You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காதலர் கொலை செய்யக்கூடிய நபரா? பெண்கள் தெரிந்துகொள்வது எப்படி?
- எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்.
- பதவி, பிபிசி தமிழுக்காக
காதல், திருமணம் போன்ற உறவுகளில் இணை கொலை செய்யப்படும் சம்பவங்கள் இந்திய சமூகத்தில் தொடர் கதையாகி வருகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூரில் 21 வயதான சத்யஸ்ரீ என்ற பெண் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் வைத்தே அவரது காதலனால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தையும் அந்தத் தொடர்கதையின் ஓர் அங்கமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஒருவருடன் காதல் அல்லது திருமண உறவில் இருக்கும்போது, அவர் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தான மனிதரா என்பதை என்னென்ன அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்க முடியும்? எப்போது சுதாரித்துக்கொள்ள வேண்டும்?
இதுகுறித்த புரிதல் இன்னும் அதிகமாகக் கிடைக்க வேண்டிய தேவை இந்திய சமூகத்தில் நிலவுகிறது.
அறிகுறிகளை முன்பே காட்டும் காதலன்
சத்யஸ்ரீ விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், அவரைக் கொலை செய்த இளைஞர் முன்பே அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
அன்றைய தினம் தனது மகளை யாரோ ஓர் இளைஞர் கத்தியால் குத்திவிட்டார் என்ற தகவலை அறிந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பம் விரைந்தது.
ஆனால், அவர்கள் உடற்கூராய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுமே நிலைமையை உணர்ந்த சத்யஸ்ரீயின் மாற்றுத்திறனாளி தந்தை அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
கல்லூரிக் காலத்தில் இருந்தே நரேந்திரனும் சத்யஸ்ரீயும் ஃபேஸ்புக் மூலம் நட்பாகிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், சமீபகாலமாக பேச்சைக் குறைத்துக்கொண்ட சத்யஸ்ரீயை அவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
அவரைக் கொல்லப்போவதாக நரேந்திரன் எச்சரித்ததாகவும் அதை சத்யஸ்ரீ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிய வந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அப்படியிருந்த சூழலில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற எச்சரிக்கைகளை பெண்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது ஆபத்தானது என எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.
கொலை செய்வதாக எச்சரிப்பதற்கும் முன்பே பல அறிகுறிகள் வெளிப்படுவதாகவும் அதைப் பெண்கள் முன்கூட்டியே உணர்ந்து சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
உயிரைப் பறிக்கும் உறவை எப்படி தெரிந்துகொள்வது ?
காதல் என்று வந்துவிட்டால் பெரும்பாலும் ஒருவரின் தீய பண்புகள் பெரிதாகத் தெரியாது. அதைக்கூட பாசிடிவ் ஆகவே பார்க்கும் மனப்போக்கு காதலர்களுக்கு வந்துவிடும்.
எடுத்துக்காட்டாக ஒருவர் “நீ எனக்கு மட்டும்தான்” எனக் கூறி உரிமை கொண்டாடுவதை காதலில் உள்ள ஆணோ, பெண்ணோ ரசிக்கின்றனர்.
இந்த உறவு நாட்கள் செல்லச் செல்ல “பொசசிவ்” ஆக மாறிவிடுவதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.
“யாரிடமேனும் பேசினால் சந்தேகப்படுவது, செல்போனை எடுத்து உளவு பார்ப்பது, கால் வெயிட்டிங் போகும்போது சந்தேகிப்பது போன்றவை ஆரம்பத்தில் காதலாகத் தெரிந்தாலும் பின்னாளில் அதுவே பெரிய மன அழுத்தமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது,” என்றார்.
டாக்சிக் உறவுகளை இரு வகைப்படுத்தலாம். ஒருவரைப் பணத்துக்காகவோ, உடல் தேவைகளுக்காகவோ பயன்படுத்திய பிறகு விட்டுச் செல்வது. மற்றொன்றில் பிரிந்துவிட்டதால் அவரது வாழ்வை சீரழித்துவிட வேண்டும் என்ற உணர்வு. இவை இரண்டுமே மோசமான உறவில் இருப்பதைக் குறிக்கும்," எனக் கூறுகிறார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.
எப்போது உஷாராக வேண்டும்?
உணர்வுரீதியாக துன்பப்படுத்தி வேடிக்கை பார்க்கும் இணை உடல்ரீதியாக துன்பப்படுத்தவும் துணியுமா என்பதை முன்கூட்டியே அறிய வேண்டும். அது ஒருவேளை இதுபோன்று கொலை வரை கொண்டு செல்லக்கூடும். அது காதலனாக இருந்தாலும், கணவராக இருந்தாலும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார் மருத்துவர் சித்ரா அரவிந்த்.
பெற்றோரிடம் கிடைக்காத அன்பையோ, பாசத்தையோ வேறு ஒருவரிடம் கண்டுவிட்டதாக எண்ணி பூரிப்படையும் பெண்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
“பாத்துப் போ, பத்திரமா ரீச் ஆனதும் டெக்ஸ்ட் பண்ணு, இருட்டாயிருச்சு இன்னும் வீட்டுக்குப் போகாம என்ன பண்ணுற?'
இப்படி உரிமையோடு திட்டுதல் மற்றும் ஆதரவான வார்த்தைகளில்தான் சில பெண்கள் எளிதில் சிக்குவதாகவும், அவர்களுக்கு அந்த உறவில் ஒருவேளை ஏதும் தப்பாக இருந்தால் வெளியே வரத் துணிச்சல் இருக்காது," என்றும் சொல்கின்றார்.
ஒருவேளை உடல் தேவைக்காக எனில் அது குறிப்பிட்ட சில மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்றும் கூறியுள்ளார் மன நல மருத்துவர் சித்ரா.
"காதலிக்கும் நபர் திருமணப் பேச்சு எடுத்தால் தட்டிக் கழிக்கும் நபராக இருந்தால் பெண்கள் எச்சரிக்கையாகப் பழக வேண்டும்.
பழகிய ஓரிரு மாதங்களில் தங்களை முழுக்க முழுக்க பாசிடிவ் ஆகவும், காதலித்தால் இவரைத்தான் காதலிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துபவராக இருந்தால் அவர் அதற்கெனவே காய்களை நகர்த்தி ஏதேனும் காரியம் சாதிக்க விரும்பும் நபராக இருக்கலாம்."
காதலில் நெருக்கம் இருக்கும் என்றாலும், காதலிக்கத் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே உடல் ரீதியாக உறவுகொள்ளும் அளவு நெருக்கம் காட்டும்போது அதில் பெண்கள் கவனமாக இருப்பது அவசியம் என அறிவுறுத்துகிறார் மருத்துவர் சித்ரா அரவிந்த்.
ஆக்ரோஷம் மிக்கவராக இருப்பவர்களிடம் காதல் உறவில் உள்ள பெண்கள் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படக் கூடும் என்பதை எதிர்பார்க்கலாம்.
காதலிக்கும்போதே அடிப்பது, தகாத வார்த்தைகளில் பேசுவது, சந்தேகப்படுவது போன்ற குணங்கள்தான் டாக்சிக் உறவுக்கான அறிகுறிகள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் மருத்துவர் சித்ரா அரவிந்த்.
'நீ இல்லையென்றால் உயிரை மாய்த்துக்கொள்வேன்' எனக் கூறுவதும் டாக்சிக் உறவுதான்
“நீ இல்லாவிட்டால் செத்துவிடுவேன்” அல்லது “என்னை விட்டுவிட்டு யார்கிட்டயாவது பேசினால் உன்னைக் கொன்றுவிடுவேன்.'
இத்தகைய வார்த்தைகள் உறவின் தொடக்கத்தில் இனிமையாகத் தெரிந்தாலும், எச்சரிக்கையாக வேண்டியதற்கான சமிக்ஞையாக இவற்றைப் பார்க்க வேண்டும் என்று மருத்துவர் சித்ரா அரவிந்த் வலியுறுத்துகிறார்.
"மனித வாழ்வின் இயல்புகளைப் புரிந்தவர்கள் இதைக் கூற மாட்டார்கள், ஒரு சில மனரீதியான பாதிப்புள்ளவர்களே இப்படிக் கூறுவார்கள் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகச் சொல்லியோ அல்லது அதற்காக முயன்றோ, ஒருவரை கட்டாயப்டுத்தி காதலை ஏற்கவோ, தொடரவோ வைத்தால் அவர்களைப் பெண்கள் கவனத்தோடு கையாள வேண்டும்.
காதல் என்பது தன்னையோ பிறரையோ காயப்படுத்தாமல் அன்பு செலுத்துவதே என்பதை முதலில் காதலிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”
காதலில் பக்குவம் எதைக் குறிக்கிறது?
யாரோருவர் தனது அன்றாடப் பணிகளை பாதிக்காமல் காதலிக்கிறாரோ அதுவே முதிர்ச்சியான அல்லது பக்குவமான காதல் என்று கூறியுள்ளார் மருத்துவர் சித்ரா அரவிந்த்.
உதாராணமாக "எந்த வேலையும் செல்லாமல் 24 மணிநேரமும் போனிலேயே இருவரும் பேசிக் கொண்டிருப்பது முதிர்ச்சியான காதல் இல்லை.
அவரவருக்கு என படிப்பு, பணி, குடும்பம், கடமை எனப் பலவும் உள்ளன. அவற்றையும் பார்ப்பதற்கான நேரம் தேவை என்பதைப் புரிந்துகொள்ளும் இணையாக இருந்தால் நல்லது," என்று விளக்குகிறார்.
பிரிவைக் கையாளுவது எப்படி?
ஒருவர் தன்னுடன் காதலையோ, திருமணத்தையோ அல்லது எந்த உறவையேனும் தொடர விருப்பமில்லை எனக் கூறிவிட்டுச் சென்றால் அதை ஏற்கும் பக்குவத்தை அடைந்தவர்கள் இதுபோன்று கொலை செய்யும் அளவு துணிய மாட்டார்கள் எனச் சுட்டிக்காட்டினார்.
அதோடு, “தனது முன்னாள் இணை வேறொரு வாழ்க்கைத் துணையையோ காதலையோ தேர்வு செய்தாலும்கூட அவரைக் கொல்லும் அளவு துணியாத நபரும், தனது வாழ்வின் கடமைகளை அடுத்தடுத்து பார்த்து சரியாகச் செய்யும் நபருமே பிரிவைக் கையாளத் தெரிந்துகொண்டவர்கள்,” எனவும் தெளிவுபடுத்தினார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்