You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புத்தகக் கண்காட்சியில் பாகுபாடு - பதில் சொல்ல மறுத்த பபாசி
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் நடைபெறும் 46வது புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க இடம் கொடுக்காத புத்தக கண்காட்சி நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கடை அமைத்து பதிப்பாளர் ஒருவர் புத்தகத்தை விற்பனை செய்துள்ளார்.
புத்தக கண்காட்சியும், சர்ச்சைகளும்
சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் 300க்கும் அதிகமான பதிப்பாளர்கள் தங்களது புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர். மொத்தம் 980 கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்கு முன்பாகவே அதை நடத்தும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி(BAPASI) மீது சர்ச்சைகள் எழத் தொடங்கின.
புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க பெண் பதிப்பாளர்களுக்கும், மாற்று பாலினத்தவர்களுக்கும், தலித் பதிப்பாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வாய்ப்பு மறுக்கப்பட்ட பதிப்பாளர்கள் ஒன்றிணைந்து பபாசிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட பிறகு, சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன்மூலம் சென்னை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக மாற்றுப் பாலினத்தவர்கள் தொடங்கிய 'குயர் பதிப்பகம்' தனது புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.
ஆயினும், பபாசியின் உறுப்பினர்களாக இருக்கும் பிற பதிப்பகங்களை சேர்ந்த நபர்கள், குயர் பதிப்பகத்திற்கு ஒத்துழைப்பு வழங்காமல், பாகுபாடு காட்டுவதாக இந்தியாவின் முதல் திருநங்கை பொறியாளரான கிரேஸ் பானு டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
சாலையில் கடை போட்ட பதிப்பாளர்
சென்னை புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க பபாசி நிர்வாகத்திடம் அனுமதி கேட்ட சால்ட் பப்ளிகேசன்ஸ் பதிப்பாளர் நரன், கடைசி வரை அனுமதி அளிக்காத பபாசி நிர்வாகத்திற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் புத்தகக் கண்காட்சிக்கு வெளியே சாலையில் கடை போட்டு புத்தகங்களை விற்பனை செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பபாசிக்கு பல எழுத்தாளர்களும், வாசகர்களும் சமூக ஊடகங்கள் மூலமாக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சால்ட் பதிப்பகத்தை சேர்ந்த நரன், "பபாசி அமைப்பு ஜனநாயக முறைப்படி புத்தகக் கண்காட்சியை நடத்தவில்லை. பபாசியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடைக்காக முன்கூட்டியே பபாசியை தொடர்பு கொண்ட போது காலம் தாழ்த்திய அதன் நிர்வாகிகள், கடைசி நேரத்தில் கடை அமைக்க அனுமதி மறுத்து விட்டனர்," என்றார்.
பபாசியில் இருக்கும் நிர்வாகிகளும், ஆளுமை படைத்த உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் கடைகளை அமைக்கின்றனர். ஆனால் புதிய பதிப்பகங்களுக்கு அனுமதி வழங்க பபாசி நிர்வாகம் மறுக்கிறது. அதற்கான காரணத்தையும் முறையாக தெரிவிப்பது இல்லை. ஒரே பதிப்பகத்திற்கு வெவ்வேறு பெயர்களில் கடைகள் வழங்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டையும் நரன் முன்வைத்தார்.
பபாசி அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக புதிய உறுப்பினர்களை சேர்க்கவில்லை. அப்படி இருக்கும் போது உறுப்பினர்களுக்கு கடை அமைக்க முன்னுரிமை வழங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு 6 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதற்கான கணக்கை பபாசி நிர்வாகிகள் முறையாக வெளியிடுவதில்லை என்று நரன் கூறினார்.
"சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற எங்கள் நாவல்களுக்கு புத்தகக் கண்காட்சியில் இடமளிக்காமல், மக்கள் யுடியூபில் பார்க்கும் சமையல் குறிப்புகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதை கண்டித்து தான் பபாசிக்கு எதிராக எனது எதிர்ப்பை பதிவு செய்ய சாலையில் புத்தகங்களை விற்பனை செய்கிறேன்," என நரன் தெரிவித்தார்.
பதில் கூற மறுத்த பபாசி
சால்ட் பதிப்பகம் தொடர்பாக, பபாசியின் தலைவர் வைரவனிடம் பிபிசி தமிழ் பேசியது. கடை அமைக்க அனுமதி தராதது குறித்து பதிலளித்த அவர், "கடைகளை முன்கூட்டியே மற்ற பதிப்பங்களுக்கு ஒதுக்கீடு செய்து விட்டதால், சால்ட் பதிப்பகத்திற்கு இடம் அளிக்க முடியவில்லை. ஆனால் அதன் பதிப்பாளர் வேண்டுமென்றே பபாசிக்கு எதிராக பரப்புரை செய்து வருகிறார்," என்று தெரிவித்தார்.
பபாசியின் உறுப்பினர்களுக்கும், உறுப்பினர் இல்லாத பதிப்பாளர்களுக்கும் புத்தகக் கண்காட்சியில் எப்படி இடம் ஒதுக்கப்படுகிறது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து பபாசியின் தலைவரிடம் கேள்வி எழுப்பிய போது, இதற்கான பதிலை ஆர்.டி.ஐ. மூலம் தெரிந்து கொள்ளுமாறு கூறினார்.
தனியார் அமைப்பான பபாசி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என்று பிபிசி தமிழ் அவரிடம் கூறிய போது, "அதெல்லாம் எனக்கு தெரியாது. அரசின் துணை அமைப்பு தான் பபாசி," என்றார்.
இலக்கிய வளர்ச்சிக்கு தடை
பபாசி மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டு முன்வைப்பதாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்து இருந்த நிலையில், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் இடம் கிடைக்காத சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது.
பொன்னுலகம் பதிப்பகத்தை சேர்ந்த குணா பேசும் போது, "பபாசியின் உறுப்பினர்களுக்கு வழங்கியது போக மீதமிருக்கும் இடத்தில், உறுப்பினர் இல்லாத பதிப்பகங்களுக்கு பபாசி கண்காட்சி கடை ஒதுக்குகிறது. ஆனால் இந்த ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. அவர்களுக்கு விருப்பமானவர்கள், நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்படுகின்றன, " என்றார் அவர்.
தொடர்ந்து பேசும் போது, "பிரபல நாளிதழ் ஒன்றுக்கு சென்னை புத்தகக் கண்காட்சியில் 4 கடைகளை பபாசி ஒதுக்கி இருக்கிறது. அந்த பதிப்பகம் இதுவரை 27 புத்தகத்தை மட்டுமே பதிப்பித்து, நான்கு கடைகளிலும் ஒரே புத்தகத்தை விற்பனை செய்கிறது. ஆனால் எனது பதிப்பகம் 10 ஆண்டுகளில் 84 புத்தகங்களை பதிப்பித்தும், கடைக்கு அனுமதி வழங்க பபாசி மறுத்துவிட்டது. இப்போது நண்பர்களின் பதிப்பகம் மூலமாக புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளோம்," என்று குணா தெரிவித்தார்.
"கடந்த ஆட்சியின் போது அதிமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து புத்தகம் வெளியிட்ட பதிப்பகத்தை கடைசி நேரத்தில் கண்காட்சியில் இருந்து பபாசி துரத்தியது. இதை நானும், இன்னும் சில பதிப்பக உரிமையாளர்களும் சென்று கேள்வி எழுப்பியதன் காரணமாகவே இன்று கடை அமைக்க பபாசி எனக்கு அனுமதி மறுத்துள்ளது. இதை வாசகர்கள் பபாசியிடம் சென்று கேள்வி எழுப்பும் வரை, தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக தான் பபாசி நிர்வாகம் செயல்படும்," என குணா பேசினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்