இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சமூக ஊடகங்கள் பயன்படுத்த அனுமதி

தனுஷ்க குணதிலக்க

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆஸ்திரேலியாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

31 வயதான தனுஷ்க குணதிலக்க, சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் தனது பிணை மனு திருத்தத்திற்காக விண்ணப்பித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணைகளின் போதே, நீதிமன்றம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனுஷ்க குணதிலக்கவிற்கு நடந்தது என்ன?

உலக கோப்பை இருபதுக்கு இருபது போட்டிகளுக்காக 2022ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா நோக்கி பயணித்திருந்தது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யுவதியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 06ம் தேதி ஆஸ்திரேலிய போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ரோஸ் பேயிலிலுள்ள வீட்டில் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக, குறித்த யுவதி போலீஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இவ்வாறு யுவதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, சிட்னியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த தனுஷ்க குணதிலக்க அந்த நாட்டு போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை, கிரிக்கெட்

பட மூலாதாரம், DANUSHKA GUNATHILAKA'S/FB

யுவதியின் அனுமதியின்றி உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களின் கீழ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனுஷ்க குணதிலக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்பின்னர், தனுஷ்க குணதிலக்கவிற்கு கடும் நிபந்தனைகளில் பிணை வழங்கப்பட்டது.

டேட்டிங் செயலி உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதுடன், இரவு நேரத்தில் நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இலங்கை, கிரிக்கெட்

பட மூலாதாரம், DANUSHKA GUNATHILAKA'S/FB

அத்துடன், விசாரணைகளின் நிறைவு பெறும் வரை ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

எனினும், தனுஷ்க குணதிலக்க மீதான வழக்கு விசாரணைகள் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனுஷ்க குணலதிக்கவிற்கு இரவு நேரத்தில் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன், வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தவும் அப்போது அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகமான தனுஷ்க குணதிலக்க, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 8 டெஸ்ட் போட்டிகளிலும், 47 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 46 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: