பகலில் அலுவலக வேலை, இரவில் ஆட்டோ ஓட்டுநர், ஞாயிறு துணி விற்பனை: வறுமையை எதிர்த்து நடக்கும் ஒரு போராட்டம்

    • எழுதியவர், பார்கவ பரிக்
    • பதவி, பிபிசி
  • சோகன்லாலின் மூத்த மகன் கிஷோர் தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார்
  • தம்பி திலீப்பும் படித்துவிட்டு திருமணம் செய்துகொண்டு வேலைக்குச் செல்ல தொடங்கினார்.
  • வீட்டில் மூன்று பேர் சம்பாதித்து வருவதால், கடன் வாங்கி பாபுநகரில் வீடு வாங்கினார்.
  • சகோதரி திடீர் உடல்நலக்குறைவால் இறந்தார்
  • ஒன்றரை வயது மருமகள் நந்தினியை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது
  • இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவரது தந்தையின் ஆட்டோ விபத்துக்குள்ளானது
  • ஒரு எழுத்தராக 18,000 சம்பளம், ஆட்டோ ஓட்டி மாதம் 6 முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்

“நான்தான் வீட்டுக்கு மூத்தவன், கடன் வாங்கி சகோதரருக்கு கல்யாணம் செய்து வைத்தோம். பின்னர் என் சகோதரி இறந்துவிட்டார், என் தந்தை ஒரு விபத்தில் சிக்கினார். ஒன்றன் பின் ஒன்றாக அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்தன. நான் பகலில் எழுத்தராகப் பணியாற்றிவிட்டு இரவில் ஆட்டோ ஓட்டவும் தொடங்கினேன்.”

ஆமதாபாத்தின் பாபுநகர் பகுதியில் வசிக்கும் கிஷோர் பிரஜாபதியின் வார்த்தைகள் இவை.

கிஷோர் பிரஜாபதியின் தந்தை சோகன்லால் பிரஜாபதி, கேத்பிரம்மாவை பூர்விகமாக கொண்டவர். இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் வேலை தேடி ஆமதாபாத் வந்தார்.

சோகன்லாலுக்கு ஆமதாபாத்தில் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்காததால் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்தார். பிள்ளைகளைப் படிக்க வைத்து 2 மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

சோகன்லாலின் மூத்த மகன் கிஷோர் தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார்.

பேரிடர் சூழலுக்கு நடுவே

கிஷோர் பிபிசியிடம் பேசுகையில், “படித்து முடித்தவுடன் என் இளைய சகோதரர் திலீப்பும் திருமணம் செய்துகொண்டு வேலைக்கு செல்லத் தொடங்கினார். ஆமதாபாத்தில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். வீட்டில் மூன்று பேர் சம்பாதிப்பதால் நாங்கள் கடன் வாங்கி பாபுநகரில் வீடு வாங்கினோம்.

ஆனால் திடீரென துன்பம் எங்களைத் தாக்கியது. என் சகோதரி உடல்நலக் குறைவால் இறந்துபோனார். அவரது ஒன்றரை வயது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் என் தந்தையின் ஆட்டோ விபத்துக்குள்ளானது. முதலில் இறப்பு, பின்னர் உடல்நலக் குறைவு என வீட்டில் நிகழ்ந்ததால் பணம் கரையத் தொடங்கியது. தினசரி செலவை சமாளிப்பதே கஷ்டமாக மாறியது.”

தானும் தனது சகோதரரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறும் கிஷோர், கூடுதலாக விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தந்தையின் உடல்நலம் தேறிய பின்னர், கிஷோரும் திலீப்பும் ஒரு முடிவுக்கு வந்தனர். சகோதரர்கள் இருவரில் ஒருவரின் சம்பளத்தை வீடு மற்றும் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைப்பதற்கும் மற்றொருவரின் சம்பளத்தை வைத்து குடும்ப செலவை சமாளிப்பதற்கும் பயன்படுத்துவது என்று முடிவு செய்தனர்.

திலீப்புக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றதால், குடும்ப பொறுப்பை கிஷோர் ஏற்றுகொண்டார்.

நான் ஆட்டோ ஓட்டுவது வீட்டில் யாருக்கும் தெரியாது

“என் சம்பளம் 18,000 தான். அதில், குடும்ப செலவை பார்த்துக் கொள்வதோடு என் மகன்கள் அனிஷ், ஆயுஷ், மருமகள் நந்தினி ஆகியோரின் கல்வி செலவையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதற்கு ஒரு தீர்வு காண நினைத்தேன். கூடுதல் வருவாய்க்காக என் தந்தையைப் போலவே இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டுவது என்ற என் முடிவை மனைவி ஜோத்ஸ்னாவிடன் கூறி அனுமதி பெற்றேன்.

நான் ஆட்டோ ஓட்டுவது தெரிந்தால் என் குழந்தைகள், சகோதரர், பெற்றோர் ஆகியோர் அதிர்ச்சியடையக் கூடும். எனவே, யாருக்கும் தெரியாமல் இரவில் ஆட்டோ ஓட்டுவது என்று முடிவு செய்தோம்,” என்றார்.

கிஷோரின் மனைவி ஜோத்ஸ்னா பிபிசியிடம் பேசுகையில், “என் கணவர் இரவில் ஆட்டோ ஓட்டுகிறார் என்பது என் மாமனாருக்கு தெரிந்தால், உடல்நலம் சரியில்லாத இந்த நிலையிலும் அவர் வேலை செய்யத் தொடங்கிவிடுவார். எனவே, அவரிடம் இதுகுறித்துக் கூறவில்லை,” என்றார்.

“என் தந்தையின் உடல்நிலை சரியில்லை. இருந்தாலும் வீட்டில் பணத் தட்டுப்பாடு இருப்பது தெரிந்தால் அவர் ஆட்டோ ஓட்டத் தொடங்கிவிட்டார்,” என்று கிஷோர் தெரிவித்தார்.

வீட்டில் யாருக்கும் தெரியாமல் தனது கணவர் ஆட்டோ ஓட்டும் ரகசியம் குறித்துப் பேசிய ஜோத்ஸ்னா, “மாலையில் வீட்டிற்கு வந்ததும் என் கணவர் குழந்தைகளுடன் சில நேரம் விளையாடுவார். பின்னர் அவர்களுடன் இரவு உணவு சாப்பிடுவார். குழந்தைகளும், என் மாமனார், மாமியாரும் தூங்கிய பின்னர் இரவு 11 மணி அளவில் அவர் ஆட்டோ ஓட்டச் சென்றுவிடுவார். காலை 5 மணிக்குத் திரும்ப வீட்டுக்கு வருவார்,” என்று கூறினார்.

ஆட்டோ ஓட்டுவது மூலம் கிடைக்கும் இரண்டாவது வருமானத்தை போன்று மூன்றாவது வருமானம் குறித்தும் கிஷோர் சிந்திக்கத் தொடங்கினார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை கணவனும் மனைவியும் வெளியே செல்வதுபோல் சென்று ராணிப் பகுதியில் உள்ள சந்தையில் ஆடைகளை விற்கத் தொடங்கினர்.

“அதிகமாக மணிநகர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில்தான் ஆட்டோ ஓட்டுவேன். அப்போதுதான் பாபுநகர் பகுதியில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் பார்த்துகொள்ள முடியும்,” என்று கூறுகிறார் கிஷோர்.

“ஆட்டோ உரிமையாளர் ஒருவரிடம் இருந்து தினமும் 8 மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்து நான் ஆட்டோ ஓட்டுகிறேன். தினசரி வாடகையாக அவருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டும். ஆட்டோ ஓட்டுவது மூலம் மாதம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

துணி விற்பனை மூலம் 4 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறோம்

ராணிப் பகுதியின் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் துணி விற்பது குறித்துப் பேசிய அவர், “நான் ஒரு புதிய துணி சந்தையில் வேலை செய்கிறேன். அங்கு, எனக்குப் பழக்கமான மொத்த விற்பனையாளரிடம் இருந்து பெண்களுக்கான ஆயத்த ஆடைகளை சனிக்கிழமை இரவு வாங்கி வாடாஜில் உள்ள எனது நண்பரின் வீட்டில் வைத்து விடுவேன். துணி விற்பனை மூலம் மாதம் 4 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்,” என்றார்.

“கடவுள் சோதித்தாலும் எங்கள் வேலையை எங்கும் நிறுத்த மாட்டார். என் லட்சியத்தைப் பார்த்து, நான் கூடுதலாக இரண்டு பைசா சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வணிகர்கள் எந்த லாபமும் இல்லாமல் ஆடைகளை எனக்குக் கொடுக்கிறார்கள்.

நான் சிரமங்களுக்கு அஞ்சவில்லை, நேர்மையின்மைக்கு பயப்படுகிறேன். என் சம்பாத்தியத்தில் நேர்மையற்ற தன்மை கலக்கக்கூடாது என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்,” என்று கிஷோர்பாய் நம்பிக்கை தொனியில் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: