You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி ராமர் கோவில்: வெளிநாட்டு நன்கொடை பெற முயற்சி ஏன்? இந்தியாவில் வசூல் எவ்வளவு?
- எழுதியவர், அனந்த் ஜனானே
- பதவி, பிபிசி செய்தியாளர், லக்லௌவில் இருந்து
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏராளமான நிதி செலவிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்றாலும் அதிகாரப்பூர்வமாக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலையும் அயோத்தி நகரத்தையும் தயார்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவில், கோவில் வளாகம் மட்டுமின்றி, கோடிக்கணக்கான பக்தர்களுக்கு ஏற்ற வகையில் அயோத்தி நகரை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டு நன்கொடை பெற முயற்சி ஏன்?
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எஃப்சிஆர்ஏவின் கீழ் நிதி வழங்குவது குறித்து கடந்த மே மாதம் முதல் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அயோத்தியில் இது தொடர்பாக கூறுகையில், “ஏராளமான இந்தியர்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். பல வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தங்கள் முன்னோர்களின் நிலத்துடன் தொடர்ந்து தொடர்பைப் பேணுகிறார்கள். நாங்களும் தீர்த்த அறக்கட்டளைக்கு கொஞ்சம் தொகையை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால், இந்தியாவில் சில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன.” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் எஃப்சிஆர்ஏவை தவறாக பயன்படுத்தியதாகவும் சம்பத் ராய் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் விதிகளைப் பின்பற்றி வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் ராம பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். எனவே, நாங்கள் எஃப்சிஆர்ஏவில் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளோம்” என்றார்.
இதுவரை எவ்வளவு நிதி வசூலிக்கப்பட்டுள்ளது?
அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா பிபிசியிடம் பேசுகையில்,
- கோவில் அறக்கட்டளையாக மாறி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன, இப்போது அறக்கட்டளை மூலம் எஃப்சிஆர்ஏ செயல்முறை முடிக்கப்பட்டுள்ளது. இனி அரசிடம் அனுமதி பெற வேண்டும், நவம்பர் அல்லது டிசம்பரில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வெளிநாடுகளிலும் பல இந்துக்கள் உள்ளனர், அவர்கள் நன்கொடை வழங்க தயாராக உள்ளனர். ஆனால் அவர்களால் இங்கு வரமுடியவில்லை என்பதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை. அப்படியிருக்கும்போது அவர்களால் எப்படி நன்கொடை அளிக்க முடியும்?
- கோவில் கட்டுவதற்கான நிதி எஃப்சிஆர்ஏ மூலம் வரலாம். அது ஒரு நன்கொடை, ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு உள்ளது, அரசாங்கம் தணிக்கை செய்கிறது.
- நாங்கள் பணத்தை ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பெயரில் மட்டுமே எடுத்துக்கொள்வோம், வேறு எந்த பெயரில் அல்ல.
தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலகத்தின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா, 392 தூண்கள் கொண்ட ராமர் கோவிலின் திட்டத்திற்கான செலவு மற்றும் அதற்கு செலவிடப்பட்ட பணம் பற்றி கூறுகிறார்..
- மார்ச் 2023 வரை அயோத்தியில் கோவில் கட்ட ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- ஜனவரி மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மார்ச் மாதம் முதல் ரூ.500 முதல் 600 கோடி வரை செலவிடப்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- கோவில் கட்டுமானத்தின் மொத்த திட்டச் செலவு 2000 கோடி ரூபாய்.
- பக்தர்கள் தினமும் நன்கொடை அளித்துவருகின்றனர். அந்தவகையில் 3 ஆண்டுகளில் ரூ.4500 முதல் 5000 கோடி வரை நன்கொடை கிடைத்துள்ளது.
- பெறப்பட்ட பணம் பொதுவாக வங்கிகளில் FD ஆக வைக்கப்படும். மேலும் செலவுகளுக்காக பணம் தனித்தனியாக சேமிக்கப்படும்.
- தற்போது கோவிலின் முதல் தளத்தில் பணிகள் நடந்து வருகின்றன. அதன் பிறகு இரண்டாவது தளம் கட்டப்பட்டு பின்னர் குவிமாடம் கட்டப்படும் என்பதால் இன்னும் நிறைய வேலைகள் மீதம் உள்ளன.
மத நடவடிக்கைகளுக்கு எஃப்சிஆர்ஏ கிடைக்குமா?
எஃப்சிஆர்ஏவைப் பெற்ற முதல் மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை வரை பெறலாம். 3 ஆண்டுகளுக்கு பிறகு, ஐந்தாண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படலாம், அதன் மூலம் எந்த நபரிடமிருந்தும் எவ்வளவு தொகையையும் நன்கொடையாக பெறலாம்.
யார் யாரெல்லாம் எஃப்சிஆர்ஏ மூலம் நிதியை பெறலாம், எந்தெந்த வழிகளில் பெறமுடியும் என்று உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி,
- ஒரு நபர் அல்லது அமைப்பு ஒரு திட்டவட்டமான கலாச்சார, பொருளாதார, கல்வி, மத அல்லது சமூகத் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
- மத்திய அரசிடம் இருந்து எஃப்சிஆர்ஏ பதிவு/முன் அனுமதி பெற வேண்டும்.
- டெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கணக்கை தொடங்குவதன் மூலம் மட்டுமே எஃப்சிஆர்ஏ-ஐ பெற முடியும்.
பாபர் மசூதிக்கு மாற்றாக பெறப்பட்ட நிலத்துடன் தொடர்புடைய அறக்கட்டளைக்கும் எஃப்சிஆர்ஏ உள்ளது
பாபர் மசூதிக்குப் பதிலாக அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் பெறப்பட்ட நிலத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
அங்கு, இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை, ஒரு மசூதி மற்றும் ஒரு மருத்துவமனை, ஒரு சமூக சமையல் கூடம் மற்றும் 1857 முதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அகமதுல்லா ஷாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஆகியவற்றைக் கட்டவுள்ளது.
ஆனால் இந்தத் திட்டத்திற்காக தற்போதுவரை ரூ.50 லட்சம் மட்டுமே தங்களிடம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் அதிகாரிகள் கூறுகின்றனர். இது அரசு அனுமதி, என்ஓசி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்
வரும் காலங்களில் இத்திட்டம் தொடர்பான கட்டுமானப் பணிகளை தொடங்க நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் அறக்கட்டளை கூறுகிறது.
இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹுசைன் சித்திக் பேசுகையில், “தன்னிப்பூரில் மருத்துவமனை, சமூக சமையல் கூடம் போன்ற தொண்டு பணிகளை செய்வோம் என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம், இது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக அனைத்து சட்டப் பணிகளையும் மேற்கொள்வோம். உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நிதியை பெறுவோம். இதற்காக நாங்கள் எஃப்சிஆர்ஏ கணக்கிற்கு விண்ணப்பித்திருந்தோம்.” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் ஒரு எஃப்சிஆர்ஏ கணக்கைத் தொடங்கியுள்ளோம், ஆனால் இதுவரை அந்தக் கணக்கில் எங்களுக்குப் பணம் வரவில்லை. தற்போது நாங்கள் யாரிடமும் நிதி கேட்கவில்லை, அதேபோலும் யாரும் எங்களுக்கு நிதி வழங்கவில்லை. எங்கள் அறக்கட்டளை மூன்று நிதியாண்டுகளை நிறைவு செய்த பிறகு , வெளிநாட்டில் இருந்து வரும் நிதிகளை வரம்பின்றி பெற அனுமதி கிடைக்கும். இதற்குப் பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு, எந்தவொரு சட்டப்பூர்வ நபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தும் எந்தத் தொகையையும் நாங்கள் பெற முடியும்” என்றார்.
2017 முதல் 2021 வரையில் 6,677 எஃப்சிஆர்ஏ ரத்து
மோதியின் ஆட்சியில் எஃப்சிஆர்ஏ விதிகள் கடுமையாக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2017 மற்றும் 2021 க்கு மத்தியில், 6,677 எஃப்சிஆர்ஏ பதிவு சான்றிதழ்களை ரத்து செய்ததாக அரசாங்கமே தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2, 2022 அன்று ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் எஃப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவலை அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ராஜீவ் காந்தி அறக்கட்டளை எஃப்சிஆர்ஏ விதிகளை மீறியதாகவும், அவர்களின் பதிவை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இப்போது ராஜீவ் காந்தி அறக்கட்டளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உரிமத்துக்கு பதிவு செய்ய முடியாது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உரிமம் ரத்து செய்யப்பட்ட 6,677 நிறுவனங்களில் 622 நிறுவனங்கள் ஆந்திராவையும், 734 மகாராஷ்டிராவையும், 755 தமிழ்நாட்டையும், 635 உத்தரபிரதேசத்தையும், 611 மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)