கடுமையாக விமர்சித்த ஸ்டாலின் - குடியரசுத் தலைவரின் கேள்விகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாதிக்குமா?

கடுமையாக விமர்சித்த ஸ்டாலின் - குடியரசுத் தலைவரின் கேள்விகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாதிக்குமா?

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டு அனுப்பியுள்ள குறிப்பு தற்போது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட இந்தக் குறிப்பில், "மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?" என்பது உள்பட 14 கேள்விகளையும் முன்வைத்துள்ளார் குடியரசுத் தலைவர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில், குடியரசுத் தலைவர் கருத்து கேட்டு குறிப்பு அனுப்புவது அந்தத் தீர்ப்பை பாதிக்குமா? இந்த நகர்வு குறித்து தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

தமிழ்நாடு அரசின், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது 'சட்டவிரோதம்' என கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தெரிவித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

'இந்த தீர்ப்பு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி' என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தீர்ப்பு தொடர்பாக அப்போது குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்த தீர்ப்பு தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். நாம் எதை நோக்கி போகிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? குடியரசுத் தலைவருக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லையென்றால் அது சட்டமாகும். ஆக, சட்டம் இயற்றுவது, நிர்வாகம் செய்வது உள்ளிட்டவற்றையும் செய்யும் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த பொறுப்புக் கூறலும் கிடையாது, அவர்களுக்கு சட்டம் பொருந்தாது" என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு குறிப்பு அனுப்பியுள்ளார்.

முழு விவரம் காணொளியில்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு