You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நான் தொட்டால் என் பாட்டியின் உடல் சபிக்கப்பட்டுவிடுமா?" - பாலின பேதத்தை கேள்வி கேட்கும் பெண்
- எழுதியவர், ஹர்ஷிதா சாரதா
- பதவி, பிபிசி & வுமன்ஸ் வெப் தளங்களுக்காக
என் பாட்டியின் மரணம் என்னை நிலைகுலைய வைத்தது. எங்கள் இருவருக்கும் இடையில் ஓர் அற்புதமான பந்தம் இருந்தது. இந்த உலகத்திலேயே நான்தான் சிறந்தவள், எல்லா விஷயத்திலும் மிகச் சரியானவள் என்ற எண்ணத்தை உருவாக்கியவர் என் பாட்டி.
நான் மிகவும் நேசித்த ஒருவரை பறிகொடுத்த துன்பம் என்பதைத் தவிர, அவரது மரணம் எனக்கு வேறொரு கொடுமையான பாடத்தையும் கற்றுக் கொடுத்தது. தாம் நேசிக்கும் மனிதர்களின் இறுதிச் சடங்குகளில் ஈடுபடும் விஷயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த விழிப்புணர்வு அவருக்கு அப்போதுதான் வந்தது.
இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி என் தந்தையைப் பெற்ற பாட்டி நிர்மலா தேவி தமது 95வது வயதில் மாரடைப்பால் காலமானார். நிபந்தனையில்லாமல் என்னைப் பாராட்டிக்கொண்டிருந்த ஒரு நபர் என் பாட்டி. மரணத்துக்கு முந்தைய மாலைப் பொழுதில்கூட நான் போட்ட தேனீரைப் பாராட்டிவிட்டு, என் சகோதரனைவிட நான் நன்றாக தேனீர் தயாரிப்பதாகக் கூறினார். எனக்கும் என் சகோதரனுக்கும் யார் நல்ல தேனீர் தயாரிப்பது என்பதில் போட்டி நிலவும்.
குடும்பம் முழுவதையும் அவர் நேசித்திருந்தாலும், என் மீது எப்போதும் அவருக்கு ஒரு சிறப்பான வாஞ்சை உண்டு. துல்லியமாக வட்டமாக இல்லாத என் ரொட்டியை, கொஞ்சம் உப்பு தூக்கலாகிவிட்ட பருப்புக் கூட்டை அவருக்குப் பிடிக்கும். அவ்வளவு ஏன் நான் தரும் ஒரு டம்ப்ளர் தண்ணீரைக்கூட அவர் பாராட்டிப் பேசுவார்.
மாரடைப்பு ஏற்பட்டு ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்து வீடு திரும்பினார். ஆனால், வீட்டுக்கு வந்த நான்கு நாட்களில் அவர் இறந்துவிட்டார்.
“பெண் நேயர்களுக்கான இதழியல் திட்டமான BBCShe-ன் ஒரு பகுதியாக வுமன்ஸ் வெப் – பிபிசி ஆகியவை இணைந்து இந்தக் கட்டுரையைத் தயாரித்துள்ளன
நான் டெல்லியில் படிக்கிறேன். பாட்டியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு ஜலந்தர் வந்தேன். மரணத் தருவாயில் இருக்கும்போது என் பாட்டிக்கு, தரையில் படுத்தபடி இறக்கவேண்டும் என்று ஓர் ஆசை.
அந்த ஆசையை நிறைவேற்ற அவரை தரையில் படுக்க வைப்பூஹு என்று என் தந்தை முடிவு செய்தார். அப்படி படுக்க வைக்கும்போது என்னை உதவி செய்யும்படி என் தந்தை அழைத்தார். அவர் கூறியபடி உதவி செய்ய முனைந்தபோது, என் பாட்டியைப் பார்த்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பெண் என் கையைப் பிடித்து பின்னால் இழுத்தார். நான் என் பாட்டியின் உடலைத் தொடக்கூடாது என்றும் நான் தொட்டால் அவரது உடல் சபிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார்.
அதைக் கேட்டு “எங்கள் இருவருக்கும் இடையில் நிலவும் அன்பின் காரணமாக, நான் தொட்டால் என் பாட்டி மகிழ்ச்சியடைவார்” என்று கூறி நான் கோபத்தில் கத்திவிட்டேன்.
அதன் பிறகு அழுதுகொண்டே நான் அந்த அறையைவிட்டு வெளியேறினேன். இதுபோன்ற ஆணாதிக்க சடங்குகளை எதிர்த்து சண்டை போடுவதற்கு அது உகந்த நேரமல்ல என்று நினைத்தேன்.
அந்த உதவியாளரின் கருத்துக்கு என் பெற்றோர் இருவரும் ஆட்சேபனை தெரிவித்தனர். மீண்டும் அந்த அறைக்கு வரும்படி பலமுறை அழைப்பு விடுத்தனர். ஆனால், அந்தப் பெண்ணின் சொல்லால் ஏற்பட்ட பாதகமான விளைவால் மீண்டும் அந்த அறைக்குள் வரும் மனநிலை எனக்கு வரவில்லை.
ஆனால், விஷயம் அங்கே முடியவில்லை. என் தந்தையும் வேறு சிலரும் என் பாட்டி படுத்திருந்த படுக்கை விரிப்பைப் பிடித்து படுக்கை விரிப்போடு அவரை கீழே இறக்க முயற்சி செய்தபோது, அந்தப் படுக்கை விரிப்பு கிழிந்துவிட்டது. அப்போது என்னிடம் வந்த அந்தப் பெண் பணியாளர், நான் கை வைத்ததால்தான் என் பாட்டியின் உடல் பாரமாகி படுக்கை விரிப்பு கிழிந்துவிட்டது என்று கூறினார்.
நான் கேட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் கை வைத்ததே என் பாட்டியின் அடுத்த ஜென்மத்தில் பாவமாக மாறும் என்று அவர் கூறினார். நான் வாயடைத்துப்போனேன்.
நடந்த நிகழ்வால் தடுமாறிப்போன நான், என்னைச் சரி செய்துகொண்டு, அந்தப் பெண் கூறியது தவறு என்றும் எனக்கும் என் பாட்டிக்கும் இடையிலிருந்த ஆழமான பந்தம் குறித்தும் எடுத்துக் கூறும் மன நிலை வரவில்லை.
மகள்களும் மன்களும் சரிசமமாக நடத்தப்படும் குடும்பத்தில் வளர்ந்தவள் நான். என்னுடைய பெற்றோர் இருவருமே தேவையான நேரத்தில் என்னையும் என் சகோதரனையும் ஆதரித்தே வந்துள்ளனர். என் பாட்டியும் எங்கள் இருவருக்குள் பாகுபாடு காட்டியதில்லை.
சம்பந்தமில்லாத மூன்றாவது நபர், நான் தொட்டால் என் பாட்டிக்குப் பாவம் என்று கூறியபோது என்னைச் சுற்றி என் குடும்பம் அமைத்துக் கொடுத்திருந்த பாதுகாப்புக் குமிழி உடைந்தது.
என்னை மிகவும் நேசித்த ஒருவரது மரணம் தந்த வேதனை மட்டுமல்லாமல், ஆணாதிக்க முறை உருவாக்கிய நியதி ஒன்றை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த துயரமும் அந்த நேரத்தில் ஒன்றாகச் சேர்ந்துகொண்டது.
நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே என்னைச் சுற்றி வலிமையான பெண்கள் இருந்தார்கள். என் அம்மாவும் தாய் வழி – தந்தை வழி பாட்டிகளும் எனக்கு ஊக்கமாக இருந்தார்கள். மிகச் சிறிய வயதில் திருமணம் செய்துகொண்ட என் தந்தையைப் பெற்ற பாட்டி, சிறு வயதிலேயே விதவையாகவும் ஆகிவிட்டார்.
மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி சுற்றி இருந்தவர்கள் சொன்னபோதும்கூட அவர் திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் படிக்க விரும்பினார். தொடர்ந்து படித்தார். அவரது கடின உழைப்பால் ஆசிரியரான அவர் பிறகு ஒரு பள்ளியின் முதல்வரானார்.
அவருக்கு குழந்தை ஏதும் இல்லை. ஆனால், தனது சகோதரியின் மகனான என் தந்தையை தனது சொந்தப் பிள்ளையைப் போலவே அவர் பாவித்து பாசம் காட்டினார். அவரை பெரிய பாட்டி என்று நாங்கள் எல்லோரும் அழைப்போம்.
எப்போதும் அவரது மகிழ்ச்சி ஓர் ஆணை சார்ந்து இருந்ததில்லை. தமது வாழ்வை தமது விருப்பப்படி வாழ்ந்த அவர். பெண்கள் வீட்டைவிட்டே வெளியே வரக்கூடாது என்று கூறப்பட்ட காலத்தில் வெளியில் சென்று வேலை செய்த பெண்ணாக இருந்தார்.
அவரது மரணம் பல கேள்விகளைக் கேட்பதற்கு என்னைத் தூண்டியது.
இறுதிச் சடங்குகளை நிறைவேற்றும்போது ஆண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஒரு பெண்ணியவாதியாக என் பாட்டி அவற்றை ஏற்றுக் கொண்டிருப்பாரா? அவர் மரணத்துக்கு முன்பே நான் அங்கிருந்த நிலையில் அவரை தொட்டது என்ன வகையில் தவறு?
மருத்துவமனையில் அவர் இருந்தபோது அருகில் இருந்து அவருக்கு நான் பணிவிடை செய்தபோது நான் பெண்ணா, ஆணா என்று யாரும் கேட்கவில்லை.
அவர் இறந்தவுடன் இதெல்லாம் எப்படி மாறிவிடும். அவரது மரணத்துக்கு முன்பாக அவருக்கு கங்கை நீர் புகட்ட வேண்டும் என்று என் பெற்றோருக்கு நினைவுபடுத்தி, பாட்டிக்கு நான் கங்கை நீர் புகட்டினேன்.
என் பாட்டியோடு நான் எந்த அளவுக்கு நெருக்கம் என்று தெரிந்த என் பெற்றோர், நான் செய்த எந்த செய்கையையும் தடுக்கவில்லை. ஆனால், மற்றவர்கள் எங்களைச் சூழ்ந்திருந்த நொடி எல்லாம் மாறிவிட்டது.
இப்போது எனக்கு வேறொரு நிகழ்வும் நினைவுக்கு வந்தது. என் தாய் வழிப் பாட்டி இறந்தபோது, அவர்கள் வீட்டுக்கு அருகே வசித்த ஒரு பெண் என்னையும் என்னுடைய பெரியம்மா பெண்களையும், சுடுகாட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியதோடு, வீட்டில் இருந்து வீட்டை கழுவித் தள்ளும்படி கூறினார்.
ஆனால், தாயும், என் அத்தையும் தலையிட்டு அந்தப் பெண்ணை எதிர்த்தனர். அத்துடன் நாங்கள் மூவரும் சுடுகாட்டுக்கு செல்லவும் செய்தோம். எங்கள் குடும்பத்தவர் இல்லாமல் போயிருந்தால் என் தாய் வழிப் பாட்டியின் இறுதிச் சடங்கை நாங்கள் பார்த்திருக்க மாட்டோம்.
பெற்றோரின் இறுதிச் சடங்கை மகன்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும் என்று நான் கேட்டபோது எனக்கு வெவ்வேறு பதில்கள் கிடைத்தன. அவை எதுவும் எனக்கு நிறைவைத் தரவில்லை. இறுதிச் சடங்கு செய்வது இருக்கட்டும், சில இடங்களில் பெண்கள் சுடுகாட்டுக்குள் செல்லவே அனுமதிக்கப்படுவதில்லை.
தங்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய யாராவது இருக்கவேண்டும் என்பதால்தான் பெண் குழந்தைகளைவிட பெற்றோர் ஆண் குழந்தையை விரும்புகிறார்களா? தான் உருவாக்கிய இரண்டு பாலினங்களில் கடவுள் உண்மையிலேயே பாகுபாடு காட்டுகிறதா?
தமது அன்பான ஒருவர் இறக்கும்போது அவர் இருந்த அறையில் ஒரு வெறுமை நிலவுவதை, அவர்கள் குரலைக் கேட்க முடியாமல் இருப்பதை, அவர்களது அன்பான தொடுதல் இல்லாமல் போவதை ஒருவர் உணர முடியும். என் பாட்டியை கடைசியாக ஒரு முறை தொட்டு, அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு இருந்தால், எனக்கு ஒரு விதமான முழுமையைத் தந்திருக்கும்.
அந்தக் கடைசி தருணத்தில் என் பாட்டி நினைவோடு இருந்திருந்தால், என்னைத் தொட விடாமல் தடுத்தவர்களை அவர் கடிந்து கொண்டிருப்பார் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
(தயாரிப்பு: குஷ்பூ சாந்து தொடர் தயாரிப்பு: திவ்யா ஆர்யா)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்