You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல்கலைக்கழகச் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை: தமிழக அரசுக்கு பின்னடைவா? இனி என்னவாகும்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டத்திருத்தங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால், தங்கள் தரப்பின் விரிவான வாதங்களைக் கேட்காமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுத் தரப்பு கூறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில ஆளுநரிடமிருந்து மாற்றி, அரசுக்கு வழங்கும் வகையில் பல பல்கலைக்கழகச் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தத் திருத்தங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிகளுக்குப் புறம்பானவை என்பதால், அவற்றைச் செல்லாது என அறிவிக்க வேண்டுமெனக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த குட்டி என்கிற கே. வெங்கடாசலபதி வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வின் நீதிபதிகளான ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் கே. லக்ஷ்மி நாராயணன் முன்பாக புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் தாம சேஷாத்ரி நாயுடு ஆஜரானார். தமிழ்நாடு அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமனும் தமிழக உயர் கல்வித் துறையின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சனும் ஆஜராகினர்.
விடுமுறைக் கால அமர்வில் விசாரிக்கப்பட்ட மனு
விசாரணையின் துவக்கத்தில், இந்த சட்டத் திருத்தங்களுக்கு தடை விதிக்கக்கோரும் மனுவை விடுமுறைக் கால அமர்வில் விசாரிக்கும் அளவுக்கு அவசரம் ஏதும் இல்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் தர வேண்டுமென்றும் கோரி தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து இந்த பொது நல மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி, இது தொடர்பாக விசாரிக்கப்பட்டுவரும் பிற வழக்குகளுடன் சேர்ந்து விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தவிர, உயர் கல்வித் துறைச் செயலர் சார்பில் மனு ஒன்றும் தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு தடைகோரும் மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது என்றும் இந்த வழக்கைத் தொடர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
வாதமும் எதிர்வாதமும்
இந்த வழக்கில் மனுதாரர், 50க்கும் மேற்பட்ட விஷயங்களின் அடிப்படையில் மாநில அரசின் சட்டத் திருத்தத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தாலும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள், பிற கல்வி சார்ந்த பணியார்களின் தகுதி குறித்த யுஜியின் விதி 7.3ஐ தமிழக அரசின் சட்டம் மீறுகிறது என்பதுதான் அடிப்படையான குற்றச்சாட்டு.
ஆனால், இந்தக் குறிப்பிட்ட விதி எண் 7.3 தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு அவை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்இருக்கின்றன, ஆகவே இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி பிற வழக்குகளுடன் விசாரிக்கச் செய்வதே சரியானதாக இருக்கும் என உயர்கல்வித் துறைச் செயலர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வழக்கை மாற்றக்கோரும் மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என மே 19ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர். கவய் முன்பாக தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வாதிட்டபோது, இப்படி மாற்றக்கோரும் மனு நிலுவையில் இருப்பதை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என வாய்மொழியாக உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியது. ஆகவே, உச்ச நீதிமன்றம் வழக்கை மாற்றக்கோரும் மனுவை விசாரித்து முடிக்கும்வரை இந்த மனுவை விசாரிக்கக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இப்படி வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் இந்தச் சட்டத்திருத்தங்களுக்கு இடைக்காலத் தடையைக் கோரும் மனு மீது வாதங்களை முன்வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேஷாத்ரி, "பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடமிருந்து பாதுகாக்கவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை துவங்கப்பட்டுவிட்டது. ஆகவே இந்த சட்டத்திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரினார்.
இதனை எதிர்த்து வாதிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர் பி.எஸ். ராமன், "தேடுதல் குழுவை நியமித்தது பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல. மானியக் குழுவின் விதிகளைவிட மாநில அரசின் சட்டங்களே மேலோங்கி நிற்கும். யூகங்களின் அடிப்படையில் சட்டங்களுக்குத் தடைவிதிக்கக்கூடாது. விரிவான வாதங்களை முன்வைக்க வேண்டியிருப்பதால் 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று கோரினார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "தமிழ்நாடு அரசின் சட்டங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணானவை" என்று வாதிட்டார்.
சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் வேந்தர்கள் (மாநில ஆளுநர்) வசம் இருந்து வந்தது. ஆனால், தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நிலவிய நிலையில், அந்த அதிகாரத்தை வேந்தர்களிடமிருந்து எடுத்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், இது தொடர்பாக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க காலக் கெடு நிர்ணயித்ததோடு, நிலுவையில் இருந்த சட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்தது. ஆனால், இப்படி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்துத்தான் கே. வெங்கடாசலபதி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடை தமிழ்நாடு அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படும் நிலையில், இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்திருக்கிறார்.
தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்பு
இந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்திருக்கும் திராவிடர் கழகம், இது கெட்ட எண்ணத்துடன் (malafide intention) வழங்கப்பட்ட தீர்ப்பு எனக் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, "இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல. குறிப்பிட்ட நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து, தடை வழங்கும் வகையில் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். மைக்கை ஆஃப் செய்துவிட்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நீதிபதிகளின் போக்கு கெட்ட எண்ணத்துடன் கூடியது. தமிழக அரசுக்கு சங்கடத்தை உருவாக்கும் நோக்கத்தோடு வழங்கப்பட்ட தீர்ப்பு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
வழக்கைத் தாக்கல் செய்த கே. வெங்கடாசலபதியிடம் கேட்டபோது, எந்த அரசியல் உள்நோக்கத்துடனும் தான் இந்த வழக்கைத் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
"இந்த வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசாணை போலி என்கிறார்கள். அது போலியானது அல்ல. அதன் அடிப்படையில்தான் துணைவேந்தர்களை தேடும் குழுக்களையே அரசு உருவாக்கியிருக்கிறது. போலியான அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கசெய்ய முடியுமா? நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இதைத்தவிர, வேறு எதையும் நான் பேச விரும்பவில்லை" என்று மட்டும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவசரப்பட்டுவிட்டது என்கிறார் மூத்த வழக்கறிஞரான கே.எல். விஜயன். "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படாமல் ஆளுநரிடம் நிலுவையில் இருந்த பல்வேறு சட்டங்களுக்கு 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை முன்வைத்துத்தான் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார். இந்த நிலையில், தங்கள் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதால் தமிழ்நாடு அரசு அவற்றை அரசிதழில் வெளியிட்டது.
வழக்கமாக நிறைவேற்றப்பட்டுவிட்ட ஒரு சட்டம் குறித்து உயர் நீதிமன்றம் விசாரிப்பதில் தவறில்லை. ஆனால், இப்படி ஒரு சட்டத்தை விசாரிக்கும்போது எதிர்த்தரப்பு தனது விரிவான வாதத்தை முன்வைக்க வாய்ப்பளித்திருக்க வேண்டும். அவசரஅவசரமாக அதற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கக்கூடாது என்பது எனது கருத்து. இதுபோல அவசரமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்குகளில், அந்தத் தடைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இந்த வழக்கிலும் மேல் முறையீட்டிற்குச் சென்றால் அதுபோல நடக்கவே வாய்ப்பு அதிகம்" என்கிறார் கே.எல். விஜயன்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு