முகத்தில் குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் உள்ளன. என் இரண்டு விரல்களை அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் இழந்தேன். இன்னும் என் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. எனக்கு என்ன நீதி கிடைத்துள்ளது? என்னைப் போல காயம் அடைந்தவர்கள், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு யார் நீதி வாங்கி தருவார்கள்?,''என கேள்வி எழுப்புகிறார்.

ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள், குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக பேசியதை பற்றி கேட்டபோது, ''அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்கள் நேரடியாக குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டனர். ஆனால் அவர்கள் மன்னித்துவிட்டனர். நாங்கள் தினமும் அந்த இழப்பின் சுவடுகளுடன் வாழ்கிறோம். எங்களுக்கு ஆதரவு தருபவர்கள் யாரும் இல்லை,''என்கிறார்.
மேலும், ''ஒரு (முன்னாள்) பிரதமரை கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றம் விடுதலை தந்தால், யாருக்குதான் தூக்குதண்டனை கொடுப்பார்கள்? இந்த தீர்ப்பை வைத்து, இனி பலரும் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்,''என்கிறார் அனுசுயா.
குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கும் குடும்பங்கள் நீதி கேட்பது குறித்து, ராஜீவ் காந்தி கொலையான சமயத்தில் சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் பகவான் சிங்கிடம் கேட்டபோது, ''இந்த கொலையை திட்டமிட்ட விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லை.
கொலையில் பலியான ராஜீவ் காந்தி குடும்பத்தினர் கூட, குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், கொலை வழக்கில் கைதானவர்கள் யாருக்கும் அந்த சம்பவம் நடக்கப்போகிறது என்று தெரியாது என்பது புலன்விசாரணையில் வெளியானது.
அதனால், அவர்களை விடுவித்துள்ளது என்பது, நம் நீதிமன்றத்தின் தன்மையை உணர்த்துகிறது. இழப்பை சந்தித்த குடும்பங்களுக்கு பெரிய வலி ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், அதற்காக எத்தனை ஆண்டுகள் தண்டனை தந்தாலும், அது ஈடாகாது, மன்னிப்பது சரியான முடிவுக்காக இருக்கும்''என்கிறார்.
மேலும், ''குற்றவாளிகளை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன், தனது குறிப்பில், பேரறிவாளன் தன்னிடம் தெரிவித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்யவில்லை என்றார். அதனால், இந்த வழக்கும், அதன் விசாரணையிலும் பல ஓட்டைகள் உள்ளன. மேலும், அதனைப் பற்றி விசாரிக்க தொடங்கபட்ட விசாரணை ஆணையமும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஏழு பேர் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும் குரல் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்,''என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








